இந்தியாவிற்கு நவீன ஒற்றை தொழில்நுட்ப சேமிப்பு மேலாண்மை உள்கட்டமைப்பு அவசியம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்


நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

இந்தியாவிற்கு நவீன ஒற்றை தொழில்நுட்ப சேமிப்பு மேலாண்மை உள்கட்டமைப்பு அவசியம்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

அத்தியாவசியப் பொருட்களின் சேமிப்புத் திட்டங்கள் தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர் திரு ராவ் சாஹேப் பாட்டில் தான்வே, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஆகியவற்றின் செயலாளர்கள், இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர், இந்திய தேசிய வேளாண்மைக் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பின் மேலாண் இயக்குநர், தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி, உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தியாவிற்கு நவீன ஒற்றை தொழில்நுட்ப சேமிப்பு மேலாண்மை உள்கட்டமைப்பு அவசியமென்று கூட்டத்தின் போது அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார். நம் நாட்டில் உள்ள அனைத்து சேமிப்பு உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைப்பது மற்றும் அதிகரிப்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். தனியாக இயங்கும் துறைசார்ந்த சேமிப்பு திட்டங்களுக்கு மாற்றாக “முழுமையான அரசு அணுகுமுறை” பின்பற்றப்பட வேண்டும் என்று திரு கோயல் வலியுறுத்தினார். மாநிலங்களில் சேமிப்பதற்கான வசதியை அதிகரிப்பதற்கு அரசுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்யலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார். வேளாண் உள்கட்டமைப்பு நிதி மற்றும் நவீன பாதுகாப்பு கட்டமைப்பிற்கு இடையே இணைதிறம் சார்ந்த பயன்பாட்டை முறையாக மேற்கொள்ளுமாறு திரு கோயல் அறிவுறுத்தினார்.

தனியார் அரசு கூட்டணிகள், முதலீடு, முன்முயற்சிகள், நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக, குறிப்பிட்ட இடம் சார்ந்த திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இடங்களை முறையாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக இடம் மற்றும் சேமிப்பிற்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

நவீன, குறைந்த செலவில், சேமிப்புத் திறன் வாய்ந்த உள்கட்டமைப்புகளை அடிமட்ட அளவிலும், வட்டார அளவிலும் உருவாக்குவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்று திரு கோயல் குறிப்பிட்டார்.

இந்தியாவில் 20,433 இடங்களில் பல்வேறு அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் கிடங்குகள் இயங்குகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்