உலக புகையிலை எதிர்ப்பு தினம் புகையிலையுடன் தொடர்புடைய பாதிப்புகளிலிருந்து தற்போதைய மற்றும் எதிர்கால
தலைமுறையினரைப் பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் திரு அபூர்வ சந்திரா
உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று (31.05.2024) இது தொடர்பான நிகழ்ச்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்தது. "புகையிலையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்" என்ற இந்த ஆண்டின் கருப்பொருள், புகையிலை தாக்கங்களிலிருந்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா காணொலி மூலம் உரையாற்றினார். புகையிலை பயன்பாட்டை குறைப்பதற்கு தேசிய மற்றும் பிராந்திய அளவில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.
இந்தியாவில், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் - விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பான புகையிலை கட்டுப்பாட்டுக்கான விளம்பரத் தூதராக பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான பிரச்சாரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி வி.ஹெகாலி ஜிமோமி, சுகாதார சேவைகள் துறை தலைமை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் அதுல் கோயல், இந்தியாவுக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ரோடெரிகோ ஓஃப்ரின், ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியின் போது, புகையிலை எதிர்ப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் விருது பெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் பொது சேவைகள் இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் டாக்டர் எல்.ஸ்வஸ்திசரண், சுகாதார அமைச்சகத்தின் புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு துணைச் செயலாளர் டாக்டர் பூனம் மீனா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
புகையிலை எதிர்ப்பு தினமான இன்று தொடங்கி, இணைய தளம் மூலம் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வகை செய்துள்ளது. இதற்கான உறுதிமொழியை https://pledge.mygov.in/no-tobacco-2024/ என்ற இணையதள இணைப்பின் மூலம் ஏற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்