நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் மாதம் துவங்கிய நிலையில் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெறும் நடப்பாண்டின் இறுதிக் கூட்டத்தொடராகும்.
பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியமைத்த பின்பு நடைபெறும் முதல் குளிர்கால கூட்டமுமாகும். இந்தக் கூட்டத்தில் அதானி முறைகேடுகள் குறித்த விவகாரம் மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் உள்ளிட்ட பல மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பல நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. எனினும் கேள்வி பதில் நேரங்களில் நாட்டிலுள்ள வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து கேள்வி மற்றும் பதில்கள் தெரிவிக்கப்படுகின்றன.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல கேள்விகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றனர். நேற்று நடந்த நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தில் அரசியல் சாசனம் குறித்த விவாதம் நடந்தது. விவாதத்தின் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசும் போது பாரதிய ஜனதா கட்சி ஒரு தீய சக்தி எனக் குறிப்பிட்டார், அரசியலமைப்பு விவாதத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதாவது :-
1947 ஆம் ஆண்டு இந்தியா துண்டாக்கப்பட்டது. இந்தப் பிரிவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பே விதை போடப்பட்டது. இந்தப் பிரிவினைக்கு ஏற்பாடு செய்தது முகமது அலி ஜின்னா கிடையாது. 1929 ஆம் ஆண்டு சாவர்க்கர் தான் இரு தேசக் கோட்பாட்டை முன்மொழிந்திருந்தார். இந்துக்களுக்கு என தனி இராஷ்ட்டிரம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் அவர் திடமாக இருந்து வந்தார் என ஆ ராசாவின் சாவர்க்கர் குறித்த பேச்சு நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியது. பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிக்கிட்டுப் பேசியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவிய போது அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆ ராசாவை நோக்கி கடுமையாகவே பேசினார். அதை கண்டு கொள்ளாமல் மேலும் பேசிய போது RSS ஐச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் என்ன பங்கு வகித்தார்கள்?
இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்து கொண்டது.
அப்போது பேசிய அவர், "அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் டாக்டர் ராதாகிருஷ்ணன், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவகர்லால் நேரு, சரோஜினி நாயுடு உள்ளிட்ட பலர் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
ஆனால், உங்களின் (பாரதிய ஜனதா கட்சி) முன்னோடிகளான ஆர்.எஸ்.எஸ். இந்து மகா சபாவைச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் என்ன பங்கு வகித்தார்கள்?
பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத்சிங், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ஆகியோர் அரசியலமைப்புச் சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள் மதச்சார்பின்மை உட்பட..
ஆனால் அரசியல் சாசன பதவியின் 2-ஆம் இடத்தில் இருப்பவர் முன்பு ஒரு மாநாட்டில் அரசியலமைப்பு சாசனத்தின் அடித்தளத்தை மாற்ற விரும்புகிறோம் என்று கூறினார்.
உங்கள் கட்சியில் தலைவர் ஒருவர் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நாங்கள் 400 இடங்களை வென்றால் இந்த நாட்டை இந்து நாடாக மாற்றுவோம் என்று தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான ஒரு வழக்கை 1973 ஆம் ஆண்டு 13 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. அதன் தீர்ப்பு 1500 பக்கங்களில் உள்ளது. அந்தத் தீர்ப்பை நான் பலமுறை சட்ட மாணவராக இருந்தபோது படித்திருக்கிறேன்.
அரசியலமைப்புச் சட்டத்தில் நீங்கள் பல திருத்தங்கள் செய்யலாம். ஆனால் அதன் அடித்தளத்தை நீங்கள் மாற்றக்கூடாது. அந்த வழக்கின் சாராம்சத்தை நான் குறிப்பிடுகிறேன். அரசியலமைப்பில் 6 முக்கியக் கூறுகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். 1. ஜனநாயகம் 2. மதச்சார்பின்மை 3. நாட்டின் சட்டம் 4. சமத்துவம் 5. கூட்டாட்சி 6. பாரபட்சமில்லாத நீதித்துறை. இந்த 6 கூறுகளும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஆபத்தில் உள்ளது. அதற்கு எதிராகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகியவை அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. அது தான் உங்களில் கைகளிலிருந்து இந்த நாட்டை காப்பாற்றி கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டது. இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. ஆனால் இப்போது இப்படிப்பட்ட தீய சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள் என்று அம்பேத்கர் நினைக்கவில்லை" என்று தெரிவித்தார்.
பாஜகவை தீய சக்தி என்று ஆ. ராசா குறிப்பிட்டதற்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனையடுத்து பாஜகவை தீயசக்தி என்று ஆ ராசா குறிப்பிட்ட வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுமென்று அவைத்தலைவர் தெரிவித்தார். இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினர் எனும் பாகுபாடில்லை: பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அரசியலமைப்புச் சட்ட விவாதத்தை மக்களவையில் தொடங்கிவைத்து உரையாற்றியபோது “நமது அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய அரசியலமைப்பு மட்டுமல்ல, உலகின் மிக அழகான அரசியலமைப்பும் கூட. ஆனால் இங்கே ஒரு கதை உருவாக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள கொள்கை பகுப்பாய்வு மையத்தின் கணக்கெடுப்பின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் 48% மக்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.பிரான்சில், முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக பல அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலையில் முக்காடு அல்லது பர்தா அணிந்து சென்றால் அதற்கு மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதுதான். இதன்மூலம் முஸ்லிம்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக அந்த அறிக்கைகள் கூறுகின்றன. ஸ்பெயினில் முஸ்லீம்களுக்கு எதிரான உள்நாட்டு வெறுப்பு குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இதுவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக என்ன நடந்தது குறிப்பாக அங்கு இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். திபெத், மியான்மர், இலங்கை, வங்காள தேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறை அல்லது ஏதேனும் பிரச்சினை எழுந்தால், அவர்கள் முதலில் பாதுகாப்பு கோரும் நாடு இந்தியாதான். ஆப்கானிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்களின் மக்கள்தொகையின் நிலை என்ன என்பது நமக்குத் தெரியும். அவ்வாறு இருக்க, இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று ஏன் சொல்லப்படுகிறது. நாட்டின் நன்மதிப்பை பாதிக்கும் இதுபோன்ற விஷயங்களில் கவனமாகப் பேச வேண்டும். இதை நான் எந்த ஒரு கட்சிக்காகவும் கூறவில்லை. இதை நான் நாட்டுக்காகவே சொல்கிறேன் உலகின் பிற பகுதிகளில் உள்ள சிறுபான்மையினருக்கு வாக்களிக்கும் உரிமை எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு அனைவருக்கும் சம உரிமையை இந்தியா உறுதி செய்தது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு இல்லை. ஜனநாயகத்தில் இந்தியாவுடன் யாராலும் போட்டியிட முடியாது.” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்