கல் உடைக்கும் கிரஷர் விபத்து வழக்கில் ஸ்ரீ ரங்கம் திமுக எம் எல் ஏ பழனியாண்டி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
கல் உடைக்கும் கிரஷர் விபத்து வழக்கில் ஸ்ரீ ரங்கம் திமுக எம் எல் ஏ பழனியாண்டி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினராக தற்போதுள்ளவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமாக கரூரில் உள்ள கல் உடைக்கும் குவாரியில், 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், வெடி வைத்து கற்களை வெட்டி எடுத்த போது, வெடி வெடித்து பாலசுப்பிரமணியன் என்கிற தொழிலாளி உயிரிழந்தார். சட்ட மன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குச் சொந்தமான குவாரியில் திருச்சிராப்பள்ளி தொழில் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் மேற்கொண்ட ஆய்வில், சட்ட மன்ற உறுப்பினருக்குச் சொந்தமான கல் குவாரியில், பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளதாககா கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பழனியாண்டிக்கு எதிராக கரூர் மாவட்ட தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திருச்சிராப்பள்ளி தொழில் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கரூர் மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வழக்கிலிருந்து திமுக சட்ட மன்ற உறுப்பினர் பழனியாண்டியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அதை கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது. கரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் கரூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆகியவை வழங்கிய இந்தத் தீர்ப்புகளை ரத்து செய்யக் கோரி திருச்சிராப்பள்ளி தொழில் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.வேல்முருகன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, "ஆலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாததால் தான் தொழிலாளி உயிரிழந்தார் என்பது சக தொழிலாளர்களின் வாக்குமூலத்திலிருந்து தெளிவாகிறது. எனவே, கல் குவாரி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த வழக்கிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர் பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும், வழக்கை மீண்டும் விசாரித்து சட்டப்படி தீர்ப்பளிக்கும் படி, கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி பி.வேல்முருகன், மறு ஆய்வு மனுவை முடித்து வைத்தார்.
கருத்துகள்