சேலம், நாமக்கல் பகுதியில் ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீடுகள்தோறும் சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய தண்ணீர் பற்றாக்குறை நிலவும் மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் சுத்தமான, பாதுகாப்பான குடிநீரை வழங்கி வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் ஆகியவற்றை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் மத்திய அரசு எட்டு ஆண்டை நிறைவு செய்துள்ளது. மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கும் வகையில், மத்திய அரசின் திட்டப் பயனாளிகளை சந்திப்பது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக தெரிவித்தார். மேலும், 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு கழிப்பிட தேவை குறித்து பேசுவது தயக்கமாகவே இருந்ததாகவும், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து பள்ளிகளுக்கும், ஏழை மக்களின் வீடுகளுக்கும் கழிப்பிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிவிரைவு சாலைகளால் சிறிய ஊர்கள்கூட விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்திலும், அதிக பயனாளிகள் தமிழகத்தில் தான் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 மீன்பிடி துறைமுகங்களில் சர்வதேச தரம் கொண்டதாக மாற்றுவதில், சென்னை காசிமேடு துறைமுகமும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.
கருத்துகள்