திருக்கோஷ்டியூரில் வெள்ளிக்கிழமை மஹா சம்ரோக்ஷ்ன விழா
"குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களுக்கனுகூலராய் செற்றமொன்றுமிலா தவண்கையினார் கள்வாழ்திருக்கோட்டியூர் துற்றயேழுலகுண்ட தூமணிவண்ணம் தன்னைத்தொழாதவர் பெற்றதாயார் வயிற்றினைப் பெருநோய் செய்வான் பிறந்தார்களே."..பெரியாழ்வார்.
ஸ்ரீ வைகுண்டபதியான சர்வேஸ்வரன் அடியார்களைக் காத் தல் பொருட்டு அவனிருப்பை விட்டு உலகத்திலுள்ள கோயில்களில் அர்ச்சாரூபியாய் எழுந்தருளியுள்ளான். அங்ஙனம் எழுந்தளி யுள்ள திருக்கோயில்களுள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திவ்விய தேசங்கள் 108, ல் தண்ணார் தமிழளிக்கும் தன் பாண்டிய நாட்டிலிருப்பவை 18 வைணவத் திருப்பதிகள். "ஈரொன்பதாம் பாண்டி" எனக் கூறப்பட்டிருக்கிறது. திருக்கோஷ்டியூர் இப் 18 ல் ஒன்று. 1720 ஆம் ஆண்டில் சேதுபதி சமஸ்தானம் மதுரை ஜில்லா அமராவதி தாலுகா, 1865 ஆம் ஆண்டில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் இராமநாதபுரம் ஜில்லா எழுவன்கோட்டை தாலுகா பின்னர் 1984 வரை இராமநாதபுரம் மாவட்டம் திருப்புத்தூர் தாலுகா என மாறியதில் தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது இதற்குக் கோஷ்டிபுரம் என்ற பெயரும் உண்டு.கோட்டம் (கோயில்) உள்ள ஊர் கோட்டியூர் என்றும் அழைக்கும் நிலையில், திருமால், நான்முகன், உருத்திரன், இந்திரன் முதலியவர்கள் ஹிரணியனை வதம் செய்யும் பொருட்டுக் கோஷ்டி கூடி ஆராய்ந்த இடமென்றும், ஆதலால் இதற்குத் திருக்கோஷ்டியூர் எனப் பெயர் ஏற்பட்டதென்றும் கூறுவர். நம்முடைய பாவங்களாகிய திருக்கை ஓட்டும்படியான ஊர் என்றும் சொல்லுவர் இந்த ஸ்தலத்தைப் பற்றிய அந்தாதிப் பாடலில் அழகிய மணவாள தாசர் எனும் திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார் "ஆசைத் திருக்கோட்டி ஆள்'' என்று எம்பெருமானை வேண்டுகிறார்.
பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமழிசை யாழ்வார். திருமங்கையாழ்வார் எனும் 5 ஆழ்வார்களும் இத்த ஸ்தலத்து எம்பெருமான் மீது பாசுரங்கள் அருளிச்செய்துள்ளனர். 'வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர், 'வண்கை யினார் வாழ்திருக்கோட்டியூர்', செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்', 'செங்கண்மால் திருக்கோட்டியூர்' என்றெல்லாம் அவர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளார்கள். கோட்டியூர் எம்மானை நினையாதவர்களைப் 'பூமி பாரங்கள் ' என்றும், அம் முதல்வனைச் சிந்தியாதவர்கள் "பெற்றதாய் வயிற்றில் பெருநோய் செய்வான் பிறந்தார்கள் " என்றும் வியந்தோதியுள்ளனர்.
திருக்கோட்டியூருக்கு நடுநாயகமாய் விளங்குவது திருக் கோயில் கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அழகாகத் திகழ்கிறது. இங்குள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் பிரசித்திபெற்றதும், தனிச்சிறப்பு வாய்ந்ததுமாகும். மூலைக்கு இரண்டாக எட்டு விமானங்கள் உள்ளன. இவை அஷ்டாக்ஷரத்தைக் குறிக்கும் என்பர். இந்த விமானம் ஒன்றின்மேல் ஒன்றாக மூன்று தளங்களையுடையது. முதல் தளத்தில் திருப்பாற்கடல் நாதன் சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். உரகமெல்லணையான் என்பர் பெரியாழ்வார். நடுத்தளத்தில் சீதேவி, பூதேவிகளோடு நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.
மேல்தளத்தைப் பரமபதம் என்பர். அங்கு சீதேவி பூதேவி களுடன் எம்பெருமான் வீற்றிருந்த திருக்கோலத்தில் அருள்புரி கிறார். முதல் தளத்திற்கடியில் நடன கிருஷ்ணன் சந்நிதியிருக் கிறது. வடக்குப் பிரகாரத்தில் ஓடும் இரணியனைப் பிடித்துப் போர் செய்யும் 15ரசிங்கப்பிரான் திருவுருவம் இருக்கிறது. அடியில் கூத்தாடிய கிருஷ்ணன், அதற்குமேல் கிடந்தும், அதற்குமேல் நின்றும், அதற்குமேல் இருந்தும், ஓடும் இரணியனைப் பிடிக் கையில் நடந்தும், என்ற இவ்வகையான ஐந்து திருக்கோலங்களில் இங்கு இறைவனைக் காணலாம்.
எம்பெருமான் திருநாமம் ஸ்ரீ சௌமிய நாராயணன் : தேவியின் திருப்பெயர் திருமாமகள் நாச்சியார். இங்கு இந்திரனுக்கும் அடைக்கலம் காத்தவரான கதம்ப மகரிஷிக்கும் பிரத்தியட்சம். தீர்த்தம் தேவபுஷ்கரணி, மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் எல்லாம் சிறந்து விளங்குகின்றன.
ஸ்ரீபாஷ்யக்காரரென்றும் இராமாநுஜரின் குருவான திருக்கோஷ்டியூர் நம்பிகளின் அவதார ஸ்தலம் இதுவே. ஸ்ரீரங்கத்திலிருந்து இவ்விடத்துக்கு பதினெட்டு முறை வந்து நம்பிகளிடம் இராமாநுஜர் அஷ்டாக்ஷரத் திருமந்திரார்த்த உபதேசத்தைப் பெற்றார். அந்த திருமந்திரத்தை எவருக்கும் சொல்லுதல் கூடாது. அப்படிச் சொன்னால் நரகமே கதி என்பது குரு ஆணை. ஆனால், எட்டெழுத்து மந்திரத்தைக் கேட்டவர் முக்தியடைவார்கள் என்பதை எண்ணி. தமக்கு மாத்திரம் தான் நரகம் கிடைத்தாலும் கேட்ட எல்லோருமே முக்திபெறுவறன்றோ என்ற பரந்த நோக்கத்துடன் விமானத்தில் ஏறி எல்லோரையும் அறைகூவியழைத்து "ஓம் நமோ நாராயணாய" என்ற எட்டெழுத்து மந்திரத்தை வெளிப்படையாக உபதேசித்தார். இதை உணர்ந்த இவருடைய திருவுருவம் விமானத்தின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோயிலில் சரவேஸ்வர மூர்த்தி சந்நிதியும் உள்ளது நந்தி, விநாயகர் முதலியோரும் உள்ளனர். ஆதலின் வைணவ ஒற்றுமைக்கு இக் கோயில் நிலைக்களனாகவும் விளங்குகின்றது. 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'என்ற உண்மையை வற்புறுத்தும் வகையில் அமைந்துள்ள,
இந்தக் கோயில் தற்போது சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாக ஆட்சியிலுள்ளது, அரசாங்க மான்யத்தையும் மக்கள் நன்கொடைகளையும் ஆலய நிதியையும் கொண்டு திருப்பணி செய்யப்பெற்று சமஸ்தான தேவஸ்தானத்தாரால் மகா சம்ப்ரோக்ஷ்ணம் 06.02.2026 ல் வெள்ளிக்கிழமை செய்யப்பெறுகிறது
"எங்களெம்மிறையெம்பிரா னிமையோர்க்கு நாயகன் ஏத்தடியவர் தங்கள் தம்மனத்துப் பிரியாதருள் புரிவான் பொங்கு தன்னருவி புதம்செய்யப் பொன்களே சிதறுமிலங்கொளி செங்கமலமலரும் திருக்கோட்டியூரானே.... " -திருமங்கையாழ்வார்.
இந்த ஸ்ரீ சௌமியநாராயணப்பெருமாள் கோவில் சிவகெங்கை தேவஸ்தானத்தைச் சேர்ந்தது. சில மாதங்களாக இக்கோயிலில் பல திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்றன. விமான தங்கக் கவசம் பொருத்தப்பட்டு ஜீரணோத்தாரண கும்பாபிஷேகம் 26-3-1961 ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வு போல வெள்ளிக்கிழமை எம்பெருமான் திருவருளால் நடைபெறுகிறது.
இந்த விசேஷ வைபவத்தில் கும்பாபிஷேக நினைவாகவும், உரகமெல்லணையான் உறையும் ஊரின் சிறப்பினை அன்பர்கள் அனுபவிக்கவேண்டும் என்ற பெருவிருப்பாலும், இங்கு நேரில் சென்று பக்தர்கள் தரிசிக்கலாம்
திருக்கோஷ்டியூர் ஸ்தல புராண வரலாறு:-
மணிமுத்தாற்றின்கரையிலுள்ள இந்த ஸ்தலமானது முற்காலத்தில் கதம்ப மஹரிஷியின் புண்ணியமான ஆசிரமமாயிருந்தது. ஹிரணியாசுரன் மூவுலகத்தையும் ஆட்சி செய்து தேவர்களைத் துன்புறுத்தி வருங்காலத்தில், மும்மூர்த்திகளும், மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் அவ்வசுரனை ஒழிப்பதற்கு ஒன்றுசேர விரும்பினர். கதம்ப முனிவர் உறைந்த இத்தத் திருத்தலத்தில் அரக்கன் எவனும் நுழைய முடியாது. அது கதம்ப முனியின் சாபம். எனவே மும்மூர்த்திகளும் தேவர்களும் தனித்து யோசனை செய்யத் தக்க இடம் இஃதென்று எண்ணி திருக்கோஷ்டியூரில் ஒன்று கூடினர்.திருமால் நரசிங்க ரூபம் எடுத்துத் தன் வாளுகிரினால் ஹிரணியனை வதம் செய்து முடிப்பதென்று முடிவு செய்தனர். முமமூர்த்திகளும் இங்கு கூடியதால் தான் இந்த் ஸ்தலத்திற்கு கோஷ்டீபுரம் எனப் பெயர் வந்தது.
இரணிய வதத்திற்குப் பிறகு கதம்ப முனிவர் பிரமனை அணுகி "ஸ்வாமி! சிங்கப்பெருமானாய் அவுணன் உடல் கீண்ட எம்பெருமானின் அழகுத் திருமேனியை அடியேன் தொழுதெழ விரும்பு கிறேன்" என்று பிரார்த்தித்தார். உடனே பிரமனது ஆணை மேற் கொண்டு மயனும், விசுவகர்மாவும் ஒரு திவ்யமான அஷ்டாங்க விமானத்தை சிருஷ்டி செய்தனர். அவ் விமானம் மூன்று தளங்கள் உடையதாய் கண்கவர் வனப்புடையதாய்த் திகழ்ந்தது.
தேவர்களின் நடுவிலிருந்ததால் 'ஸ்தித நாராயணன்' என்றும். ஆதிசேஷன் மேல் சயனித்திருப்பதால் "உரகமெல்லணையான்" என்றும், தென்றிசை நோக்கிய நரசிம்மனுக்கு ''தக்ஷிணேசுவரன்" (தெற்காழ்வான்) என்றும். வடதிசை நோக்கினதால் ''உத்தரேஸ்வரன் " (வடக்காழ்வான்) என்றும் அவர்களால் பெயரிட்டு அமைக்கப்பட்டது.
கதம்ப மகரிஷி உரகமெல்லணையானை ஆராதித்து வருங்கால், இந்திரன் வெள்ளியான், கரியான் என்றழைக்கப்படும் ஸ்ரீ செளமிய நாராயணப் பெருமாள் விக்ரஹத்தை ஸ்ரீ பூமிநீளைகளுடன் தேவ லோகத்தில் நின்றும் எழுந்தருளப்பண்ணி மஹரிஷியினிடத்தளித் தான். மேலும் சித்திரையில் சித்திரா நட்சத்திரத்தில் எம்பெருமானுக்குத் திருத்தேர் நடத்தி வைத்தான்.
பின் புரூரவன் என்ற அரசன் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டித் தேரின் மேலேறி யாத்திரையாகச் செல்லும் வழியில் கதம்ப முனிவரின் ஆசிரமத்துக்கருகில் அவ் வரசன் தேர்மேல் செல்லமுடியாதபடி தடுக்கப்பட்டது. அவ்வரசன் இறங்கிக் கதம்ப முனிவரையும் விமானத்தையும் கண்டு வியப்படைந்து, அம் முனிவரின் விருப்பப் படி இந்த ஸ்தலத்தில் அக்கிரஹாரம் உண்டுபண்ணுவதாக வாக் களித்து, கங்கைக் கரையை அடைந்து, அங்குள்ள பாகவதர்களான ஆயிரத்து ஐநூறு பேர்களை அழைத்துக்கொண்டு வந்து நகர் அமைத்தான்.சந்திர வம்சத்திலுதித்த "புண்ணியநிதி " என்ற ராஜன் யாத்திரையாக பல ஸ்தலங்களுக்குச் சென்று, இந்த க்ஷேத்திரத்துக்கு வந்து ஸ்ரீ கோஷ்டீநாதனைச் சேவித்து, தளத்தை அலங்கரித்து விமானத்தையும் கோபுரத்தையும் சீர் திருத்தி, உத்சவத்திற்காக லீலா மண்டபமும் கட்டி, பிரம்மோத்ஸவமும் நித்தியோத்ஸவமும் நடத்தி வைத்தான்.
சரித்திர வரலாறு:-
ஸ்ரீ வைஷ்ணவ தர்சன ஸ்தாபனாசாரியாரான ஸ்ரீ இராமாநுஜா சாரியார் காலம் சுமார் 800 ஆண்டுகட்கு முன் என்பர். இவர் திருக்கோஷ்டியூர் நம்பிகளைப் பார்க்க பதினேழு முறை வந்த போதும் நான் இராமானுஜன் வந்துள்ளேன் என்றபோது அவரைச் சந்திகாமலேயே "நான்செத்து நீவா"எனக் கூறிடவே பதினெட்டாவது முறை எழுந்தருளி அடியேன் ராமானுஜன் வந்துள்ளதாக தெரிவிக்க இறுதியில் நம்பியால் திருமந்திரார்த்தத்தை உபதேசிக்கப்பெற்றார். ஒருவருக்கும் சொல்லக்கூடாது என்ற நம்பியின் ஆணையை மீறி ஆசையுடையோர்க்கெல்லாம் இவ்வரும் பொருளை வழங்கினார். நம்பிகள் "இது அடுக்குமோ?'' என. இராமானுஜர் "ஆசார்யார் சொல்லைத் தடுத்ததாலுண்டான நரகம் என்னொருவனுக்கானால், இந்த மந்திரார்த்தத்தைக் கேட்ட அநேக ஆத்மாக்கள் மோக்ஷ மடைக" என்று பணிவாகப் பதில் உரைத்தார், நம்பியும் மனமுருகி இராமானுஜனை " எம்பெருமானாரே" என்று கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். நம்பி மாளிகை இன்றும் கோவில் தென்புறத்து அக்ரஹாரத்தில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் சிவகெங்கையிலிருந்து திருப்பத்தூர் போகும் சாலையில்ல அமைந்துள்ளது. கோவிலின் முன்பு திருப்பாற்கடலும், அதை பிற்காலத்தில் மதுரையை ஆண்ட மன்னர் முத்து நாயக்கர் புதுப்பித்த வரலாறு உன்டு பிற்கால பாண்டியன் மன்னரின் மதியூகி மந்திரி செல்வநம்பி பிறந்த ஊரும் இதுவேயாகும் கல்நாயகவடகிழக்கில் நடுமண்டபத்தோடு கூடிய தெப்பக்குளமும், தென்மேற்கில் ஐயனார் சிவகெங்கையும், வடக்கே திருப்பாற்கடலும் காவடிக்குளமும் உள்ளன நாற்புறமும் எண்ணற்ற பாசானக் கண்மாய்கள் இருக்கின்றனவாதலால் நல்ல நீர்வளம் நிலவளம் பெற்றது.
நெடுந்தூரம் வரை தெரியக்கூடிய திருக்கோபுரத்துடனும், அஷ்டாங்க தங்கக் கவசம் பொருத்திய விமானத்துடனும் திருக்கோவில் திகழ்கின்றது. இதன் கிழமேல் நீளம் 472 அடி,தென்வடல் 270 அடி, கோயிலின் தலைவாசலில் இராஜகோபுரம் 85 அடி உயரமாயிருக்கிறது. இதன் அடிவாரம் கிழமேல் 40 அடி . தென்வடல் 50 அடி,திருவாசல் 10 அடி, கோயிலின் முதன்மையான பகுதி அட்டாங்க விமானமே ! இது 96 அடி உயரமுள்ளது. இதனுச்சியிலுள்ள தங்கக் கலசம் 5 அடி உயரமும் 66 அடி சுற்றளவும் உள்ளது இந்த விமானத்தின் புதுமை என்னவெனில், இதன் நிழல் எப்போழுதிலும் தரையில் விழாது. இவ்வாறு தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயக் கோபுரம் அமைந்திருக்கிறது. மூலைக்கு இரண்டாக நான்கு மூலைகளிலும் எட்டு விமானங்கள் அமைந்திருத்தலினாலே இது அட்டாங்க விமானம் என்று பெயர் பெற்றது. மேல்தளத்தில் எட்டுத் திசைகளிலும் திசைக்கொன்றாக எட்டு விமானங்கள் இருப்பது காணலாம். எட்டு விமானங்களும் திருமால் மந்திரமாகிய எட்டெழுத்துப் போலும், நடுவிலே அமைந்த உச்சி பிரணவம் போலும் அமைந்துள்ளன. இந்த விமானம் ஒன்றின்மேல் ஒன்றாக 3 தளங்களை உடையது.
மேல்தளம் 'பரமபதம் 'என்னும் பெயர் பெறும். இதுவே வைகுண்டம்.இங்கு எழுந்தருளியிருப்பது பரமபத நாதன். இருபுறமும் ஸ்ரீ தேவி பூதேவிகள் இருக்கின்றனர். இருந்த திருக்கோலம் பெருமான் இருப்பது, மூன்று புறமும் சுவற்றில் சித்திரங்கள் தீட்டப்பெற்றுள்ளன, அவை நித்திய சூரிகள், முத்தியடைந்தவர் கள். ஆழ்வாராதியர். தேவர் . முனிவர்கள். திருப்பாற்கடல் திருமணிமுக்தா நதி, தசாவதாரம் என்பன. முன் வாசலின் மேலே சித்திரத்தால், இவ்வூரில் உடல் நீப்பவர் அடையும்பேறு விளக்கப் பெற்றுள்வது.முக்தியடைந்த ஆன்மாவை தேவர்கள் விமானத்தில் அழைத்துச் செல்வர். விரஜா நதியில் மூழ்கியவுடன் சூட்சும ரூபம் நீங்கப்பெற்று, நித்திய சூரிகளாக மாறி, பரமபத நாதனைப்போலே சங்குசக்ரதாரிகளாக மாறுகின்றனர், என்பதே ஐதீகமாகும்.
















































கருத்துகள்