அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கம்
மீது ஊழல் வழக்குப்பதிவானது கடந்த கால அதிமுக ஆட்சியில் சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுவதற்கு ரூபாய்.27 கோடியை லஞ்சமாக வாங்கியதாக முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கம், மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட 11 நபர்கள் மீது தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஒரத்தநாடு வைத்திலிங்கம். அதிமுகவில் அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா காலத்தில்
அதிமுகவில் முக்கிய நபர்களில் ஒருவராக செல்வாக்குடன் இருந்த போது ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார் தற்போது நான்கு பிரிவாக உடைந்த அதிமுகவில் இருந்து விலகி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உள்ள அணியிலுள்ளார். வைத்திலிங்கத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தெலுங்கன்குடிக்காடு கிராமம், பெற்றோர் ரெங்கசாமி மற்றும் முத்தம்மாள். இருவரும் இறந்து விட்டனர்.
வைத்திலிங்கம் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். விவசாயத்தின் மூலம் மட்டுமே குடும்ப வருமானம் பெற்றவர். அவரது மனைவி தங்கம், இவர்களுக்கு மூன்று மகன்களும்,ஒரு மகளும் உண்டு. மூத்த மகன் பிரபு. இவர் பிருந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளைய மகன்கள் ஆனந்தபிரபு மற்றும் சண்முகபிரபு. இருவரும் டாக்டர்கள் ஆவர் மகள் பிரதீபா. ஒரத்தநாடு அருகில் புதூரைச் சேர்ந்த டாக்டர் கார்த்திகேயனைத் திருமணம் செய்துள்ளார்.
வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தொடர்ந்து மூன்று முறையும் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு முதல் முதல் 2006 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில் தொழில் துறை அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், கூடுதலாக விவசாயத் துறையின் அமைச்சராகவும் இருந்தார். . -விளம்பரம்- -விளம்பரம்-
2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாட்டில் தோல்வியடைந்தார். அதனால் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். மீண்டும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து சட்டமன்றத் உறுப்பினராகத் தேர்வானார்.
வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு, அவரது பாட்டி முத்தம்மாள் பெயரில் முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டில் சென்னையில் துவங்கினார். அதன் நிர்வாக இயக்குனராகவும் இருக்கிறார். பிரபு, முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர், மற்றும் சென்னை பூந்தமல்லி பகுதிகளில் நிலங்கள், வீட்டு மனைகள் வாங்கி குவித்திருந்தார்.
முத்தம்மாள் ரியல் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சென்னை ஈக்காட்டுதாங்கல் இந்தியன் வங்கியின் கிளை மூலம் ரூபாய்.27.90 கோடிக்கு மேல் தொகை வரவு வைக்கப்பட்ட நிலையில் 22-9-2014 அன்று முத்தம்மாள் ரியல் எஸ்டேட்டில் 90 சதவீத பங்கு பிரபுவுக்கும், மீதம் 10 சதவீத பங்கு அவரது உறவினர் பன்னீர்செல்வம் பெயரிலும் இருப்பது தெரியவந்தது. மேலும் 24.03.2015 அன்று சென்னை ஈக்காட்டுதாங்கல் கிளை இந்தியன் வங்கியில் முத்தம்மாள் ரியல் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ரொக்கம் இருப்புத் தொகை ரூபாய். 10,82,85,494.00 மாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிறுவனம்
ரூபாய்.36,00,000 பங்கு மூலதனத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட் வணிகத்தைக் கையாள RERA பதிவு செய்யப்பட்டது. அதன் வருமான வரித்துறை அறிக்கையின் படி, இந்த நிறுவனத்திற்கு எந்த வியாபாரமும் இல்லை. இந்த நிலையில் ஸ்ரீ ராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட், சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் 57.94 ஏக்கர் நிலப்பரப்பில் 1453 குடியிருப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்கள் உள்ளிட்ட கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்காக 2.12.2013 ஆம் ஆண்டில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும ஆணையத்திடம் திட்ட அனுமதிக்கு மனு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இரண்டாண்டுகள் பரிசீலனை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் 24.02.2016 ஆம் நாள் அன்று CMDA ஒப்புதல் அளித்தது. அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூபாய்.27.90 கோடி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்தம்மாள் ரியல் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் பராமரிக்கப்படும் இந்தியன் வங்கியின் கணக்கு 28.01.2016 ஆம் தேதி முதல் 04.02.2016 ஆம் தேதி வரை 8 நாட்களுக்குள் ஆர்டிஜிஎஸ் மூலம் மொத்தம் ரூபாய்.27.90 கோடி வரவு வைக்கப்பட்ட இந்தத் தொகையை பாரத் நிலக்கரி கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து முத்தம்மாள் ரியல் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெற்றதாகக் கூறப்படுகிற நிலையில் வைத்திலிங்கம் அவரது மனைவி, மகன்கள் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார். மேலும் வருமானத்துக்கு அதிகமாக 1057 சதவீதம் சொத்துக்கள் சேர்த்ததும் தெரியவந்தததையடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சரவணன் அளித்த புகாரின் பேரில் வைத்திலிங்கம், அவரது மகன்கள் உள்ளிட்ட 11 நபர்கள் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இரண்டு தினங்களுக்கு முன்பு இதேபோன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது ஊழல் சட்டம் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.ஒளிந்து கிடந்த பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி முதல் வைத்தியலிங்கம் தொடங்கி விஜயபாஸ்கர் வரை வழக்கை துரிதப்படுத்தும் திமுக அரசு எடப்பாடி கே. பழனிச்சாமி மீதுள்ள கொடநாடு கொலை வழக்கு முதல் டெண்டர் முறைகேடு வழக்கு வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது ஏன்? என்பதே மிஸ்டர் பொதுஜனம் கேட்கும் எழு வினாவாகும்
கருத்துகள்