தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த வழக்குகளில்
குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சாட்சிகளின் விசாரணையைத் தொடங்க வேண்டும், இந்த விசாரணை நாள்தோறும் நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்குகளில் அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர் பொது நல வழக்கைத் தாக்கல் செய்த. மனுவில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு அமைச்சர்களும் முக்கியமான துறைகளைக் கவனித்து வருகின்றனர். வழக்கின் புலன் விசாரணை அலுவலர், உள்துறையில் பொறுப்பைக் கவனிக்கும் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் நியாயமான விசாரணை நடைபெற நீதியின் நலனைப் பாதுகாக்க, புலன் விசாரணை அலுவலரும், அரசுத்தரப்பு வழக்கறிஞரும் எந்த அரசியல் கட்சியின் சார்பும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமெனவும், அதனால் இரு வழக்குகளையும் நடத்த அரசுத்தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், இரண்டு அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.
கருத்துகள்