ரூபாய்.32 கோடி சிக்கிய ஜார்கண்ட் மாநில அமைச்சர் அலம்கீர் ஆலமை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர்.
ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், அலம்கீர் ஆலம் (வயது 70). காங்கிரஸ் கட்சி சார்ந்த இவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் குமார் லால் தொடர்புடைய இடங்களில் கடந்த வாரம் அமலாக்கத்துறை யினர் சோதனை நடத்தினர்.
அப்போது சஞ்சீவ் லாலின் வீட்டுப் பணியாளர் ஜகாங்கிர் ஆலம் தங்கியிருந்த வீட்டிலிருந்து ரூபாய்.32 கோடிக்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டது. அது தொடர்பாக சஞ்சீவ் குமார் மற்றும் ஜகாங்கிர் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். குறிப்பாக மாநில ஊரக வளர்ச்சித் துறையில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாக விசாரணை நடக்கிறது.
அது தொடர்பாக அமைச்சர் அலம்கீர் ஆலமை ராஞ்சியிலுள்ள தங்கள் அலுவலகத்துக்கு வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் 9 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக அலம்கீரிடம் 6- மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்திய அதிகாரிகள், விசாரணை முடிவில் அவரைக் கைது செய்தனர். இதற்கிடையே பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சஞ்சீவ் குமார் மற்றும் ஜகாங்கிர் ஆலமை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்தனர்.
அதில் அவர்கள், சில செல்வாக்கு மிக்க நபர்களின் சார்பாக சஞ்சீவ் குமார் லால் கமிஷன் வசூல் செய்ததாகவும், ஊரக வளர்ச்சித்துறையில் மேலிருந்து கீழ் வரை அரசு அதிகாரிகள் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கிழ் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது ஜார்கண்ட் மாநில அரசில் பெரும் அதிர்வை உறுவாக்கியுள்ளது. ஒரு பணமோசடி தடுப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகு, அமலாக்கத் துறை மற்றும் அதன் அதிகாரிகள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 19-ன் கீழ் ஒருவரைக் கைது செய்வதற்கான அதிகாரத்தை இழந்து விடுகிறார்கள் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டப்பிரிவு 19, ஒருவரது இருப்பிடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட உடைமைகள், எழுத்துப் பூர்வமாகக் கிடைத்த நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் ஒருவர் குற்றவாளி எனத் தெரியவந்தால் அவரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும்.
அதுபோல மிகவும் முக்கியமாக, விசாரணை அமைப்பு, கைது செய்யப்படுவது குறித்து உடனுக்குடன் அந்த நபருக்குத் தெரியப்படுத்த வேண்டியது கைது செய்வதற்கான அடிப்படைப் பணியாகும்.
ஒரு புகார் குறித்து வழக்குப் பதிவு செய்யப்படும் வரை, குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படவில்லை என்றால், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு அவரைக் கைது செய்யக்கூடாது. ஒருவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி, அவரும் மிகச் சரியான விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானால், அது காவலில் எடுப்பதாகாது.
ஒரு தனி நபருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுவிட்டால், அவரைக் கைது செய்ய சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியை விசாரணை அமைப்பு பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி அபைய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி உஜ்ஜல் பயன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. விசாரணையில், கைது நடவடிக்கை அவசியம் என்று நீதிமன்றம் கருதினால் மட்டுமே கைதுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
முதற்கட்டமாக, சட்டப்பிரிவு 70 ன் கீழ், சம்மனுக்கு, குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராக மறுக்கும் பட்சத்தில் தான் கைதுக்கு அனுமதிக்க முடியும். அதுவும் பிணையுடன் கூடிய கைது ஆணையாகவே இருக்க முடியும். எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகள்