இந்திய திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக பூர்வீக பழங்குடியின மக்கள் நடித்த திரைப்படம் “தாபரி குருவி”
பழங்குடியின மக்களின் கதைக்களத்தை பின்புலமாக கொண்ட “தாபரி குருவி” என்ற திரைப்படத்தின் கதாபாத்திரங்களில் பூர்வீக பழங்குடியின மக்களே நடித்துள்ளனர். சமூக கட்டமைப்பில் பழங்குடியின மக்களிடையே நிலவும் ஏற்க முடியாத நடைமுறைகளை எதிர்த்து போராடும் ஒரு பழங்குடியின சிறுமியின் போராட்டமே இந்த திரைப்படத்தின் கதையாகும். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய பனோரமா பிரிவில் “தாபரி குருவி” திரையிடப்பட்டது. இருளர் பழங்குடியின மொழியிலேயே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் இயக்குநரும், தேசிய விருது பெற்றவருமான திரு.பிரியானந்தன், பத்திரிகை தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்த “டேபிள் டாக்ஸ்”-ல் நிகழ்வில், செய்தியாளர்களுடனும், பங்கேற்பாளர்களுடனும் கலந்துரையாடினார். அவர் பேசும்போது, “பழங்குடியின சிறுமிகளின் போராட்டம்மிக்க வாழ்க்கையை வெளிக்கொணர்ந்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய உண்மையான ஆசையாகும். இந்த திரைப்படத்தின் திரைக்கதை முதலில் மலையாளத்தில் எழுதப்பட்டு, பின்பு இருளர் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது. பழங்குடியின மக்களுக்கு நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு படைப்புத் திறனாளி இருக்கிறார். நான் அவர்களுக்கு நடிக்க சொல்லி கொடுக்கவில்லை. மாறாக அவர்கள் அவர்களாகவே வாழ்ந்துள்ளனர். நான் எதிர்பார்த்ததை காட்டிலும் அவர்கள் சிறப்பாக நடித்தனர். மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு மொழி ஒரு தடையே அல்ல”.
“இத்திரைப்படத்தில் கேரளாவில் உள்ள இருளர், முடுக்கர், குறும்பர், வடுகர் போன்ற பழங்குடியின மக்கள் நடித்துள்ளனர். அவர்களில் சிலர் இதுவரை தங்களது வாழ்நாளில் திரைப்படத்தையே பார்த்ததில்லை. இந்த திரைப்படத்தை அனைத்து பழங்குடியின கிராமங்களிலும் திரையிட முடிவு செய்துள்ளேன்” என்றார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த மீனாட்சி மற்றும் சியாமினி, ஒளிப்பதிவாளர் அஸ்வகோஷன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்