CBI விசாரணை கேட்டு பாமக நிறுவனர் கோரிக்கை இளைஞர் மரண வழக்கு CBCID க்கு மாற்றம்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது தொடர்பாக
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, எரியூர் காவல் எல்லைக்குட்பட்ட, நெருப்பூர் வனப்பகுதியில், 01.03.2025 அன்று, ஒரு யானையின் சிதைந்து கருகிய சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த யானை அதன் தந்தங்களுக்காக சில அடையாளம் தெரியாத குற்றவாளிகளால் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக, வனத்துறையால் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், 17.03.2025 அன்று, கொங்கரபட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் (28) S/0 கோவிந்தராஜ் என்பவரை, வனத்துறை அலுவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தியதாகவும், இருப்பினும் செந்தில் கைவிலங்குகளுடன் காட்டுக்குள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நான்கு குற்றவாளிகளையும் 19.03.2025 அன்று வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர்.
சந்தேக நபர் செந்தில் வனத்துறை அலுவலர்களைத் தாக்கி கைவிலங்குகளுடன் தப்பிச் சென்றதாக பென்னாகரம் ரேஞ்ச் வனவர் அளித்த புகாரின் அடிப்படையில் தர்மபுரி மாவட்டம், ஏரியூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு குற்ற எண்.45/2025 ல் 19.03.2025 அன்று ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 03.04.2025 அன்று கொங்கரப்பட்டி கிராமத்தில் உள்ள சரக்காடு வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிரேதம் இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக பென்னாகரம் தாலுகா, சுஞ்சல்நத்தம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், ஏரியூர் காவல் நிலைய குற்ற எண்.55/2025 இல் 04.04.2025 அன்று சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, இறந்தவரின் உறவினர்கள் அந்த பிரேதம் செந்திலுடையதுதான் என அடையாளம் காட்டினர். மேலும் செந்திலின் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து சந்தேகம் இருப்பதாக இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
எனவே, பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மேலே சொன்ன இரண்டு வழக்குகளும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (CBCID) க்கு மேல் விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளன. என காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்