பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முயற்சிகள் 'வலுவான, வளமான இந்தியாவிற்கு' அடித்தளம் அமைத்து வருகின்றன மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, இளையோர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இன்று 77 - வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமரின் முறைசாரா தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆற்றிய சேவைகள், இந்த முன்னோடி சமூகப் பாதுகாப்புத் திட்டத்துடனான அவர்களின் தொடர்பு ஆகியவற்றைப் பாராட்டி, நாடு முழுவதிலுமிருந்து 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர்.
மத்திய அரசின் சார்பில் பயனாளிகளை வரவேற்ற அமைச்சர், மக்கள் மையப்படுத்திய நிர்வாகம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அரசின் உறுதியான நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சியால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மக்களின் பிரச்சனைகளையும், விருப்பங்களையும் புரிந்துகொள்ள, நிர்வாகம் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
குடியரசு தினக் கொண்டாட்டங்கள் குறித்து பேசிய அமைச்சர், ராஜபாதை என்பதை கடமைப் பாதை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் முக்கியத்துவம் குறித்தும், அது இந்தியாவின் வளர்ந்து வரும் ஜனநாயக நெறிமுறைகளையும், கூட்டுக் கடமையுணர்வையும் பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார். சுமார் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள், மின்சாரம் மற்றும் சமையல் எரிவாவு இணைப்புகளுக்கான விரிவான நடைமுறைகள், விவசாயிகளுக்கு நேரடிப் பணப் பரிமாற்றம், குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகை உள்ளிட்ட மத்திய அரசு செயல்படுத்து வரும் முக்கிய நலத்திட்டங்களை அவர் எடுத்துரைத்தார். இந்த நடவடிக்கைகள் 'வலுவான, வளமான பாரதத்திற்கு' அடித்தளம் அமைத்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயனாளிகள் பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளதால் தங்களுக்கு கிடைத்துள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம், தங்களது எதிர்காலத்திற்கு அளித்துள்ள பாதுகாப்பு உணர்வு குறித்தும் விரிவாகக் கூறினார். தங்களை தில்லிக்கு அழைத்து, குடியரசு தின அணிவகுப்பைக் காண வாய்ப்பளித்ததற்காக, மத்திய அரசிற்கு பயனாளிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த அனுபவம், தாங்கள் எதிர்கொண்டுவரும் சவால்களையும், விருப்பங்களையும் அரசு புரிந்து கொள்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியதாக அவர்கள் கூறினர்.

கருத்துகள்