இந்தியத் தரநிர்ணய அமைவனம் பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டது
இந்தியத் தரநிர்ணய அமைவனம் பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இன்று (04.08.2023) புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. சென்னை தரமணியில் உள்ள இந்த அமைவனத்தின் தென்மண்டல அலுவலகத்தில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
பெங்களூருவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம், சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (விஐடி), தமிழ்நாடு வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி, ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அறிவுசார் தொழில்நுட்பங்களுக்கான ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம், நுஸ்வித் ஐஐடி ஆகியவற்றுடன் இந்திய தரநிர்ணய அமைவனம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (விஐடி), ஆகியவற்றின் சார்பில் மூத்த பிரமுகர்கள் அமைவன அலுவலகத்திற்கு நேரில் வருகைதந்து இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். மற்ற கல்வி நிறுவனங்களில் உயரதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் இந்திய தரநிர்ணய அமைவனத்தின் தென்மண்டல துணைத்தலைமை இயக்குநர் திரு யுஎஸ்பி யாதவ், சென்னை கிளை அலுவலக இயக்குநர் மற்றும் தலைவர் திருமதி ஜி பவானி ஆகியோர் பங்கேற்றனர். அமைவனத்தின் மற்ற கிளை அலுவலகத்தின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டனர்.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் குழுக்களின் மூலம் தரநிர்ணய செயல்பாட்டில் பங்கேற்பதற்கு இத்தகைய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவியாக இருக்கும். தரநிர்ணயம் குறித்து கூட்டாக கருத்தரங்குகள், பயிலரங்குகள், உரைக்கோவை நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கு ஏதுவாக அமையும். மேலும் தரநிர்ணயம் தொடர்பான பொதுநலன் சார்ந்த நூல்கள் மற்றும் வெளியீடுகள் பரிமாற்றம், கல்வி நிறுவனங்களில் தரநிர்ணயம் தொடர்பான தலைப்புகளில் பாடப்பிரிவுகள் அறிமுகம், பரிசோதனை, மதிப்பீடு போன்றவற்றுக்கு சோதனைக்கூட வசதிகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கும் உதவிகரமாக இருக்கும்.
கருத்துகள்