சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் காணாமல் போனது குறித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,
'தமிழ்நாட்டில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான, 41 சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் காணாமல் போய் விட்டது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து, இந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான, திருடப்பட்ட கோப்புகளை மீட்டு, இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு அதை சரிவரப் பின்பற்றவில்லை எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு, 'காணாமல் போன முதல் தகவல் அறிக்கைகளில், 11 முதல் தகவல் அறிக்கைகள் மட்டும் இதுவரை மீட்கப்படவில்லை. அதற்கு பதிலாக மீண்டும் புதிதாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது' என, தெரிவித்தது.
அதையடுத்து, 'இந்த விவகாரத்தில், ஒரு வார காலத்திற்குள் விசாரணை அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த விசாரணையை மேற்பார்வை செய்வதற்காக, மூத்த ஐ.பி.எஸ்., உயர் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். அது குறித்த அறிக்கையை பிரமாணப் பத்திரமாக அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும்' என, முந்தைய விசாரணையின் போது நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
கருத்துகள்