4 இஞ்ஜின்களில் 3 இஞ்ஜின்கள் திறம்படச் செயல்பட முடியாமல் தவிப்பதேன்? ப.சிதம்பரம் மாநிலங்களவையில் வினா
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் முன்னாள் நிதி அமைச்சரும் இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவருமான ப சிதம்பரம்,
தனது கருத்துக்களை முன் வைத்ததில்: அரசு கூடுதலாக சுமார் 3.26 லட்சம் கோடி ரூபாயைக் கேட்கிறது. 500 கோடி ரூபாயை இந்தியாவின் பல எல்லைப் பகுதிகள் மற்றும் ராஜரீக ரீதியில் முக்கியமான பகுதிகளில் சாலைகள் உள்ளிட்ட பல கட்டமைப்புகளை அமைக்க பணம் தேவை எனக் கூறியுள்ளது. இவை அனைத்தும் நாட்டின் பாதுகாப்புக்கு என்பதால் அதை மகிழ்வோடு யோடு நாங்கள் வழங்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு முன் நாங்கள் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம். அதற்கு நிதி அமைச்சர் அல்லது ஆளுங்கட்சி தரப்பிலிருந்து விடை கொடுக்கப்படும் என நான் நம்புகிறேன்.
அந்த 11.1 சதவீதத்துக்கு கணக்குச் சொல்லுங்களேன்:
மதிப்பீட்டு பட்ஜெட்டில் 2022- 23 நிதி ஆண்டில் கரண்ட் பிரைஸ் அடிப்படையில் ஜிடிபி 258 லட்சம் கோடி என்று கூறப்பட்டிருந்தது. அப்படியானால் கடந்தாண்டை விட ஜிடிபியின் நாமினல் குரோத் வளர்ச்சி 11.1 சதவீதம்.
கரண்ட் பிரைஸ் அடிப்படையில் ஜிடிபியின் வளர்ச்சி 11.1 சதவீதமென்றால் அதில் பணவீக்கத்தின் அளவென்ன?பட்ஜெட் குறித்த விவாதம் எழுந்த போதே இது குறித்து அவையில் கேள்வி எழுப்பியிருந்தேன். இப்போது 2022 - 2023 நிதியாண்டில் ஒன்பது மாதங்களைக் கடந்து விட்டோம்.
எனக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இந்த 11.1 சதவீத வளர்ச்சியில் எத்தனை சதவீதம் பணவீக்கம் மற்றும் உண்மையான வளர்ச்சி எத்தனை சதவீதம் என்று கூறுங்கள். மதிப்பிற்குரிய நிதி அமைச்சரும் இந்திய அரசும் சுமார் மூன்று புள்ளி இரண்டு ஆறு லட்சம் கோடி ரூபாயைச் செலவழிக்க விரும்புகிறார்கள் என்றால், இந்திய அரசு கூடுதலாக செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறோம். இந்தப் பணத்தை அரசு எப்படிக் கொண்டு வரும். எதன் மூலம் கொண்டு வருவார்கள் என்பதே அடுத்த கேள்வி. பட்ஜெட் மதிப்பீட்டில் இந்திய அரசின் தோராய வரி வருவாய் சுமார் 27 லட்சத்து 58 ஆயிரம் கோடி. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கும் வரி 7 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய். இதை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டால், ஒட்டுமொத்த தோராய வரி வருவாயில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி வெறும் 26.1 சதவீதம் மட்டுமே.
2013 - 14 நிதி ஆண்டில் இந்திய அரசின் தோராய வரி வருவாய் சுமார் 11 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய். இதில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மட்டும் வசூலிக்கப்பட்ட வரித்தொகை சுமார் மூன்று லட்சத்தை 93 ஆயிரம் கோடி ரூபாய். கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மட்டும் வசூலிக்கப்பட்ட வரித்தொகையை விகிதாச்சாரப்படி கணக்கிட்டு பார்த்தால் 34 சதவீதம் .
2013 - 14 நிதியாண்டோடு தற்போதைய கார்ப்பரேட் வரி வசூல் விகிதத்தைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 8 சதவீதம் குறைவாகவே கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி வசூல் உள்ளது. இந்த மிகப்பெரிய நன்மை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏன் கொடுக்கப்படுகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பதிலாக யார் அந்தத் தொகையை இட்டு நிரப்புகிறார்கள் என்று பார்த்தால். வருமான வரி செலுத்துபவர்கள், என்னையும் உங்களையும் போல சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்கள் தான் இந்தச் சுமையை சுமக்கிறார்கள். சாமானிய மக்களும் நடுத்தர மக்களும் அதிக சுமையைச் சுமப்பது சரியா தவறா என்பதை இந்த அவையே தீர்மானிக்கட்டும்.
இப்படி இந்திய அரசு பல சலுகைகளை தனியார் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்த பிறகும், இந்தியப் பொருளாதாரத்தில் எல்லாமே சரியாக இருக்கிறது என்று அரசு கூறும் போதும், முதலீட்டாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யாதது ஏன்?1990 - 91 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் ஜிடிபி சுமார் 25 லட்சம் கோடி. இது கான்ஸ்டன்ட் பிரைஸ் அடிப்படையிலான தரவு. அதன் பிறகு தான் இந்தியாவில் தாராளமயம், தனியார்மயம், உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன. ஆட்சி நடத்த 12 ஆண்டுகளுக்குள் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி இருமடங்காக அதிகரித்தது. அதாவது இந்திய பொருளாதாரம் 50 லட்சம் கோடி மதிப்புடையதாக அதிகரித்தது. இது பிரதமர் நரசிம்மராவ் மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் சாத்தியமானது.
மீண்டும் அடுத்த பத்தாண்டு காலத்துக்குள் இந்தியாவின் ஜிடிபி மீண்டும் இருமடங்காக அதிகரித்தது. பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் இந்தியா கண்ட அசுர வளர்ச்சியது. அவர் ஆட்சிக் காலத்தில் இந்தியா சுமார் 98 - 99 லட்சம் கோடியை எட்டிப் பிடித்தது.
ஆக கிட்டத்தட்ட 9 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் பாஜக தலைமையிலான ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் இரு மடங்கு வளர்ந்திருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது இயற்கை தானே.? தன்னுடைய 10 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் போது இந்தியப் பொருளாதாரம் 200 லட்சம் கோடியை எட்டிப் பிடிக்குமா? அரசு செலவினங்கள், தனியார் முதலீடுகள், நுகர்வு, ஏற்றுமதி.ஆகிய நான்கு இஞ்ஜின்களில் அரசு செலவினங்கள் தவிர மற்ற மூன்று இஞ்ஜின்களும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.
தனியார் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள், இந்தியாவில் சிறப்பாக முதலீடுகளை மேற்கொள்ளவில்லையென ஊடகங்கள் ஆதாரங்களுடன் சப்தமாகப் பேசி வருகின்றனர்.
மிகப்பெரிய பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களின் நுகர்வு மட்டுமே இருக்கிறது, நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நுகர்வு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்றுமதிச் சரிவுகளைச் சந்தித்து வருகின்றன. வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனா என்கிற ஒற்றை நாட்டோடு மட்டும் இந்தியாவுக்கு 73 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை நிலவுகிறது. இப்படி உங்களுடைய நான்கு இஞ்ஜின்களில் மூன்று இஞ்ஜின்கள் திறம்படச் செயல்பட முடியாமல் தவிப்பது ஏன்? இதற்கு ஏதாவது ஒரு விளக்கம் இருக்க வேண்டுமே.பல நாடுகளும் ரெசஷன்களால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதை எல்லாம் இந்திய அரசு கருத்தில் எடுத்துக் கொண்டதா? இந்த சூழ்நிலையை நீங்கள் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள். இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சியை மேம்படுத்த என்ன செய்யப் போகிறீர்கள். சீனாவும் இந்தியாவும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் அதாவது எல் ஏ சி என்று அழைக்கப்படும் பகுதிக்குள்ளேயே பெரிய அளவில் பல கட்டுமானங்களை மேம்படுத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையும், இந்திய அரசுத் தரப்பிலிருந்தும் கூறப்பட்டிருக்கிறது. சீனா என்ன மாதிரியான கட்டுமானங்களை மேம்படுத்தியிருக்கிறதென்று கூற வேண்டும். அதே நேரத்தில் இந்தியாவுக்கு உட்பட்ட எல் ஏ சி பகுதியில் என்ன மாதிரியான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்பது குறித்து எதையும் குறிப்பிட வேண்டாம்.
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பாலி நகரத்தில் சந்தித்துப் பேசிக் கொண்ட போது, எல்லை பிரச்னைகளை குறித்து ஏதேனும் பேசினார்களா ?இல்லையா? என்பதை மட்டும் கூறினால் போதும். என
சரியான தரவுகளோடு ப. சிதம்பரம் கேள்வி கேட்ட போது பாரதிய ஜனதா கட்சி தரப்பில் கொந்தளித்ததைப் பார்க்க முடிந்தது.அதற்கு இரண்டு இஞ்சின் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காரசாரமாகப் பதிலளித்தார்.
கருத்துகள்