கோயமுத்தூரில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய பொறியாளர் கைது
கோயமுத்தூர் போத்தனூர் பாரத் நகரில் இருக்கும் கார்த்திகேயன். மலுமிச்சம்பட்டி எம்பிஜி நகரில் தன்னுடைய வீட்டிற்கு தற்காலிக மின் இணைப்புக் கேட்டு மலுமிச்சம்பட்டி மின் வாரிய அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார்.
கார்த்திகேயன் வீடுள்ள இடத்தின் அருகில் மின்கம்பம் அமைக்க வேண்டுமென மின்சார வாரிய எஸ்டிமேட் அலுவலர் தெரிவித்தார். இதற்கு மதிப்பீட்டுக் கட்டணமாக ரூபாய்.37,910 ஐ ஆன்லைன் மூலமாகச் செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, இளநிலை மின்சார வாரியத்தின் பொறியாளர் சுப்பிரமணியன் ‘‘மின் இணைப்பு வழங்கத் தேவையான பணிகள் முடிந்து விட்டது. ஆகவே எனக்கு ரூபாய் .7 ஆயிரம் இலஞ்சமாகத் தர வேண்டும்’’ எனக் கேட்டுள்ளார். பேரம் பேசி கார்த்திகேயன் ரூபாய் .5 ஆயிரம் இலஞ்சம் தருவதாக ஒப்புக்கொண்டு கூறிவிட்டு இதுபற்றிய விபரம் கோயமுத்தூர் இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்த நிலையில் நேற்று கார்த்திகேயன், மலுமிச்சம்பட்டி மின்சார வாரிய அலுவலகம் சென்றார். அங்கிருந்த மின் வாரிய போர்மேன் சங்கர்கணேஷ், மின்சாரவாரிய இளநிலை பொறியாளர் சுப்பிரமணியனை செல்லுலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது பணத்தை வாங்கி வைக்குமாறு கூறினார்.
அதன்படி சங்கர் கணேஷ் ஐந்தாயிரம் ரூபாயை அரசு சாட்சி முன்னிலையில் வாங்கிய போது மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறையினர் , அவரைக் கைது செய்தனர்.
மின்பொறியாளர் சுப்பிரமணியனையும் கைது செய்தனர். இருவரிடம் விசாரணை நடத்தி சிறையிலடைத்தனர்.
கருத்துகள்