மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தை ஷில்லாங்கில் டாக்டர் வீரேந்திர குமார் திறந்து வைத்தார்
மாற்றுத்திறனாளிகளின் திறன் வளர்ச்சி, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தலுக்கான பிராந்திய மையத்தின் சேவைகளை ஷில்லாங்கில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் செல்வி பிரதிமா பவுமிக், மேகாலயா சமூக நலத்துறை அமைச்சர் திரு கிர்மென் ஷைல்லா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் திரு நாச்சிகேதா ரவுத் உள்ளிட்ட உயரதிகாரிகள் நாடு முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேகாலயா அரசு வழங்கிய பத்து ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த மையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.
இத்தகைய மையங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில், இந்திய அரசு அமைத்துள்ளது. ஷில்லாங்கில் அமைந்துள்ளது 20-வது மையமாகும். மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சேவைகள், சிறப்பு கல்வி, பணி தொடர்பான புத்தாக்கம், மனநல மேம்பாடு, நடப்பதற்கான பயிற்சி, பேசுதல் மற்றும் கேட்பதற்கான பயிற்சி உள்ளிட்ட சேவைகள் இங்கே வழங்கப்படுகின்றன.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீடு மற்றும் உபகரணங்கள் வழங்கும் முகாம் ஷில்லாங்கில் உள்ள மையத்தில் நடத்தப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படும். இதுதவிர, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும் இம்மையம் உருவாக்கும்.
கருத்துகள்