காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டவருக்கு 25 வருடங்கள் கழித்து நீதி
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல்நிலையத்தில் கடந்த 17-9-1999 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்த உப்பளத் தொழிலாளி வின்சென்ட் என்பவரை விசாரணை என அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் தாக்கியதில் 18-9-1999-ஆம் நாளன்று வின்சென்ட் உயிரிழந்ததாகக் கூறி அடித்துக் கொன்ற வழக்கில் இதுகுறித்து உயிரிழந்த வின்சென்டின் மனைவி கிருஷ்ணம்மாள், அவரது கணவரை காவல் துறை பணியாளர்கள் அடித்துக் கொலை செய்துவிட்டதாக தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அது குறித்து தூத்துக்குடி கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று, காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், காவலர்கள் ஜெயசேகரன், ஜோசப் ராஜ், பிச்சையா, செல்லத்துரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, ரத்தினசாமி, பாலசுப்பிரமணியன், காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம்சாட்டப்பட்ட இராமகிருஷ்ணன், சோமசுந்தரம், ஜெயசேகரன், பிச்சையா, வீரபாகு, ஜோசப்ராஜ், செல்லத்துரை, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய்.10 ஆயிரம் அபராதமும் விதித்து ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய
ஓய்வு பெற்ற காவலர்கள் சிவசுப்பிரமணியன், ரத்தினசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் தற்போது ஸ்ரீவைகுண்டம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக உள்ளார். விசாரணை முடிவில் தூத்துக்குடி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் 1-ல் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது,
வழக்கில் தண்டனை பெற்றவர்களின் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இதில் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மனைவி, மகள்கள், பேரன்கள், பேத்திகள் என பலரும் தண்டனை அறவிப்பை கேட்டதும் கதறி அழுதனர். காவல்துறைத் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் உட்பட,
9 குற்றவாளிகள் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நேர்மையும் சத்தியமும் தவறினால் தண்டனை நிச்சயம். ஜனநாயக நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானதே. இதை உணர்ந்த யாரும் விதிமுறைகள் மீறல்கள் செய்து தவறுகள் செய்ய மாட்டார்கள்.
கருத்துகள்