ஐக்கிய நாடுகளின் உலக புவிசார் சர்வதேச மாநாட்டில்
பிரதமர் உரையாற்றினார்
" நெருக்கடியான தருணத்தில் ஒருவருக்கொருவர் உதவும் அணுகுமுறை சர்வதேச சமூகத்தில் அவசியமாகும்"
"யாரும் விடுபடவில்லை என்பதை இந்தியா உறுதி செய்துவருகிறது."
“இந்தியாவில், தொழில்நுட்பம் என்பது யாரையும் விலக்கி வைப்பதல்ல, எல்லோரையும் சேர்ப்பதாகும்.
"இந்தியா சிறந்த புதுமையான உணர்வைக் கொண்ட ஒரு இளம் நடு
ஐக்கிய நாடுகளின் உலக புவிசார் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.
சர்வதேசப் பிரதிநிதிகளை வரவேற்ற பிரதமர், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றாக இணைந்து நமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக வரவேற்பதில் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்” என்றார். ஐதராபாத்தில் நடக்கும் மாநாட்டில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், அந்த நகரம், அதன் கலாச்சாரம் மற்றும் உணவு வகைகள், விருந்தோம்பல் மற்றும் உயர்தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வைக்கு பெயர் பெற்றது என்று கூறினார்.
மாநாட்டின் கருப்பொருளான 'உலகளாவிய புவிசார் இயக்கத்தை கட்டமைப்பதில் யாரும் விடுபடக்கூடாது' என்பது கடந்த சில ஆண்டுகளாக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளில் காணக்கூடியதாக உள்ளது என பிரதமர் சுட்டிக்காட்டினார். "கடைசி மைலில் உள்ள, கடைசி நபருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான அந்தியோதயா என்னும் தொலைநோக்கில் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்” என்று அவர் கூறினார். அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையிலான 450 மில்லியன் பேருக்கு வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது. அவர்கள் வங்கி கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகையை விட இருமடங்கான 135 மில்லியன் மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் விவரித்தார். 110 மில்லியன் குடும்பங்களுக்கு சுகாதார வசதிகளும், 60 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், "யாரும் விடுபடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்றார்.
தொழில்நுட்பமும் திறமையும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முக்கிய இரண்டு தூண்கள் ஆகும். தொழில்நுட்பம் மாற்றத்தைக் கொண்டுவருகிறது, 800 மில்லியன் மக்களுக்கு நலத்திட்டங்களின் பயன்களை தடையின்றி வழங்கும் மக்கள் நிதி திட்டம், ஆதார் மற்றும் மொபைல் போன் இணைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் விளக்கிக் கூறினார், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்திய தொழில்நுட்பத் தளத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். “இந்தியாவில், தொழில்நுட்பம் என்பது யாரையும் விலக்கி வைப்பதல்ல, எல்லோரையும் சேர்ப்பதாகும்” என்று திரு மோடி கூறினார்.
புவிசார் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை விளக்கிய பிரதமர், டிஜிட்டல் பெருங்கடல் தளத்தைப் போல, ஸ்வமிதா மற்றும் வீட்டுவசதி போன்ற திட்டங்களில் தொழில்நுட்பத்தின் பங்கு, சொத்து உரிமை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில், வறுமை மற்றும் பாலின சமத்துவம் மீதான ஐநாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் நேரடி விரைவுசக்தி பெருந்திட்டம், புவிசார் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்றார். புவிசார் தொழில்நுட்பத்தின் பலன்களைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியா ஏற்கனவே ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளது, இந்தியாவின் அண்டை நாடுகளில் தகவல் தொடர்புக்கு வசதியாக தெற்காசிய செயற்கைக்கோள் திட்டத்தை செயல்படுத்தி வருவதை பிரதமர் எடுத்துக்காட்டினார்.
“இந்தியா சிறந்த புதுமையான உணர்வைக் கொண்ட ஒரு இளம் தேசம்” என்று கூறிய பிரதமர், இந்தியாவின் பயணத்தில் இரண்டாவது தூணாக திறமை பங்கு வகிப்பதாக தெரிவித்தார். உலகின் மிகச்சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஒன்றாக இந்தியா விளங்குகிறது என்று கூறிய பிரதமர், 2021 ஆம் ஆண்டிலிருந்து யூனிகார்ன் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது - இந்தியாவின் இளம் திறமைக்கு ஒரு சான்றாகும் என்றார்.
மிக முக்கியமான சுதந்திரங்களில் ஒன்று புத்தாக்க சுதந்திரமாகும் என்று கூறிய பிரதமர், புவிசார் துறைக்கு இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார். புவியியல் தரவுகளின் சேகரிப்பு, உருவாக்கம், டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை இப்போது ஜனநாயகமயமாக்கப்பட்டுள்ளன, என்றார் அவர். ட்ரோன் துறைக்கு ஊக்கமளித்தல், விண்வெளித்துறையில் தனியார் பங்கேற்பு, இந்தியாவில் 5ஜி சேவை துவக்கம் ஆகியவை இத்தகைய சீர்திருத்தங்களாகும் என்று அவர் கூறினார்.
கொவிட்-19 தொற்றுநோய் அனைவரையும் அரவணைத்து செல்வதற்கான ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நெருக்கடியான தருணத்தில் ஒருவருக்கொருவர் உதவும் அணுகுமுறை சர்வதேச சமூகத்தில் அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
"ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலகளாவிய நிறுவனங்கள் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வளங்களை கடைசி மைல் வரை கொண்டு செல்வதில் வழிவகுக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் கைகோர்த்து செல்வது, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை முக்கியமானவை, நமது பூமியை காப்பாற்றுவதற்கான சிறந்த நடைமுறைகள் பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார்.
புவிசார் தொழில்நுட்பம் வழங்கும் முடிவற்ற சாத்தியக்கூறுகளை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். நிலையான நகர்ப்புற மேம்பாடு, பேரழிவுகளை நிர்வகித்தல், அவற்றை தணித்தல், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கண்காணித்தல், வன மேலாண்மை, நீர் மேலாண்மை, பாலைவனமாக்குதலை நிறுத்துதல், உணவுப் பாதுகாப்பு ஆகியவை இதில் அடங்கும். இந்த மாநாடு இது போன்ற முக்கியமான துறைகளில் முன்னேற்றம் குறித்து விவாதிக்கும் தளமாக அமைய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
நிறைவாக, பிரதமர் இந்த நிகழ்வில் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். "உலகளாவிய புவிசார் துறையின் பங்குதாரர்கள் ஒன்றிணைந்து, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வித்துறையினரை ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதால், இந்த மாநாடு உலகளாவிய கிராமத்தை ஒரு புதிய எதிர்காலத்திற்கு வழிநடத்த உதவும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
கருத்துகள்