மிகவும் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் S.R.G.ராஜண்ணா உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
'70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனிப்புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்கள் என முக்கிய ஆன்மிக நிலையங்களில் ஆஸ்தான வித்வானாக பணியாற்றிய சிறப்புக்குரியவர். கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர்' என கூறியுள்ளார். செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரான இவர், இசையுலகில் அசாத்தியமான பல சாதனைகளைப் புரிந்துள்ளார். சுமார் 70 வருடங்களுக்கும் மேலாக இசையுலகில் தனக்கென தனிப் புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா.
செம்பனார்கோயிலைச் சேர்ந்த கோவிந்தசாமி பிள்ளையின் இளைய மகனான ராஜண்ணா, தனது மூத்த சகோதரரான எஸ்.ஆர்.ஜி.சம்பந்தம் அவர்களுடன் இணைந்து, பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறம்பட செயலாற்றியுள்ளார். நாதஸ்வர இசை மரபில் பல தலைமுறைகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜண்ணா.
ரக்தி மேளம் உள்பட செம்பனார்கோயில் பாணியைச் சேர்ந்த பிரதான கலைஞர்களாக விளங்கிய இந்த சகோதரர்கள், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எண்ணற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.இவர்களின் தாத்தாவான ராமசாமி பிள்ளை, நாதஸ்வரம் வாசிப்பவர்களில் முதன்முறையாக இசைத் தட்டில் (Disc) பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பதிவு இன்றளவும் கிடைப்பது, அவரது வெற்றியை பறைசாற்றுகிறது.
பந்தநல்லூர் வேணுகோபால பிள்ளை மற்றும் கோவிந்தசாமி பிள்ளை ஆகிய இருவரிடமிருந்து ராஜண்ணா நாதஸ்வரம் பயிற்சியைப் பெற்றார். மயிலாடுதுறையில் வசித்த வந்த இவர், பிற்காலத்தில் சென்னையைத் தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டார்.நாதஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் 125-வது பிறந்த ஆண்டு நினைவாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர சென்னை மியூசிக் அகாடமியின் டி.டி.கே. சிறப்புத் தகுதி விருதையும் (T.T.K. Award for Excellence) ராஜண்ணா பெற்றுள்ளார். 94 வயதான S.R.G.ராஜண்ணாவின் இழப்பு, இசையுலகிற்கு பேரிழப்பு.




கருத்துகள்