வழிப்பறிக்கு உதவிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் சொகுசு பங்களாவில் சைதாப்பேட்டை SSI . ரூபாய் 20 லட்சம் வழிப்பறிக்கு இவர் தான் மூளையாகச் செயல்பட்டாராம்
. சென்னையில் ரூபாய் 20 லட்சம் வழிப்பறி செய்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட மற்றொரு சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனை அருகில் முகமது கௌஸ் என்பவரிடமிருந்து ரூபாய் 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், ஏற்கனவே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங்,
வருமான வரித்துறையின் கண்காணிப்பாளர் பிரபு, வருமான வரித்துறையின் ஆய்வாளர் தாமோதரன், வருமான வரித்துறை அலுவலர் பிரதீப் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டதில் சிறப்புக் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன் ஆகிய இருவரையும் சிறையிலிருந்து மூன்று நாட்கள் காவல்துறை விசாரணைக்கு எடுத்து நடத்திய விசாரணையில் இவர்களுக்கு மூளையாகச் செயல்பட்டது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பணி செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பது தெரிய வந்தது.
தாமோதரன் மற்றும் ராஜா சிங் ஆகியோர் மூன்று மாதங்களில் நான்கு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு ரூபாய் ஒரு கோடி வரை பணம் வழிப்பறி செய்தது தெரிய வந்தது. SSI சன்னி லாய்டு தனியாக ஐந்தாண்டுகளுக்கு மேலாக வழிப்பறி செய்து வந்துள்ளார். சன்னி லாய்டு வழிப்பறி செய்த பணத்தில் திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பகுதியில் ஒரு அதிநவீன உடற்பயிற்சி கூடம் அதாவது ஜிம் அமைத்திருப்பதும், கிழக்குக் கடற்கரை சாலையில் நீலாங்கரை பகுதியில் ரிசார்ட் வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், சன்னி லாய்டு பூக்கடை காவல் மாவட்டத்தில் பணிபுரிந்த போது தொடர் வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு மூன்று முறை பணியிடை நீக்கமும் செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் கிடைத்த கூடுதல் தகவல். மொத்தமாக திருவல்லிக்கேணி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங், சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு, வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரன், வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமான வரித்துறை அலுவலர் பிரதீப் ஆகிய ஐவரும் இணைந்து
பூக்கடை, இராயபுரம், நேப்பியர் பாலம், திருவல்லிக்கேணி, ஜாம் பஜார் பகுதிகளில் தொடர் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்டதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் SSI சன்னி லாய்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்த நிலையில்
அவர் கடந்த இரு தினங்களாக தலைமறைவாகி உள்ளார். அவரது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது அதனால் SSI சன்னி லாய்டை பிடிக்க காவல்துறையினர் தேடுதலில் இறங்கியுள்ளதாகத் தகவல். காவல்காரரே இங்கு களவாணியாக மாறும் நிலையில் "தோட்டம் காக்க போட்ட வேலி
பயிரைத் தின்பதோ?
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல்
பார்த்து நிற்பதோ?" சட்டப் படி தண்டனை என்பது தான் பொது நீதி எதிர் பார்க்கும் சாமானியன் குரல்
கருத்துகள்