பெங்களூரு: அரசு அலுவலர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில், ஐ.பி.எஸ்., அலுவலர் ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி வீட்டில், லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை
நடத்தினர். கர்நாடகாவின் பல்வேறு அரசு அலுவலகப் பணியாற்றும் அலுவலர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில், 2ஆம் தேதி சித்ரதுர்காவை சேர்ந்த முன்னாள் காவல்துறை தலைமைக் காவலர் நிங்கப்பா, (வயது 50), என்பவரை, லோக் ஆயுக்தா காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை, மற்றும் மொபைல் போன் தரவுகளின் அடிப்படையில், பெங்களூரில் லோக் ஆயுக்தா பிரிவு 1ல் கண்காணிப்பாளராகப் பணி செய்த ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷியுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
லோக் ஆயுக்தா கண்காணிப்பாளர் பணியிலிருந்து, ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி 12 ஆம் தேதி விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். நிங்கப்பாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் பரபரப்புத் தகவல்கள்வெளியாகிய நிலையில்.
சித்ரதுர்கா மாவட்ட லோக் ஆயுக்தாவில் தலைமைக் காவலராகப் பணியாற்றிய நிங்கப்பா, பணிக்குச் சரியாக வராததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர், லோக் ஆயுக்தாவில் பணியாற்றும் உயர் அலுவலர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும் போது, அவர்கள் வீடுகளில் லோக் ஆயுக்தா சோதனை நடத்துவது வழக்கம் இந்த சோதனை பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ளும் நிங்கப்பா, சொத்து சேர்க்கும் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு, 'உங்கள் வீட்டில் லோக் ஆயுக்தா காவல்துறை சோதனை நடத்த உள்ளனர். அவர்களை வரவிடாமல் தடுக்க, பணம் தர வேண்டும்' எனக் கூறி, அலுவலர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார்.
பணத்தை லோக் ஆயுக்தாவில் பணியாற்றும், உயர் அலுவலர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, ஒரு பங்கை தானும் வைத்துக் கொண்டார்.
அலுவலர்களிடம் இருந்து வாங்கிய பணத்தில், கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்துள்ளார். ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி உள்ளிட்ட சில அலுவலர்கள் பெயரில், கிரிப்டோ கரன்சி வாங்கியதும் தெரிய வந்தது.
நிங்கப்பாவிடம் இருந்து 13 கிரிப்டோ கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில், கோரமங்களாவில் உள்ள ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி வீட்டில், நேற்று முன்தினம் இரவு லோக் ஆயுக்தா காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஆவணங்கள், கிரிப்டோ கரன்சிகள் எதுவும் சிக்கவில்லை.
அலுவலர்களை மிரட்டிப் பணம் பறித்ததில், ஐ.பி.எஸ்., அலுவலருக்குத் தொடர்பு இருந்தாலும், அவர் மீது இதுவரை வழக்கு பதிவாகவில்லை.
நிங்கப்பாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து, காவல்துறை அலுவலர்கள், அரசியல்வாதிகள் பெயரை அழித்து, இந்த வழக்கை மூடிமறைக்க முயற்சி நடப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி முன் ஜாமின் கேட்டு பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கருத்துகள்