புனித யாத்திரை தலங்கள் மறுசீரமைப்பு மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான தேசிய இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், வேளாங்கண்ணி ஆன்மீகத் தலங்கள் மேம்பாட்டிற்கு ரூ.18 கோடியே 85 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு: மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தகவல்
புனித யாத்திரை தலங்கள் மறுசீரமைப்பு மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான தேசிய இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், வேளாங்கண்ணி ஆகிய ஆன்மீக தலங்கள் மேம்பாட்டிற்கு ரூ.18 கோடியே 85 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர் திரு கே ஆர் என் ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சென்னை-மாமல்லபுரம்-ராமேஸ்வரம்-மணப்பாடு-கன்னியாகுமரி- கடலோரப்பகுதிகளின் மேம்பாட்டிற்காக 73 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுற்றுலா உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்திற்காக, சென்னை துறைமுகத்தில் பயணிகள் முனையத்தில் கப்பல் பயணிகளுக்கான வசதிகள் மையத்தை ஏற்படுத்த, சென்னை துறைமுக கழகத்திற்கு 2012-13-ஆம் ஆண்டில் 17 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
2017-18-ஆம் ஆண்டில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் கூட்டு மேம்பாட்டிற்காக 4 கோடியே 70 லட்சம் ரூபாயும், மதுரை ரயில் நிலையத்தின் கூட்டு மேம்பாட்டிற்காக 4 கோடியே 48 லட்சம் ரூபாயும் செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தாம் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்