மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவின் அறிக்கையில்
கூறியுள்ளதாவது:- , 2024 டிசம்பர் 4 ஆம் தேதியில் திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோவில் தெருவில் புதியதாக மலைமேலுள்ள தர்காவில் கந்தூரி செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன என்ற வாசகம் பொருந்திய அறிவிப்புப்பலகையினை தர்ஹா மேனேஜிங் டிரஸ்டியினரால் வைக்கப்பட்டுள்ளதாக, திருக்கோவில் மூலம் திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் மேற்படி வாசகம் நீக்கம் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலையில் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதியில் காலை 09.00 மணியளவில் கந்தூரிக்கு (ஆடு பலியிடுதல்) கொடுப்பதற்கு 5 நபர்கள் மலையேறச் சென்றபோது அங்கு பணியிலிருந்த காவலர்கள் தடுத்ததால், கந்தூரி கொடுப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதன் பேரில், டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில் அமைதிக்குழுவின் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டதில் ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் நடைமுறையிலுள்ள வழிபாட்டு முறைகளை இந்த ஆண்டிலும் தொடர வேண்டும் என்றும், மேற்படி மலை மீது கந்தூரி கொடுக்கும் நடைமுறை தொடர்பாக, போதிய ஆதார ஆவணங்களை மேற்படி தர்கா
தரப்பினர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை ஆகியோரால் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால் இந்நேர்வு தொடர்பாக உரிய நீதிமன்றத்தின் மூலமாக பரிகாரம் தேடிக்கொள்ளவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால், மேற்படி தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்து திருப்பரங்குன்றம் ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்ஹா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தீர்மானத்தில் கையொப்பம் செய்யாமல் சென்று விட்டனர்.
மேலும், ஜனவரி மாதம் 18 ஆம் தேதியில் சந்தனக்கூடு விழாவினை முன்னிட்டு, திருப்பரங்குன்றம், ஹஸ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் மலையின் மீது உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலில் கந்தூரி (ஆடு பலி) கொடுப்பதற்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. மேற்படி கோரிக்கை மறுக்கப்பட்டது. எனினும், மேற்படி நபர்கள் கந்தூரி கொடுக்க முற்பட்டனர். மேற்கண்ட நபர்கள் பெரிய இரதவீதியில் வந்த போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையிலிருந்து வருகிறது.
அதே நாளில் ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 200 நபர்கள், அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், தலைமையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியினருடன் திருப்பரங்குன்றம் எஸ்.பி. மஹாலில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு, அனுமதி பெறாமல், திருப்பரங்குன்றம் கோவில் வந்து திரும்பியபோது, அவர்களுக்கு எதிராக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையிலிருந்து வருகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஜனவரி மாதம் 27 ஆம் தேதியில் திருப்பரங்குன்றம் அனைத்து கட்சி நிர்வாகிகள் என்று திருப்பரங்குன்றம் கிராமத்தைச் சார்ந்த 11 நபர்கள் தங்களது கிராமத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், வெளி நபர்கள் யாரும் தங்களது ஊரில் நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகள் குறித்து தலையீடு செய்யாமல் இருக்க வேண்டுமென வேண்டி மனுகா கொடுத்தனர் .எனவே, மத நல்லிணக்கத்தை பேணும் பொருட்டும், அசாதாரண சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது என்பதாலும், பொது அமைதியினை பாதுகாக்கும் பொருட்டும், மனித வாழ்வு, பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டும், மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளிநபர்கள் யாரும் பிரவேசிக்காத வகையில் திங்கள்கிழமை (பிப்ரவரி. 3 ஆம் தேதி) காலை 06.00 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 12.00 மணிவரை இரண்டு நாட்களுக்கு மட்டும், 163 BNSS (144 CrPC) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்து சில ஹிந்து அமைப்பினர் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கின் உத்தரவில் பழங்காநத்தம் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை மாலை 05.00 மணி முதல் மாலை 06.00 மணிவரை ஆர்பாட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.
அதன்படி, மேற்படி இடத்திற்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு, ஹிந்து முன்னணியின் மாநில இணை அமைப்பாளர் தலைமையில் சுமார் 3000 நபர்கள் கலந்து கொண்டு, ஆர்பாட்டம் முடிந்து கலைந்து சென்றனர்.
திருப்பரங்குன்றம் கிராம பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும், மதச்சார்பின்றியும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், வெளியூரைச் சேர்ந்த இரு தரப்பைச் சார்ந்த அமைப்பினர்கள் அப்பகுதி மக்களுடைய பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிப்பதை கட்டுப்படுத்தவும், பொது அமைதி மற்றும் மத நல்லிணகத்தை பேணவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள்