நீதிமன்றங்களில் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
சென்னை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை தலைமை இயக்குனருக்கு அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில்,
"நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரன்டுகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை ஆஜர்படுத்துவதற்கான செயல்முறையைத் தவிர வேறில்லை.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு பிரிவு 7 உட்பிரிவு 2 ன் கீழ், ஜாமீனில் வெளி வர முடியாத வாரன்ட்டை பிறப்பித்த நீதிமன்றங்களின் மாஜிஸ்திரேட்டால் செயல்படுத்தப்படும் வரை அல்லது அதை ரத்து செய்யும் வரை நடைமுறையில் இருக்கும். குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் போது, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை, மாநிலத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டுகள் குறித்து தங்களது கவலையைத் தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நிலுவையிலுள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டுகளை முறையாக நிறைவேற்றுவதில் காவல் துறையினர் முறையாகச் செயல்படவில்லை என்றும், மெத்தனப் போக்காக உள்ளதாகவும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரன்டுகள் எத்தனை நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத் துறைக்கு நீதியதி பி.வேல்முருகன் உத்தரவிட்டுள்ளதோடு, அனைத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதிகள், மற்றும் கூடுதல் செஷன்ஸ் நீதிபதிகள், உதவி அமர்வு நீதிபதிகள், சிறப்பு அமர்வு நீதிபதிகள் , மாஜிஸ்திரேட்டுகள் என அந்தந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளியே வர முடியாத வாரன்டுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே இது தொடர்பாக, கடந்த 06.ஜனவரி.2023 ஆம் தேதியிட்ட உத்தரவின் படி, மேற்கு மண்டலம் ஐஜி , சம்பந்தப்பட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களிடமிருந்து அனைத்து விவரங்களையும் பெற்று, சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஒப்பிட்டுப் பார்த்து விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் வழக்குகள் மட்டுமல்லாமல், மற்ற எல்லா வழக்குகளிலும் கீழமை நீதிமன்றங்கள், மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்கள்களில் நிலுவையிலுள்ள வாரண்டுகள், ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரன்டுகள் குறித்த விரிவான அறிக்கை வழங்க வேண்டும்.
அனைத்துக் காவல் துறை ஆணையர்கள், மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து உடனடியாக நிலுவையிலுள்ள அனைத்து வாரன்ட்டுகளையும் நிறைவேற்ற அறிவுறுத்த வேண்டும்" என அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள்