ஜாதி இளைஞரின் சாவில் நீதி கேட்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ்
தருமபுரி மாவட்டம் சிங்காபுரம் வனப் பகுதியில் யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தப்பியோடியதாகக் கூறப்பட்ட ஏமனூர் இளைஞர் மர்மமான முறையில் உயிர் இழந்ததற்கு சிபிஐ விசாரணை வேண்டுமென்று பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் அறிக்கை.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனப் பகுதியில் தந்தங்களுக்காக ஒரு யானை கொல்லப்பட்டு உடல் எரிக்கப்பட்டதாக ஊடக செய்தி.
தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள நெருப்பூர் வனப் பகுதியில் இச் சம்பவம் நடைபெற்றதாக அச் செய்தியில் கூறப்பட்டது.
"மார்ச் மாதம் 1-ஆம் தேதி அதிகாலையில் யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. யானையின் இறப்பு தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் யானை களிறா, பிடியா என்பது தொடர்பான தகவலும், யானை துப்பாக்கியால் சுடப்பட்டதா என்பது தொடர்பான தகவலும் அதில் இடம் பெறவில்லை எனக் கூறி வனநல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தும் நிலையில். யானையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கழித்தே அறிக்கை சமர்பிக்கப்பட்டது ஏனென்றும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாகப் பேசிய வனத்துறையினர், "தந்தங்களை எடுப்பதற்காகவே யானையின் தும்பிக்கை வெட்டப்பட்டது. யானையின் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் இருப்பதை உறுதி செய்வதற்கான 'மெட்டல் டிடெக்டர்' சோதனைகளை மேற்கொள்ள இயலாத வகையில் யானையின் உடல் எரிக்கப்பட்டு விட்டது," என்று கூறியதாக அதோடு, இதை விசாரிப்பதற்காக மூன்று சிறப்பு வன தனிப்படையினர் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பென்னாகரம் வனச் சரகத்தில் யானை வேட்டையைத் தடுக்கத் தவறிய வனவர் மற்றும் வன காப்பாளர் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தில் சுமார் 1,700 சதுர கிலோமீட்டர் வனக் காப்பு காடுகளாகும். கர்நாடக மாநிலத்தை ஒட்டிய பகுதிகளாகவும் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்ட எல்லைப்புற காடுகள் ஒன்றினையும் பகுதிகளாகும்.
பென்னாகரம் காப்புக்காட்டில் அதிக அளவு யானைகளும், புள்ளி மான்களும், மயில்களும் உள்ளன. வழக்கமாக கோடைக் காலங்களில் யானைகள் மற்றும் காட்டுப்பன்றி, செந்நாய் போன்றவை தண்ணீர் தேடி காடுகளை விட்டு வெளியேறும் சம்பவங்கள் நடக்கும்.
வனத் துறை சார்பில் காடுகளின் மையப்பகுதியில் குளங்கள் ஏற்படுத்தி தண்ணீரை வழங்குவர். கோடை காலங்களில் யானைகள் காடுகளில் இருந்து வெளியேறி ஒகேனக்கல் பிரதான சாலையைக் கடந்து செல்வதும் வழக்கம். பென்னாகரம் வனசரகம் மேட்டூர் அணை வரை நீண்டு செல்லும் நிலையில், பன்னவாடி காப்புக்காடு சரகத்தில் யானை ஒன்று கடந்த ஒன்றாம் தேதி இறந்து எரிந்த நிலையில் கிடந்த யானையின் தும்பிக்கை தனியாகவும், உடல் தனியாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.தொடர்பாக பென்னாகரம் வனச் சரக அலுவலர் தகவலின் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர், கால்நடை மருத்துவர், வனசரக அலுவலர், வனப் பணியாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது யானை வேட்டையாடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வன உயிரினக் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், யானை வேட்டையைத் தடுக்க தவறியதாக நெருப்பூர் பிரிவு வனவர் சக்திவேல், ஏமனூர் பீட் வனக்காப்பாளர் தாமோதரன் உள்ளிட்டவர்கள் பணியிடை நீக்கம் செய்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டார்.
யானையை வேட்டையாடியவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க 3 தனிக்குழுக்கள் உதவி வன பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு வெளியிட்ட அறிக்கையில்
"தருமபுரி காட்டில் வனத்துறையினரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை: சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்!
தருமபுரி மாவட்டம் கொங்காரப்பட்டி கிராமத்திலிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் என்ற இளைஞரை வனத்துறையினர் கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மிகக் கொடூரமான முறையில் செந்தில் கொலை செய்யப்பட்டதற்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் ஏராளமான இருக்கும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக வனத்துறை பொய்க்கதை புனைவதும், அதற்கு காவல்துறை துணைபோவதும் கண்டிக்கத்தக்கது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொங்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். கொத்தனாராக பணி செய்து வரும் செந்திலையும், அவரது தந்தை கோவிந்தராஜ், சகோதரர் சக்தி ஆகியோரை கடந்த மார்ச் மாதம் 17-ஆம் நாள் பென்னாகரம் வனக்காவல் நிலையத்திற்கு வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பின் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவர்களின் குடும்பத்தினர் இது குறித்து தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 19-ஆம் நாள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து சக்தியை அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். அதேநேரத்தில், ஏமனூர் வனப்பகுதியில் யானை ஒன்று கொல்லப்பட்டு, அதன் தந்தம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், செந்தில் அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் ஒப்படைக்கவில்லை. யானை கொல்லப்பட்ட இடத்தில் விசாரிப்பதற்காக கைவிலங்குடன் அழைத்துச் சென்ற போது அவர் தப்பி ஒடிவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
அதன்பின், 15 நாட்கள் கழித்து கொங்காரப்பட்டி வனப்பகுதியில் செந்திலின் உடல் கிடைத்ததாக வனத்துறையினர் கூறியுள்ளனர். அவர் வனத்துறையினரால் கொடுமைப்படுத்தி பின்னர், சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால், வனத்துறையோ, தங்களின் பிடியிலிருந்து தப்பி ஓடிய செந்தில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக விளக்கமளித்திருக்கிறது. வனத்துறையினர் தெரிவித்திருக்கும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
செந்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நாள் முதல் நடந்த நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது அவர் வனத்துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாகவே உள்ளது. செந்திலின் மர்ம மரணம் குறித்து கீழ்க்கண்ட சந்தேகங்கள் எழுகின்றன.
1.விசாரணை என்ற பெயரில் செந்திலை மார்ச் மாதம் 17-ஆம் தேதி அழைத்த வனத்துறையினர், அவர் குறித்த விவரங்களையோ, அவர் கைது செய்யப்பட்டதையோ 19-ஆம் தேதி வரை குடும்பத்தினருக்கு தெரிவிக்காதது ஏன்?
2.விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கு அடுத்த நாளே, செந்திலை வனத்துறையினர் கொலை செய்து வனப்பகுதியில் வீசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 18-ஆம் தேதி முதல் செந்திலின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி வரை கொங்காரப்பட்டி வனப்பகுதியில் எவரும் நுழையாமல் வனத்துறை தடுத்து நிறுத்தி வைத்திருந்தது இந்த ஐயத்தை உறுதி செய்கிறது. செந்திலின் உடல் அழுகிவிட்டால் அவர் கொடுமைப்படுத்தப்பட்டதை நிரூபிக்க முடியாது என்பதற்காகவே வனத்துறையினர் இவ்வாறு செய்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
3.செந்தில் தப்பி ஓடி தற்கொலை செய்து கொண்டிருந்தால், அவரது கை விரல்களின் நகங்கள் மாயமானது எப்படி? உடல் அழுகினாலும் நகங்கள் உதிராது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வனத்துறையினர் சித்திரவதை செய்து செந்திலின் நகங்களை பிடுங்கியதாகக் கூறப்படுகிறது.
4.கைவிலங்குடன் தப்பி ஓடிய செந்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது கைகளில் விலங்கு இல்லாதது எப்படி?
5.வனத்துறை பிடியிலிருந்து காட்டுக்குள் விலங்குடன் தப்பி ஓடியதாக கூறப்பட்ட செந்திலின் கைகளில் துப்பாக்கி கிடைத்தது எப்படி?
இந்த வினாக்கள் எதற்கும் விடையளிக்க வனத்துறை மறுக்கிறது. இது தொடர்பாக காவல்துறையில் செந்திலின் மனைவி சித்ரா புகார் அளித்துள்ள போதிலும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. வனத்துறை அலுவலர்கள் குறித்த பல இரகசியங்கள் செந்திலுக்குத் தெரியும் என்றும், அவற்றை செந்தில் வெளியில் கூறி விடுவார் என்ற அச்சத்தில் தான் அவரை வனத்துறையினர் படுகொலை செய்து விட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகின்றனர். வனத்துறையினரின் இந்த நாடகத்துக்கு தருமபுரி மாவட்ட காவல்துறையினரும் துணை போவதை மன்னிக்கவே முடியாது.
2020-ஆம் ஆண்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் எவ்வாறு விசாரணை என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டார்களோ, அதேபோல் தான் செந்திலும் வனத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறையினர் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சாத்தான்குளம் காவல்நிலைய கொலை வழக்கைப் போலவே இந்த வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். கொல்லப்பட்ட செந்திலின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய்.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
கருத்துகள்