தமிழ்நாடு ஆளுநருடன் 2020-2021 தொகுப்புகளைச் சேர்ந்த இந்திய தகவல் பணி, பயிற்சி அதிகாரிகளின் சந்திப்பு
அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை முழுமையாக புரிந்துகொண்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடைகோடி மனிதனுக்கு விரைவாகவும் தீவிரமாகவும் கொண்டுசெல்ல வேண்டும்
2020-2021 தொகுப்புகளைச் சேர்ந்த இந்திய தகவல் பணி, பயிற்சி அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ சந்திப்பின் போது மேன்மை தங்கிய தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி இவ்வாறு அறிவுறுத்தினார்
சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர், மத்திய மக்கள் தொடர்பக இயக்குநர், பத்திரிகை தகவல் அலுவலக துணை இயக்குநர் ஆகியோருடன் 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டு தொகுப்புகளின் இந்திய தகவல் பணி அதிகாரிகள் நேற்று (05.10.2022) ஆளுநர் மாளிகையில், மேன்மை தங்கிய தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவியை சந்தித்தனர்.
இந்த மாநிலத்தின் மக்கள் நிலை, உயர்வான மனிதகுல மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஆய்வு செய்ய தமிழ்நாட்டுக்கு வந்துள்ள அவர்களை, மேன்மை தங்கிய ஆளுநர் வரவேற்றார்.
நாகா அமைதிப் பேச்சுவார்த்தையில் சமரச தூதராகவும், பிறபணிகளிலும், தேசப்பாதுகாப்பில் தமது வளமான, விரிவான பல்வேறு அனுபவ நிகழ்வுகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
தகவல் தொடர்பு மற்றும் இந்திய தகவல் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஆளுநர், அரசின் கொள்கைகளை விரிவாக புரிந்து கொண்டபின், பயிற்சி அதிகாரிகள் பிரச்சினைகளை முழுமையாக கவனித்து தொடர்புக்கான உத்திகளை வகுக்குமாறு அறிவுறுத்தினார். தொழில்நுட்ப ரீதியில், தற்காலப்படுத்திக் கொள்ளுமாறும் சாமானிய மக்களால் எளிதாக புரிந்து கொள்ளவும், உள்வாங்கிக் கொள்ளவும் முடிகின்ற வகையில் தகவல்களை மேம்படுத்த பணியாற்றுமாறும் அவர்களிடம் ஆளுநர் அறிவுறுத்தினார்.
ஆர்வமுள்ளவர்களாகவும், அறிவாளிகளாகவும், ஆன்மீக ரீதியாக விழிப்புணர்வு பெற்றவர்களாகவும் இருக்குமாறு பயிற்சி அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் ஊக்கப்படுத்திய ஆளுநர், இந்த நாட்டின் மக்கள், பன்முகத்தன்மை, நெறிமுறைகள் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்ளுமாறும் இவைதான் நடைமுறையில் உள்ள பாரத தர்ஷன் என்பதை சாதிப்பதற்கு உதவும் என்றார்
கருத்துகள்