"தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க"! உரையாடல் புகழ் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார் -பலரும் இரங்கல்
’அபூர்வ சகோதரர்கள்’, ‘அன்பே சிவம்’, ‘கார்கி’ஆகிய பல திரைப்படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி வயது 66. அவர் 1981 ஆமாண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரராவார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், 1989 ஆமாண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைபடத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஜனகராஜுடன் இணைந்து இவர் பேசும் ‘எங்கேயோ போய்ட்டீங்க சார்’ உரையாடல் பிரபலம்.
கமல்ஹாசனின் பல படங்களில் தவறாமல் இடம்பெறும் நடிகர்களில் ஒருவராவார் நெல்சனின் ’கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் அப்பா வேடமேற்று நடித்திருந்தார். 2021ஆம் ஆண்டு சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
நேற்று செப்டம்பர் ,02 காலை உடல்நலக்குறைவால் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார். நேற்று முன்தினம் சென்னை உலக சினிமா விழாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.சிவாஜி கலந்து கொண்டிருந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
கருத்துகள்