ஜூலை 16 அன்று உத்தரப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர், புந்தேல்கண்ட் விரைவுச்சாலையை தொடங்கிவைக்கிறார்
இந்த விரைவுச்சாலைக்கு 2020 பிப்ரவரியில் பிரதமர் அடிக்கல் நாட்டியிருந்தார்
296 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி விரைவுச்சாலை ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது
விரைவுச்சாலை இந்த பிராந்தியத்தில் போக்குவரத்து தொடர்புக்கு பெருமளவு ஊக்கத்தையும் தொழில்துறை வளர்ச்சியையும் ஏற்படுத்தும்
2022 ஜூலை 16 அன்று உத்தரப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜலான் மாவட்டம் ஒராய் வட்டம் கைத்தேரி கிராமத்தில் காலை 11.30 மணிக்கு, புந்தேல்கண்ட் விரைவுச்சாலையை தொடங்கிவைக்கிறார்.
சாலை கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கிய பணியில் முக்கிய அம்சமான போக்குவரத்து தொடர்பை நாடு முழுவதும் விரிவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக புந்தேல்கண்ட் விரைவுச்சாலைக்கு 2020 பிப்ரவரி 29 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டியிருந்தார். இந்த விரைவுச்சாலைப் பணி 28 மாதங்களில் முடிக்கப்பட்டு இப்போது பிரதமரால் தொடங்கிவைக்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச விரைவுச் சாலைகள் தொழில்துறை மேம்பாட்டு ஆணைய உதவியுடன் 296 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி விரைவுச்சாலை ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இது பின்னர், ஆறு வழிச்சாலையாக விரிவாக்கப்படும். இது சித்திரகூட மாவட்டத்தின் பரத்கூப் அருகே உள்ள கோண்டா கிராமத்தில் என்எச்-35லிருந்து எட்டாவா மாவட்டம் குட்ரெயில் கிராமம் வரை நீட்டிக்கப்பட்டு ஆக்ரா – லக்னோ விரைவுச் சாலையுடன் இணைக்கப்படுகிறது. இது சித்திரகூடம், பண்டா, மகோபா, ஹமீர்பூர், ஜலான், அவ்ரையா, எட்டாவா ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக செல்கிறது.
இந்த பிராந்தியத்தில் போக்குவரத்து தொடர்பை மேம்படுத்தும் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு ஊக்கமளிக்கும். இதன் விளைவாக உள்ளூர் மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாகும். இந்த விரைவுச்சாலைக்கு அருகே, பண்டா, ஜலான் மாவட்டங்களில் தொழில்துறைக்கான பெருவழிப்பாதை அமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளது
கருத்துகள்