நித்தி ஆயோக்கின் ஏழாவது நிர்வாகக்குழு கூட்டம் நிறைவடைந்தது
இந்தியா கோவிட் தொற்றுநோயிலிருந்து மீண்டு வெளிவர கூட்டு முயற்சி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி உதவியது: பிரதமர்
இந்தியா தனது மாநிலங்களின் வலிமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஜி-20 வழங்கியது : பிரதமர்
கோவிட் பெருந்தொற்று நோயிலிருந்து இந்தியா மீண்டு வருவதற்கு உதவிய சக்தியாக, கூட்டுறவு கூட்டாட்சி உணர்வுடன் அனைத்து மாநிலங்களின் கூட்டு முயற்சிகள் இருந்ததாக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்..
நித்தி ஆயோக்கின் ஏழாவது நிர்வாகக் குழு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முக்கிய பங்களித்தன. இது வளரும் நாடுகளுக்கு உலகத் தலைவராக இந்தியாவை முன்னோடியாகக் காட்ட வழிவகுத்தது.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நிர்வாகக்குழுவின் முதல் நேரடி கூட்டம் இதுவாகும், 2021 கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் 23 முதல்வர்கள், 3 துணைநிலை ஆளுனர்கள் மற்றும் 2 நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நெறிப்படுத்தினார்.
பிரதமர் தனது தொடக்க உரையில், கோவிட் நெருக்கடியின் போது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி உலகிற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தது என்றார். உலகின் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு சக்திவாய்ந்த செய்தியை அனுப்பியுள்ளது என்று அவர் கூறினார். வள ஆதார குறைபாடுகள் இருந்தபோதிலும் சவால்களை உறுதியுடன் சமாளிக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்தது. இதற்கான பெருமை மாநில அரசுகளுக்கே உரியது என்றும், அரசியல் ரீதியாக ஒத்துழைப்பதன் மூலம் மக்களுக்கு பொது சேவைகளை அடிமட்ட அளவில் வழங்குவதில் கவனம் செலுத்துவதாக பிரதமர் கூறினார்.
“இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தில் முதல்முறையாக, இந்தியாவின் அனைத்து தலைமைச் செயலாளர்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடி, மூன்று நாட்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதித்தனர். இந்த கூட்டு செயல்முறை இந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்க வழிவகுத்தது" என்று பிரதமர் கூறினார்.
இந்த ஆண்டு, நிர்வாககுழு நான்கு முக்கிய நிகழ்ச்சி நிரல்களை விவாதித்தது:
(i) பயிரை பல்வகைப்படுத்துதல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர விவசாயப் பொருட்களில் தன்னிறைவை அடைதல்;
(ii) பள்ளிக் கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துதல்;
(iii) உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துதல்; மற்றும்
(iv) நகர்ப்புற நிர்வாகம்.
மேற்கூறிய அனைத்து விஷயங்களின் முக்கியத்துவத்தையும், குறிப்பாக நவீனமயமாக்கப்பட்ட விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்துவதன் அவசியத்தையும் தன்னிறைவு அடையவும், விவசாயத் துறையில் உலகளாவிய தலைவராகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். நகர்ப்புற இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் எளிமையாக வாழ்வதற்கும், வெளிப்படையான சேவை வழங்குவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விரைவான நகரமயமாக்கல் பலவீனத்திற்குப் பதிலாக இந்தியாவின் பலமாக மாறும் என்றார்.
2023 இல் இந்தியாவின் ஜி 20 தலைவர் பொறுப்பைப் பற்றியும் பிரதமர் பேசினார், நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உலகுக்குக் காட்ட இது ஒரு தனித்துவமான வாய்ப்பு என்று கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு முதலமைச்சரும், துணைநிலை ஆளுநரும் கூட்டத்தில் உரையாற்றி, நான்கு முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் சிறப்பு கவனம் செலுத்தி அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னுரிமைகள், சாதனைகள் மற்றும் சவால்களை எடுத்துரைத்தனர்.
தனது நிறைவுரையில், ஒவ்வொரு மாநிலமும் வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார். இறக்குமதியைக் குறைத்தல், ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். ஒவ்வொரு மாநிலத்திலும் முடிந்தவரை உள்ளூர் பொருட்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும், என்றார்.
ஜிஎஸ்டி வருவாய் மேம்பட்டிருந்தாலும், நமது திறன் கூடுதலாக உள்ளது என்றார் பிரதமர். “ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கும் இது மிகவும் முக்கியமானது,” என்றார்.
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தேசிய முன்னுரிமைகளை வரையறுக்கும் என்று அவர் கூறினார். இன்று நாம் விதைக்கும் விதைகள் 2047 இல் இந்தியா அறுவடை செய்யும் பலன்களை வரையறுக்கும் என்றார் அவர்.
பிரதமரின் முதன்மை செயலாளர், நித்தி ஆயோக் துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரி, அமைச்சரவை செயலாளர், முக்கிய அமைச்சகங்களின் செயலாளர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் நித்தி ஆயோக் ஏழாவது கூட்டத்தில் கலந்து கொண்டனர்..
கருத்துகள்