பெங்களூரு விமான நிலையத்தில் தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் கைது.
துபாயிலிருந்து 14.8 கிலோ தங்க நகைகளைக் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த ரன்யா ராவ் ( வயது 32) கன்னடம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா' திரைப்படத்தில் நடித்துள்ளார். நேற்று முன் தினம் இரவு நடிகை ரன்யா ராவ் துபாயிலிருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தார். அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான தங்க நகைகளை அணிந்திருந்தார். அவரது உடைமைகளைப் பரிசோதித்த போது 25 தங்கக் கட்டிகளும் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அலுவலர்கள், அவரிடம் விசாரணை நடத்தினர்.
கர்நாடக மாநிலத்தின் காவல் துறையில் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அலுவலரின் மகள் எனவும், பெங்களூரு மாநகர காவல் துறையினர் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் எனவும் ரன்யா ராவ் கூறினார். சந்தேகமடைந்த அலுவலர்கள், அவரைப் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகத்தின் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் ரன்யா ராவ் கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய்க்கு பயணம் செய்தது தெரிந்தது. ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தி வந்திருப்பதாக அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து
சட்ட விரோதமாக தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் மீது அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர். அவரிடமிருந்த 14.8 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். அவரை நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 நாள் காவலில் எடுத்தனர்.
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கின் பின்னணியில் முக்கிய நபர்கள் சிலர் இருக்கலாம் என வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரக அலுவலர்கள் சந்தேகிக்கின்றனர். அந்தக் கும்பல், அவரை தங்கம் கடத்த குருவியாகப் பயன்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் அலுவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர்.
கருத்துகள்