கொரோனா பரவலை முன்னிட்டு உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மருந்து நிறுவனங்களிடம் ஆய்வு
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை & ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா பெருந்தொற்று சில நாடுகளில் வேகமாக பரவி வருவதையடுத்து உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு மற்றும் கொரோனா மேலாண்மை மருந்துகள் மற்றும் கருவிகள் தயாரிப்பு குறித்து மருந்து நிறுவனங்களிடம் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா பெருந்தொற்றின்போது மருந்து நிறுவனங்களின் பங்கு குறித்து மத்திய அமைச்சர் பாராட்டினார். இந்தியாவின் வலுவான மருந்து துறையின் வலிமையால் நமது உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ததோடு 150 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளோம். இவற்றை தரத்தில் எந்த குறைவில்லாமலும் அதே நேரத்தில் விலையை உயர்த்தாமலும் இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் சர்வதேச விநியோக சங்கிலியின் போக்கை தொடர்ந்து கண்காணிக்குமாறு மருந்து நிறுவனங்களை அமைச்சர் கேட்டுக் கொண்டார். மேலும் கொரோனா மேலாண்மைக்கான உயிர் காக்கும் மருந்துகள் தயாரிப்பு, இருப்பு மற்றும் சில்லறை வணிக அளவில் விநியோக சங்கிலி ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
சரியான நேரத்தில் ஆய்வு கூட்டத்தை நடத்திய மத்திய அமைச்சருக்கு மருந்து நிறுவனங்கள் பாராட்டு தெரிவித்து ஆதரவை தொடர்ந்து வழங்குவதாக தெரிவித்தன. மேலும் கொரோனா மருந்துகள் விநியோக சங்கிலியை பராமரிப்பதற்கான நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரச் செயலர் திரு ராஜேஷ் பூஷன், மருந்துத் துறை செயலாளர் செல்வி எஸ். அபர்ணா மற்றும் பல்வேறு மருந்து நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள்