திருப்பரங்குன்றம் மலைக்கு மதுரை திருஞானசம்பந்தர் மடத்தின் ஆதீனம் மற்றும் பாஜக வேலூர் இப்ராஹிம் செல்வதற்கு திடீர் தடை
திருப்பரங்குன்றம் மலைக்கு மதுரை திருஞானசம்பந்தர் மடத்தின் ஆதீனம் செல்வதற்கு திடீர் தடை விதிப்பு. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலுக்கு மதுரை திருஞானசம்பந்தர் மடத்தின் ஆதீன கர்த்தார் செல்வதற்கு காவல்துறை தடை விதித்தனர். அது குறித்து ஆதீனம் கருத்துத் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்வதற்காக சனிக்கிழமை மதுரை திருஞானசம்பந்தர் மடத்தின் ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் செல்லவிருந்தார். அவர் மலைமீது சென்று வழிபாடு செய்ய காவல்துறையினர் தடை விதித்தனர். அதனால் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பயணத்தை ரத்து செய்தது குறித்து மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்
செய்தியாளர்களிடம் கூறுகையில்:- “திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று சனிக்கிழமை வழிபாடு செய்யத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், காவல்துறை என்னை வரக்கூடாதெனத் தடுத்துவிட்டனர். மாற்று சமயத்தினர் தகராறு செய்து விடுவார்கள் என காவல்துறையினர் அச்சப்படுகிறார்களா எனத் தெரியவில்லை. அதற்கு நான், ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாக வழிபாடு செய்ய, குவலயத்தில் ஒரு வழி பிறக்கும் என்று சொன்னேன். புலவர் நக்கீரன் கூட முருகனைப் பற்றித்தான் பாடியிருக்கிறார். சிக்கந்தர் மலையைப் பற்றி பாடவில்லை. மகாகவி பாரதியார் கூட 'அண்டிப் பிழைக்கும் ஆடு; அதனை ஆதரிக்க வேண்டுமடி பாப்பா' என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் ஆட்டைக் கொண்டு சென்று அறுத்துச் சாப்பிடச் சொல்லவில்லை. திருப்பரங்குன்றம் முருகன் மலைதான் என இலக்கியங்களும், நக்கீரரும் குறிப்பிடுகின்றனர்.
மலைக்கு மேலேயும், கீழேயும் சைவ வழிபாட்டு ஸ்தலம் இருக்கும் போது இடையில் உள்ள தர்காவில் வழிபாடு நடத்தத் தவறில்லை. ஆனால், அசைவ உணவு கொண்டு சென்று சாப்பிடலாமா? மலை என்ன கசாப்புக் கடையா? மலையில் ஆட்டை அறுத்து வழிபாடு நடத்தக்கூடாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு மதத்தினரைப் புண்படுத்தும் வகையில் யாரும் நடக்கக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அசைவ உணவு சாப்பிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றது தவறு.
ஆதீன மடத்தில் இரண்டு மாதத்துக்கு முன்பு ஒருவன் வேலைக்குச் சேர்ந்தான். அவன் என்னை திருச்சிராப்பள்ளி அருகே கொலை செய்ய முயற்சித்தார். அதனால் வேலையை விட்டு அனுப்பி விட்டேன். அவன் தீவிரவாதியாக இருப்பாரோ எனச் சந்தேகமாக உள்ளது. மக்கள் அவரவர் சமயத்தில் வழிபாடு நடத்த, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு எனது சிறந்த நண்பர். காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜையும், பள்ளிவாசலில் தொழுகையும் மட்டும் நடத்த அனுமதிக்க வேண்டும், அவரவர் மத வழிபாட்டைத் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் அவர் கூறினார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை தொகுதி திமுகவின் சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் சமது, மற்றும் வக்ஃபு வாரியத்தின் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி ஆகியோர் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று, தர்கா பகுதியை ஆய்வு செய்தனர். நவாஸ்கனியுடன் மலைக்கு சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மலைக்கு போகும் படிக்கட்டில் அமர்ந்து பிரியாணியை சாப்பிட்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ள
சர்ச்சைக்கு மத்தியில் பாஜகவின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா உள்ளிட்ட பலர் மலை மீது சென்று பார்வையிடார்கள். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிமை கைது செய்தனர். அதற்கு, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வேறு நிகழ்ச்சி ஒன்றுக்கு இப்ராஹிம் சென்றிருந்த போது
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பள்ளிவாசலில் வழிபாடு செய்வதற்காகவும் செல்வதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதையறிந்த காவல்துறை அலுவலர்கள், ஜெய்ஹிந்த்புரத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்த இப்ராஹிமை மலைக்குச் செல்லக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே பாஜகவினர் தங்களை மலைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். அதனால் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, வேலூர் இப்ராஹிம், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியின் புகைப்படத்தில் கால் செருப்பை எடுத்து அடித்து தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதையடுத்து, வேலூர் இப்ராஹீமை கைது செய்தனர். இந்தகா கைது நடவடிக்கைக்கு அங்கிருந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தும், இப்ராஹிமை விடுவிக்கக்கோரியும், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய வாசலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி கலைந்துபோகச் செய்தனர். இறுதியில் பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேரையும் கைது செய்தனர்.
கருத்துகள்