டாஸ்மாக் ஊழல் மோசடி வழக்கை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன்?' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் :
டாஸ்மாக் விவகாரம் குறித்து சட்டசபையில் பேச வேண்டும். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று அரசு சொல்வது ஏன்? டாஸ்மாக் அரசு சார்ந்த நிறுவனம் என்பதால் தான் கேள்வி கேட்கிறோம்.
டாஸ்மாக்கில் ரூபாய்.ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது என அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர்ந்த போது, நாங்கள் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டுமென்று கேட்டோமா? கச்சத்தீவு யார் ஆட்சியில் தாரை வார்க்கப்பட்டது?கச்சத்தீவு தி.மு.க., ஆட்சியில் தாரை வார்க்கப்பட்ட, அதை முதல்வர் மறைக்க பார்க்கிறார். கடந்த 4 ஆண்டுகளாக மீனவர்கள் பிரச்னைகளை சந்திக்கவில்லையா? கடந்த 4 ஆண்டுகளாக மீனவர்கள் பிரச்னைகளை சந்திக்கவில்லையா? எதிர்க்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்துப் பேச அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கிறார்கள். டாஸ்மாக் விவகாரத்தில் தி.மு.க., அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. நமது மாநிலத்தில் வழக்கு நடந்தால் தி.மு.க., செய்த தவறு ஊடகங்களில் வெளியாகும் என அச்சம் எனக் கூறினார்.
இவ்வளவு கேள்வி கேட்கிறீர்களே. இன்றைய தினம் அமைச்சர் நேரு மற்றும் சகோதரர் சார்ந்த நிறுவனங்களில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து ஒரு கேள்வியாவது கேட்குறீங்களா, தி.மு.க.,வை சார்ந்த எந்த நிறுவனத்திலாவது இப்படி நடந்த சம்பவம் குறித்து ஒரு கேள்வியாவது, இதுவரைக்கும் கேட்டு இருக்கீங்களா?
நான் பலமுறை உங்கள் முன் தோன்றி, ஊடகத்திற்கும், பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்து இருக்கேன். ஒருமுறை கூட தி.மு.க., பற்றி கேள்வி கேட்க மறுக்கிறீர்கள். தி.மு.க., தலைவரிடம் போய் கூட கேள்வி கேட்க மறுக்கிறீர்கள்.
இன்றைக்கு முதல்வரிடம் போய் கூட கேட்க மறுக்கிறீர்கள். துணை முதல்வரிடமும் கேட்க மறுக்கிறீர்கள். நாட்டு மக்களின் பிரச்னைகள் குறித்து, எந்தக் கேள்வி கேட்டாலும் நான் பதில் தர தயார் எனக் கூறினார். இந்த நிலையில் அரசியல் அறத்தை அடகு வைத்துவிட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் எடப்பாடி கே பழனிசாமி என அமைச்சர் ரகுபதி விமர்சனம்:-.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; யார் அந்தத் தியாகி? என்ற அதிமுகவின் முனை மழுங்கிய கேள்விக்கு ‘’நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள் தான் அந்த தியாகிகள்’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், நொந்து போன எதிர்க் கட்சித் தலைவர் வீராவேசமாகக் கருத்துச் சொல்லியிருக்கிறார். தியாகியை விடுங்கள், துரோகியைத் தெரியுமா? ’தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?’ எனக் கேட்டால் அரசியல் தெரியாத ஆறாம் வகுப்பு மாணவன் கூட எடப்பாடி கே.பழனிசாமியை கை காட்டுவான். அரசியல் அறத்தை அடகு வைத்து விட்டு, துரோகங்களை மட்டுமே செய்து முன்னேறியவர் எடப்பாடி கே பழனிசாமி. மூச்சுக்கு 300 முறை அம்மா மந்திரம் படிப்பார்; ஜெயலலிதா அருகில் கூனி குறுகி நிற்பார்; அம்மையார் ஜெயலலிதாவின் கார் டயரை தொட்டு வணங்குவார்; ஆனால், அந்த அம்மாவுக்கு விழுந்த வாக்குகளால் தான் தான் முதலமைச்சராக வந்து அமர்ந்திருக்கிறோம் என்பதை மறந்து, அம்மையார் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி கே.பழனிசாமி. ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிரான பாஜகவின் பாதம் தாங்கியாக மாறினார் எடப்பாடி கே. பழனிசாமி. தவழ்ந்து, ஊர்ந்து சென்று நாடகமாடி ஆட்சியைப் பிடித்த பிறகு, சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி கே. பழனிசாமி. திரையில் துரோகத்திற்குக் கட்டப்பா என்றால், தரையில் துரோகம் எடப்பாடி கே பழனிசாமி தானே. சுயநலத்துக்காக எடப்பாடி பழனிச்சாமி எந்த எல்லைக்கும் செல்வார்? எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிகள் ஓ.பன்னீர்செல்வமும் T.T.V. தினகரனும் தான்
உண்மையில் எடப்பாடி கே. பழனிச்சாமியின் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள் தான் அந்தத் தியாகிகள். கடந்த 2 ஆண்டுகளாக ’’பாஜகவுடன் கூட்டணி கிடையாது’’ என்று சத்தியம் செய்து வந்த எடப்பாடி கே பழனிசாமி, இன்று டெல்லி மேலிடத்தின் மிரட்டலுக்குப் பயந்து, சிறைக்கு அஞ்சி, தாங்கள் அடித்த கொள்ளைப் பணத்தைப் பாதுகாக்க மீண்டும் பாஜக கூட்டணிக்குத் தயாராகி விட்டார். அவரும் அவருடைய அடிவருடிகளும் பாஜகவின் பிரமுகர்களை முறை போட்டுப் போய் பார்த்து விட்டு வருகிறார்கள். அந்த வகையில் எடப்பாடி கே. பழனிச்சாமியின் வார்த்தையை நம்பி ஏமாற்றம் அடைந்த அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனுமே தியாகிகள் தான்! அவர்களுக்கும் எடப்பாடி கே பழனிச்சாமி துரோகி தான்.பாஜகவுடன் இதுகாலம் வரையில் இருந்த கள்ளக்கூட்டணி, கரம் பிடிக்கும் கூட்டணியாக மாறப் போவதால், ரத்தத்தின் ரத்தங்களும் மக்களும் நாக்கை பிடுங்கும் வகையில் கேள்வி கேட்பார்கள். அதை மடைமாற்ற திமுக அரசு மீது வதந்திகளை எடப்பாடி கே பழனிசாமி பரப்பி வருகிறார்; பாஜகவின் தயவில் அரசியல் வண்டியை ஓட்ட நினைக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி. தனக்கு முதுகெலும்பு இருப்பதே, பாஜகவிற்கு வளைந்து கொடுத்து அடிமை சேவகம் செய்வதற்குத்தான் என ஒன்றிய அரசின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் பாஜகவின் பண்ணையடிமைதான் எடப்பாடி கே பழனிசாமி. தனது டெல்லி எஜமானர்களின் ஏவல் படையான அமலாக்கத்துறை தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்திய ஒரு முகாந்திரமற்ற சோதனையை வைத்துக் கொண்டு, அபத்தமான கேள்வியோடு தனது கோமாளித்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி.யார் அந்த சார்? என்ற புரளி நாடகம் அம்பலப்பட்ட பிறகு வேறு ஏதேனும் கிடைக்காதா என்று திணறிக் கொண்டிருக்கிறார். கள்ளக் கூட்டணியை உறுதி செய்ய டெல்லியில் அமித்ஷாவை பதுங்கிப் பதுங்கி, கார்கள் மாறி மாறி சென்று சந்தித்த கோழை எடப்பாடி கே பழனிசாமி, தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பற்றிப் பேசத் திராணியிருக்கிறதா? தன் மீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு சிபிஐ விசாரணை வேண்டாம் என நீதிமன்றத்திற்கு ஓடிப் போய் தடையாணை வாங்கிய பயந்தாங்கொள்ளி எடப்பாடி கே பழனிசாமி பேசுவது அத்தனையும் கேலிக்கூத்துகள்தான். தமிழ்நாட்டுக்கு நிதி தராமல் துரோகம், இந்தியைத் திணித்து துரோகம், தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து துரோகம் என பாஜக வரிசையாக துரோகங்களைச் செய்து சதித்திட்டம் தீட்டி வருகிறது. கொஞ்சம் கூட வெட்கமின்றி, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி துளியும் யோசிக்காமல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி கே பழனிச்சாமி தமிழ்நாட்டுக்கே துரோகி. இன்றைக்குத் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாத்து, நாட்டின் கூட்டாட்சி கோட்பாட்டை உயர்த்திப்பிடித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சரை இன்று உலக அளவில் ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. அதைப் பொறுக்க முடியாமல், தனது பதவி நலனுக்காக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ’பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி டெல்லி எஜமானர்களின் ஆணையின் படி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகமும் மக்களிடம் அம்பலப்பட்டு பழனிசாமி அவமானப்படுவது உறுதி" என்று கூறினார்.
கருத்துகள்