தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அதில் சில கட்டுப்பாடுகளையும் உயர் நீதிமன்றம் வெளியிட்டது.
தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழ்நாடு உள்துறை செயளாலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநரிடம் ஆகஸ்ட் மாதம் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்திய சுதந்திர தின 75 ஆம் ஆண்டு, மற்றும் அம்பேத்கர் பிறந்த தின நூற்றாண்டு, தசரா விஜய தசமி விழா ஆகியவற்றை முன்னிட்டு இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் காவல்துறையினர் ஊர்வலத்திற்கு அனுமதியும் அளிக்கவில்லை. அனுமதி தர முடியாதென்றும் கூறவில்லை. அவர்களின் கோரிக்கை மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி
சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டைச் சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட ஒன்பது பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் செல்ல தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. இது விதி மீறல்.அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும், அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவானது நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் எந்தப் பாதையில் செல்கிறார்கள் எனத் தகவல்கள் அளிக்கவில்லை. ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது .காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்தப் பொருட்களுக்கும் அனுமதியில்லை. அவர்கள் செல்லும் வழியைக் குறிப்பிட வேண்டும். ஆனால் அவர்கள் குறிப்பிடாத காரணத்தால் அனுமதி வழங்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவை தொடர்பான எந்த உறுதியையும், மனுதாரர்கள் தரப்பில் காவல்துறையிடம் தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதற்றமான பகுதிகள் இருக்கலாம் என்பதால், அவர்கள் செல்லும் வழியை துல்லியமாகத் தெரிவிக்க வேண்டுமென்றும் காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்து உள்ளது. ஊர்வலத்தில் சாதி, மதம், தனி நபர் குறித்து தவறுதலாகப் பேசக் கூடாது. மோதல்களை தூண்டும் வகையில் செயல்படக் கூடாது. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பற்றி பேசக் கூடாது. எக்காரணம் கொண்டும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பற்றி பேசவே கூடாது. வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட கூடாது. போக்குவரத்துக்கு தடை ஏற்படும் வகையிலும், மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் செயல்படக் கூடாது. கம்பு, லத்தி, ஆயுதம் ஆகிவற்றைக் கொண்டு செல்லக் கூடாது. மக்களை காயப்படுத்தும் நடவடிக்கை எதுவும் செய்யக் கூடாது. நீதிமன்ற விதிகளில் ஒன்றை மீறினாலும் காவல்துறை சுதந்திரமான நடவடிக்கையை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
கருத்துகள்