காலங்கள் கடந்து போன நிலையில் அறிவிக்கப்படாத கமிஷன் முடிவுகள். தமிழ்நாட்டில்
தென் மாவட்டங்களில் நடைபெற்ற ஜாதிய மோதல்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி காலஞ்சென்ற மோகன் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்தக் கமிஷன் மதுரையில் செயல்பட்டு விசாரணை நடத்தி முடித்து ஒரு அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. அந்த அறிக்கை, கலவரங்களின் பின்னணியில் உள்ள காரணங்கள், மோதல்களுக்கு யார் காரணம், மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கியது.
ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் கமிஷன் அறிக்கை:
ஜாதிய ரீதியான பாகுபாடு, நிலப்பிரச்சினைகள், அரசியல் காரணிகள் மற்றும் சமூக பொருளாதார வேறுபாடுகள் போன்ற காரணங்களால் கலவரங்கள் ஏற்பட்டதாகக் கூறியது.
கலவரங்களைத் தூண்டிய மற்றும் அதில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தது.
ஜாதிய மோதல்களைத் தடுக்க, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட, அனைவருக்கும் உயர்வு தாழ்வு இல்லாமல் சம வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். எனும்
இந்த அறிக்கை, ஜாதிய மோதல்களைத் தடுப்பதற்கும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு முக்கியக் கருவியாகக் கருதப்படுகிறது.
இந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தென் மாவட்டங்களில் ஜாதிய மோதல்கள் தடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதன் பின்னர் நான்கு சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் மாநில ஆளும் கட்சிகளின் அரசு வெளியிட்டு அமல்படுத்த வில்லை, கீழடி அறிக்கை அமல்படுத்த கேட்கும் கட்சிகள் இது குறித்து வாய் திறக்கவில்லை. தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசுகள் கடந்த காலங்களில் உலுக்கிய கலவரங்கள்
தமிழ்நாட்டில் மக்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் மாறி மாறி ஓட்டுக்கள் போட்டு, சலித்திருந்த நிலையில் மாற்று கட்சியைத் தான் மனம் தேடத் துவங்கியது. ஆனால், இன்று வரை, மற்ற எந்தக்கட்சியுமே வலுவான மாற்றுக் கட்சியாக உருவெடுக்கவில்லை.
இந்த இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்து தமிழ்நாடு வளர்ச்சி கண்டுள்ளதா என்றால் ஓரளவுக்கு ஆமாம் என்று கூறலாமா இல்லை என்றே சொல்லலாம். கல்வியறிவு, சாலை வசதிகள், உணவு, போக்குவரத்து வசதிகள் என தனித்தனியே ஆராய்ந்தாலும், மற்ற மாநிலங்களை விட நம் தமிழ்நாடு சில துறைகளில் சொர்க்க பூமியாகத் தான் திகழ்கிறது. ஆனால், அதையும் தாண்டி பொருளாதார வளர்ச்சி, மக்களின் ஆரோக்கியம் பிளஸ் நிம்மதியான வாழ்க்கைக்கு, இந்த இரண்டு கட்சிகளும் அடித்தளம் அமைத்துள்ளனவா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. காரணம் ஊழல் முறைகேடுகள் அதிகம் அதற்குக் காரணம், ஜாதிகளின் பிடியில் சிக்கி, கலவரம் என்ற பூதம் நம்மை ஆட்டுவிப்பது தான்.
இதற்கு துாபம் போட்டவை, ஜாதிவாரி அரசியல் கட்சிகள் தான். எந்தக் கட்சி கலவரங்களில் ஈடுபட்டாலும், அந்தந்த கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த கட்சியே, சட்டம் - ஒழுங்கை பாதுகாத்து, அவற்றைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்க வேண்டும். இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சி யின் போது நடந்த கலவரங்கள் பற்றிய பின்னோட்டத்தை படித்தால், எந்த கட்சிக்கு ஓட்டு போடுவது என்ற தெளிவு கிடைக்கும்.
1991 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் அக்டோபர் மாதம்., 25 ஆம் தேதியில், சென்னை கால்நடை அறிவியல் கல்லுாரி முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சுரேஷ் என்பவரை, பேருந்து நடத்துனர் தரக்குறைவாக பேசியதுடன், அவர் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 12 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க, பெரும் கலவரம் வெடித்தது, காவல்துறை தடியடியில், 40 மாணவர்கள் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. கண்ணீர் புகைக் குண்டு வீச்சும் நடத்தி, கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அடுத்ததாக
அ.தி.மு.க., ஆட்சியில் 1992, ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்., 18 ஆம் தேதியில், கும்பகோணம் மகாமகப் பெரு விழாவில் கலந்து கொள்வதற்காக, தன் உயிர் தோழி சசிகலா நடராஜனுடன் சென்றார், அப்போது முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா. இருவரும் குளத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குளத்தின் தடுப்பு அறையில் புனித நீராடினர். குளத்தின் கொள்ளளவு, 40 ஆயிரம் பேர் எனக் கணக்கிடப்பட்டிருந்தாலும், பன்மடங்கு கூட்டம் கூடியது. அப்போது, 'பாங்கூர் தர்மசாலா' கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்த பீதியில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தப்பியோட முயற்சித்தனர். இதில் மிதிபட்டு, 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
கடந்த, 1992, ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி, ஜூன் மாதம் 2, ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில், சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என்ற பெண்ணை காவல் நிலையத்தில், லாக் - அப்பில் அடைத்து, கணவர் நந்தகோபால் முன்னிலையில் கற்பழித்ததாகவும், பின், நந்தகோபாலை அடித்தே கொன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கலவரம் இல்லை என்றாலும் பெரும் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி பழனியப்பன் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.
கடந்த, 1992, ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதியில், தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில், சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட, 55 வனப் பாதுகாவலர்கள், 108 காவல்துறையினர் மற்றும் ஆறு வருவாய் துறை அலுவலர்கள், அந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்களின் வீடுகளைச் சூறையாடினர். 18 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். கோடிக்கணக்கான பொருட்களை நாசப்படுத்தினர். 100 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. தனி நீதிமன்றம், 269 பேர் குற்ற வாளிகள் என தீர்ப்பு வழங்கியது. அப்போது, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட, 54 பேர் இறந்து போயிருந்தனர்.
கடந்த, 1992, ஆம் ஆண்டு நவம்பர் மாதம்., 8 ஆம் தேதியில் வந்தவாசியில், கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக, ஆதிதிராவிடர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பெரும் கலவரம் மூண்டது. அதில் ஆதிதிராவிடர்கள், 73 பேர் படுகாயமடைந்தனர். 29 பேருக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இரண்டு காவல் துறை பணியாளர்களும் தாக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு போடப்பட்டு, கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி வரதன் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. அதையடுத்து
விருதுநகர் மாவட்டம், கோவில்பட்டியில், விவசாய சங்கத்தினர் நடத்திய ஊர்வலத்தில் பெரும் கலவரம் வெடித்தது. காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், எத்திராஜ் மற்றும் இருதய ஜோசப் ஆகியோர் இறந்தனர். காவல்துறையில் பணி செய்த ராமலிங்கம் என்பவரும் படுகாயமடைந்தார். இதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணியன் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தி, விவசாயசங்கத்தினர் மீது தவறு இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. எத்திராஜ் குடும்பத்திற்கு, 1 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டது.
1993 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஏப்ரல் மாதம்., 29 ஆம் தேதியில், செங்கல்பட்டு எம்.ஜி.ஆர்., மாவட்டம் மாமண்டூரில், காவல் துறை மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மோகன் என்ற காவலகாரர் பலியானார். விசாரணையில், யாழ்ப்பாணம், வல்வெட்டித் துறையைச் சேர்ந்த மூன்று பேர், தஞ்சாவூர் மாவட்டம், புளிக்காடு என்ற இடத்தில் ஆயுதங்களுடன் சிக்கினர்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை, செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு காவல்துறை வேனில் அழைத்துச் சென்ற போது, மாமண்டூரில் ஒரு ஹோட்டலில் சாப்பிட அழைத்து சென்றனர். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், இரவு, 7:40 மணிக்கு, துப்பாக்கிச் சூடு நடத்தியது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நிதிபதி பத்மநாபன் தலைமைமில் கமிஷன் விசாரணை நடத்தியது.
கடந்த, 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்., 8 ஆம் தேதியில், சென்னையில் சேத்துப்பட்டு எம் வி தெரு , பஞ்சவடியிலிருந்த, ஆர்.எஸ்.எஸ்., மாநிலத் தலைமை அலுவலகத்தில், இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு நிகழ்த்தியதில், 11 பேர் இறந்தனர். ஏழு பேர் படுகாயமடைந்தனர். இதனால், மாநிலம் முழுவதும் மதக் கலவரம் ஏற்படும் சூழல் உருவானது.
1994 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சந்தனக் கடத்தல்காரன் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையினர், பழங்குடியினரான இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை கற்பழித்ததாக கலவரம் வெடித்தது. இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் நீடித்தது. காவல் துறை சில இடங்களில் தடியடி நடத்தினர். ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தது.
கடந்த, 1994, அக்டோபர் மாதம்., 10 ஆம் தேதியில், காஞ்சிபுரம் மாவட்டத் தில், ஆதிதிராவிடர் சமூகத்தினர் பஞ்சமி நில உள்ளதாகக் கூறி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தாமஸ், ஏழுமலை ஆகியோர் இறந்தனர். இதனால், மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. கலவரம் மூளும் அபாயமும் நிலவியது. இதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி பானுமதி தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.
கடந்த, 1994, ஆம் ஆண்டு நவம்பர் மாதம்., 18 ஆம் தேதியில், இராமேஸ்வரம் காவல் நிலையத்தில் ராக்கம்மாள், முருகலட்சுமி ஆகியோரை, காவலகாரர்களாகப். பணியில் இருந்த நாகசுந்தரம், ஆறுமுகம், குமரப்பா ஆகியோர் கற்பழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தத் தகவல் காட்டுத் தீ போல் மாநிலம் முழுவதும் பரவவே, போராட்டங்கள் வெடித்தன. சில இடங்களில் கலவரம் வெடித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சௌந்தர பாண்டியன் தலைமையில், கமிஷன் அமைக்கப்பட்டது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட காவலர்கள் மீது, கிரிமினில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த கமிஷன் அரசுக்கு பரிந்துரை செய்தது.
கடந்த, 1994 ஆம் ஆண்டில், சென்னையைச் சேர்ந்த முரளி என்ற வழக்கறிஞரை, தேவேந்திரன் என்ற காவல்காரர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி கலவரம் வெடித்தது. காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி வரதன் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.
1995 அ.தி.மு.க., ஆட்சியில்
ஆகஸ்ட் மாதம்., 31 ஆம் தேதியில், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில், ஆதிதிராவிடர் மற்றும் மறவர் சமூகத்தினருக்கு இடையே மூன்று மாத காலம் தொடர்ந்து கலவரம் நடந்தது. யார் மீது எப்போது ஈட்டி வந்து பாயும் என்ற நிலை. ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்தனர். 75 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
குடிசைகள் எரிக்கப்பட்டன. 20 கிராமங்களில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை. காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இரண்டு ஆதிதிராவிடர்கள் கொல்லப்பட்டனர். சிறு பாலங்கள் உடைக்கப்பட்டு, மின் கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன.
பெட்ரோல் குண்டு வீச்சும் நடந்தது. 500 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கொடியங்குளம் கிராமத்திற்குள் புகுந்த காவல்துறையினர் கோர தாண்டவம் ஆடியதில், கிராமமே சூறையாடப்பட்டது.இந்த கலவரங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி கோமதி நாயகம் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.
1997 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஜனவரி மாதம்., 7 ஆம் தேதியில் கயத்தாறு பஞ்சாயத்து அலுவலகத்தில், ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி, பொதுமக்களிடம் மனுக்கள் வாங்க இருப்பதாக அறிவித்திருந்தார். அன்றைய தினம், பஞ்சாயத்து ஊழியர்கள் அனைவரும் விடுப்பில் சென்று விட்டனர். இதையடுத்து, துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த மறியல் போராட்டத்தில் இறங்கியவர் கைது செய்யப்பட்டார். இதனால், அந்தப் பகுதியில் கலவரம் வெடித்தது. பஸ்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காவல்துறை எஸ்.ஐ., நளினி என்பவர், பாலியல் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.
1997 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஏப்ரல் மாதம்., 16 ஆம் தேதியில், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில், வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் அரசு பேருந்து செயல்படத் துவங்கியது. இதற்கு, மறவர் சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சிவகாசி - ஈஞ்சர் சந்திப்பு அருகே, மறவர் சமூகத்தினர் கூடி போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் கலவரம் வெடித்தது. அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. பெரும் கலவரம் வெடித்ததால், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். மின் கம்பங்கள் சாய்க்கப்பட்டு, அந்தப் பகுதியே இருளில் மூழ்கிக் கிடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி தன்ராஜ் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது. இந்தக் கலவரத்தின் விளைவாக, போக்குவரத்துக் கழகங்களுக்கு இருந்த பல தேசிய தலைவர்களின் பெயர்களையும் அரசு நீக்கியது .
1997 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் மே மாதம் 5 ஆம் தேதியில், தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தடையை மீறிச் சென்ற புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டம், துறையூரில் பிலிப்ஸ், தங்கையா, மாசிலாமணி ஆகியோர் கண்டனப் போராட்டம் நடத்தினர். அதில் கலவரம் வெடித்தது. காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். கலவரத்தில் பிலிப்ஸ் கொல்லப்பட்டார். இதனால், பெட்ரோல் குண்டு வீச்சு, பஸ் எரிப்பு, பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்து, பின்னர் கலவரமாக மாறியது. ஓய்வு பெற்ற நீதிபதி காமாட்சி தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.
1997 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஜூன் மாதம் 7 ஆம் தேதியில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த போது, யாகசாலையில் தீப்பிடித்து கூரை கொளுந்துவிட்டு எரிந்தது. அப்போது ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி, 48 பேர் பலியாகினர். 200 பேர் படுகாயமடைந்தனர்.
1997 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஜூன் மாதம் 19 ஆம் தேதியில், திருநெல்வேலியில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறை போக்குவரத்து கழக டிப்போவில் நுழைந்து, ஊழியர்கள் மீது கடுமையாக தடியடி நடத்தினர். இதனால், மாநிலம் முழுவதும், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதிக்க, தமிழ்நாடு போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி காதர் தலைமையில் கமிஷன் விசாரித்தது.
1997 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நவம்பர் மாதம்., 29 ஆம் தேதியில் கோயமுத்தூரில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ், வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு அல்-உம்மா அமைப்பினர் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த இரண்டு மாதங்களில், நடந்த கலவரத்தில், 17 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.அதற்கு பழிவாங்கும் வகையில், 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்., 14 ஆம் தேதியில் கோயம்புத்தூரில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. 19 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில், 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கோயமுத்தூரில் அன்று தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முன்னாள் உள்துறை அமைச்சர் எல் கே.அத்வானியை கொலை செய்யும் நோக்கத்துடன் இந்தக் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டது தெரிய வந்தது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.
1998 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அக்டோபர் மாதம்., 30 ஆம் தேதியில், கமுதி வட்டம் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகன் குருபூஜைக்கு காரில் சென்று திரும்பிய, அய்யண்ணன் அம்பலம் உள்ளிட்ட இரண்டு பேர், சாலை விபத்தில் பலியாகினர். 'இது விபத்து அல்ல; மண் லாரியை ஏற்றி, அவர்கள் கொல்லப்பட்டனர். சதி இருக்கிறது' என, தேவர் சமூகத்தினர் குற்றம் சாட்டினர். இதனால் கலவரம் வெடித்தது. காவல்துறை கலவரத்தைக் கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கமிஷன் விசாரித்தது.
1998 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் சென்னை அமைந்தகரையை சேர்ந்த, ரவி மனைவி சித்ரா என்பவரை காவல் பணி ஆய்வாளர் ஒருவர் பாலியல் சித்ரவதை செய்ததாக குற்றச்சாடு எழுந்ததனால், சென்னையில் பதற்றம் ஏற்பட்டு, கடும் மோதலாக மாறியது குறித்து. ஓய்வு பெற்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் கமிஷன் விசாரித்தது.
1998 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டம், கல்லாம் பொத்தை என்ற கிராமத்தில், இஸ்லாமியர்கள் மற்றும் மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டனர். இதையடுத்து, அங்கு ஒரு குண்டுவெடிப்பு நிகழ, இரு சமூகத்தினரும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 13 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கமிஷன் விசாரித்தது.
1999 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஜூலை மாதம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தினக்கூலி, 150 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும் என, கோரிக்கை வைத்துப் போராடினர். பெண்கள் உட்பட, 198 பேர் கைது செய்யப்பட்டனர்.இதைக் கண்டித்து, ஜூலை மாதம் 23 ஆம் தேதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தலைமையில் திருநெல்வேலியில் பேரணி நடந்ததில், கலவரம் வெடித்தது. காவல்துறை தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தினர். உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்த, 17 பேர், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் தென்மாவட்டங்களில் கலவரங்கள் தடுப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.அதில் நாம் கூட தகவல் அளித்தோம் இந்த நிலையில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார்
2000 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு, தனி நீதிமன்றம், 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்., 2ஆம் தேதி, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.,வினர் போராட்டங்களில் இறங்கினர்.தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில், கோயம்புத்தூர் வேளாண்மைக் கல்லுாரி மாணவியர் சுற்றுலா வந்த பேரூந்தை அ.தி.மு.க.,வினர் தீ வைத்து எரித்தனர். இதில், ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூன்று மாணவியர் தீயில் கருகிய நிலையில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அ.தி.மு.க.,வினர் மூன்று பேருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஆகஸ்ட் மாதம்., 12 ஆம் தேதியில், சென்னையில் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி கைதைக் கண்டித்து, தி.மு.க.,வினர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணி, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், டி.ஜி.பி., அலுவலகத்தைக் கடந்தபோது பெரும் கலவரம் வெடித்தது. காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு நடத்தப்பட்டது. அதில் நான்கு பேர் இறந்தனர்; பத்திரிகையாளர் பலரும் தாக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதி பக்தவத்சலம் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.
2001 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஆகஸ்ட்., 6 ஆம் தேதியில், இராமேஸ்வரம் அடுத்த ஏர்வாடியில், மனநலக் காப்பகத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த, 28 மன நோயாளிகள், அங்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பலியாகினர். அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராமதாஸ் தலைமையில் கமிஷன், விசாரித்தது.
2002 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஆகஸ்ட் மாதம்., 29 ஆம் தேதியில், சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பெரும் கலவரம் வெடித்து. கவுன்சிலர்கள் ஒருவரை மற்றவர் தாக்கிக் கொண்டனர். மேயர் பதவியில் இருந்த தற்போதய முதல்வர் மு.க.ஸ்டாலினை நீக்கிவிட்டு, துணை மேயராக கராத்தே தியாகராஜனை நியமனம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தக் கலவரம் நடந்தது. இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவியது. ஓய்வு பெற்ற நீதிபதி நடராஜன் தலைமையில் கமிஷன் விசாரித்தது.
கடந்த, 2002, ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்., 9 ஆம் தேதியில், மதுரை மேலுாரில், கல்லுாரிகளை பல்கலைக் கழகங்களுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் பெரியளவில் போராட்டம் நடத்தினர். கலவரமும் வெடித்தது. காவல்துறை கடுமையாக தடியடி நடத்தினர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணியன் தலைமையில் கமிஷன் விசாரித்தது.
2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஜூலை, மாதம் 16 ஆம். தேதியில், கும்பகோணம் தனியார் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில், 94 குழந்தைகள் கருகிப் பலியாகினர். 14 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்தக் கோர விபத்து, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.
2005 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதத்தில், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் மழை, வெள்ளம் சூழ்ந்தது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம்., 18 ஆம் தேதியில், வெள்ள நிவாரணம், தலா, 2,000 ரூபாய்க்காக அரசு சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது. அப்போது, சென்னை எம்.ஜி.ஆர்., நகர், அரசு பள்ளியில், அதிகாலையில் டோக்கன் வாங்கச் சென்றவர்கள், கூட்ட நெரிசலில் சிக்கினர். இதில், 42 பேர் பலியாகினர். 32 பேர் படுகாயமடைந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது. முன்னதாக, நவம்பர் மாதம்., 6 ஆம் தேதியில், சென்னை, வியாசர்பாடி, அம்பேத்கர் அரசு கலைக் கல்லுாரியில், வெள்ள நிவாரணத் தொகை வாங்கச் சென்ற, ஆறு பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர்.
2007 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் மே மாதம் 9 ஆம் தேதியில், தினகரன் நாளிதழ் கருத்துக் கணிப்பு வெளியிட்டது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர், மதுரையில், தினகரன் நாளிதழ் அலுவலகத்தை தீ வைத்துக் கொளுத்தினர். இதில், தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் பலியாகினர்.
கடந்த, 2007, ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்., 14 ஆம் தேதியில், தென்காசியில், இந்து முன்னணி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினருக்குப் இடையே பெரும் கலவரம் வெடித்தது. இதில், ஆறு பேர் இறந்தனர். அதில் மூன்று பேர் சகோதரர்கள். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
2009 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் பிப்ரவரி மாதம்., 19 ஆம் தேதியில் தற்போது பாஜகவின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மீது உயர் நீதிமன்ற வளாகத்தில் அழுகிய முட்டை வீசப்பட்டது தொடர்பாக, சில வக்கீல்களை கைது செய்ய காவல் துறையினர் சென்றனர். இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, காவல்துறையினருக்கும் அவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது காவல் துறை தடியடியில் வக்கீல்கள், நீதிபதிகள் காயமடைந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.
2011 ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் மார்ச் மாதம் 16 ஆம் தேதியில், 2ஜி ஊழல் வழக்கில் தொடர்பு இருப்பதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும், கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனருமான சாதிக் பாட்ஷாவிடம் சி.பி.ஐ., உயர் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். வாக்குமூலமும் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, அவர் மர்மமான முறையில் இறந்தார்.
2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் நவம்பர் மாதம்., 11 ஆம் தேதியில், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த, பழனிக்குமார் என்ற சிறுவன் கொல்லப்பட்டான். அப்போது, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஜான் பாண்டியன், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்றபோது, சிறுவனின் வீட்டிற்கு ஆறுதல் கூறச் சென்றார். அவரை காவல் துறையினர் தடுத்தனர். இதனால், காவலர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் பலியாகினர். இதையடுத்து நடந்த கலவரம் பெரும் முயற்சிக்குப் பின் அடக்கப்பட்டது. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் கமிஷன் விசாரித்தது.
2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட வாலிபர் இளவரசனும், வன்னியர் சமூகத்தை சேர்ந்த திவ்யாவும் காதலித்தனர். வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 10 ஆம் தேதி திருப்பதியில் காதல் திருமணம் செய்து கொண்டது.
இதற்கு திவ்யா தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து, அப்பகுதியில் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி கலவரம் வெடித்ததில், ஆதி திராவிடர்களின் குடிசைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. 297 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. பேருந்து எரிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின.
தொடர் சம்பவங்களால், இளவரசனை விட்டு திவ்யா பிரிந்து செல்ல, இளவரசன் 2013, ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தமிழகத்தை உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கமிஷன் விசாரணை நடத்தியது.
2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில திருநெல்வேலி மாவட்டம் மாவட்டம், கூடங்குளத்தில் அணு உலை அமைக்கக் கூடாது என, பெரும் போராட்டம் நடந்தது. கடலோரப் பகுதி மீனவர்களை ஒன்று திரட்டி, உதயகுமார் என்பவர் போராட்டம் நடத்தினார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடந்த, 2012, ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்., 5 ஆம் தேதியில், சிவகாசி பட்டாசத் தொழிற்சாலையில் மிகப் பெரிய தீ விபத்து நிகழ்ந்ததில், 40 பேர் பலியாகினர்; 70 பேர் படுகாயமடைந்தனர்.
2013 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் ஜூலை மாதம் 1 ஆம் தேதியில், வேலுாரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஜூலை மாதம் 30 ஆம் தேதியில், சேலத்தில், பா.ஜ., இ மாநிலச் செயலாளர் ஆடிட்டர் ரமேசையும் பயங்கரவாதிகள் கொடூரமாகக் கொன்றனர். இதுதொடர்பாக, போலீஸ்பக்ருதீன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
2013 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் அக்டோபர் மாதம்., 11 ஆம் தேதியில், திருநெல்வேலி மாவட்டம், அய்யாபுரம் என்ற கிராமத்தில், ஆதிதிராவிடர் இனத்தவர்களை முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யும் முயற்சி நடந்தது. இதனால் கலவரம் வெடித்தது. ஐந்து பேர் பலியாகினர். 21 பேர் படுகாயமடைந்தனர்.
2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் ஜூன் மாதம் 28 ஆம் தேதியில், சென்னை, குன்றத்துார் சாலையில், மௌலிவாக்கம் என்ற இடத்தில், சி.எம்.டி.ஏ., அனுமதி பெற்று கட்டப்பட்டு வந்த, 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் திடீரென இடிந்து தரைமட்டமானது. இதில், 61 அப்பாவி அயல் மாநிலத்தின் தொழிலாளிகள் சிக்கிப் பலியாகினர்.
2015 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஜூலை மாதம், வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, பள்ளிகொண்டா கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ராவை, ஆம்பூரைச் சேர்ந்த இஸ்லாமிய வாலிபர் அழைத்துச் சென்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக, விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபரை காவல் துறை அடித்துக் கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, ஆம்பூரில் பெரும் கலவரம் வெடித்தது. காவல் துறை மீது கல்வீச்சு, பேருந்து எரிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. பொதுமக்கள், காவல்துறை மீது கடும் தாக்குதல் நடத்தினர். பெண் காவலர்கள் பலர், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்பட்டனர். வழக்கமான, கமிஷன் இத்யாதிகள், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நடக்கவில்லை. ஆனால், 144 தடை உத்தரவு சட்டம், பல மாதங்களுக்கு ஆம்பூரில் பிறப்பிக்கப்பட்டது
2015 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் டிசம்பர்.மாதம், 1ஆம் தேதியில், சென்னையில் பேய் மழை கொட்டித் தீர்த்தது. நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. அரசு, செம்பரம்பாக்கம் ஏரியை. முன்னறிவிப்பின்றித் திறந்து விட்டதால், ஊருக்குள் தண்ணீர் புகுந்த பாதிப்பில் சிக்கி, 500 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், சென்னை நகரை விட்டு இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பொதுமக்கள் சொத்துகள் சேதமடைந்தன.
2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் உடுமலைப்பேட்டையில், மறவங சமூகத்தைச் சேர்ந்த பழனி கௌசல்யாவை, ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை சங்கர் என்ற வாலிபர் காதல் திருமணம் செய்தார். இதையடுத்து, 2016, ஆம் ஆண்டு மார்ச், மாதம் 14 ஆம் தேதியில் கௌசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து, சங்கரை கொடூரமாகக் கொன்றதாக காவல்துறையினர் கைது செய்தனர். கௌசல்யா தற்போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, காப்பாற்றப்பட்டுள்ளார். வேறு ஆதிதிராவிடர் பையனை திருமணம் செய்துள்ளார்,
கமிஷன் என்பது சம்பிரதாய நடைமுறையில் தான் உள்ளது கடந்த, 1991 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை, அ.தி.மு.க., ஆட்சியில், 21 கலவரங்களும், தி.மு.க., ஆட்சியில் 16 கலவரங்களும் ஏற்பட்டுள்ளன. என்கிறார் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வரும் நிர்வாகி. கலவரங்கள் ஏற்படும் போது ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் கமிஷன்கள் அமைக்கப்படுகிறது. இந்தக் கமிஷன்களை இனி உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இப்படி கலவரம் நடந்ததும் நீதி விசாரணை என்ற பெயரில் நடத்தப்படும் கமிஷன் விசாரணை அறிக்கை அனைத்துமே, பிரச்னையை அப்போதைக்கு அமுக்கிப் போடுவதற்காகவே அமைக்கப்படுகிறது. பிரச்னை எழுந்ததும், மாநிலத்தின் முதல்வராக இருப்பவரின் எண்ணம் என்னவாக இருக்கிறதோ, அதையே அந்த கமிஷன், தன் விசாரணைக்குப் பின், அறிக்கையில் பிரதிபலிப்பு செய்து தெரிவிக்கிறது. என்னதான் கமிஷன் போட்டு விசாரணை நடத்தி, அறிக்கைகள் பெறப்பட்டாலும், அந்த கமிஷன் அறிக்கை மீது அரசு தரப்பு உரிய நடவடிக்கையும் எடுக்காததால், கமிஷன் என்பது வெறும் சம்பிரதாயமாக நிகழ்வாக மட்டுமே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். என்பது தான் அணைத்து மக்களிச விருப்பம்.
கருத்துகள்