சிலை கடத்தல் வழக்கில் கைதாகியிருந்த குற்றவாளி தீனதயாளனைத் தப்பிக்க வைக்க, தங்கள் மீது பொன் மாணிக்கவேல் வழக்குப்பதிவு செய்ததாகவும், அவர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் காதர் பாட்ஷா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முகாந்திரமிருக்கும் நிலையில், பொன் மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டை சி.பி.ஐ., விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டதன் அடிப்படையில், சி.பி.ஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சி.பி.ஐ., விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அதை எதிர்த்து, காதர் பாட்ஷா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீது ஏற்கனவே விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விளக்கமளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது இந்த நிலையில் .இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பொன் மாணிக்கவேல் சிபிஐ பதிவு செய்த வழக்கிற்கு எதிராக, வழக்கை திசைதிருப்பும் வகையில் செய்தி ஊடகங்களில் பேசி வருகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவும் வாய்ப்பிருப்பதால், அவரது கடவுச் சீட்டு அல்லது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
காதர் பாட்ஷா தரப்பில், ’பொன் மாணிக்கவேல் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ எனவும் கோரப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பொன் மாணிக்கவேல் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். சிலை கடத்தல், சிபிஐ விசாரணை தொடர்பாக பொன் மாணிக்கவேல் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் எந்தவிதமான பேட்டியும் அளிக்கக்கூடாது” என உத்தரவிட்டார்.
தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக நான்கு வாரத்துக்குள் பதிலை தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.
கருத்துகள்