மகாத்மாவின் படைப்புகள் வருங்கால சந்ததியினரை நீதி, நேர்மையுடன் செயல்படத் தூண்டும்


மகாத்மா காந்தியின் தூய்மைக்கொள்கை தீண்டாமை ஒழிப்பை அடிப்படையாக கொண்டது

மகாத்மாவின் படைப்புகள் வருங்கால சந்ததியினரை நீதி, நேர்மையுடன் செயல்படத் தூண்டும்

சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தவும் இந்தியாவை மரியாதையும், மதிப்பும் மிக்க நாடாக உயர்த்தவும் நம்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும் காந்திய வழியில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நிகர்நிலை பல்கலைக்கழகமான காந்திகிராம் ஊரக நிறுவனத்தின் சமூக அறிவியல் பிரிவின் தலைவரும், காந்திய படிப்புகளுக்கான மையத்தின் பேராசிரியருமான திரு எம் வில்லியம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை ஆகியவை இணைந்து ‘இருவார கால தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் தியாகிகள் தினம்' என்ற தலைப்பில் நடத்திய இணையதள கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

ஒரு நாடு சிறப்பானதாகக் கருதப்படுவதற்கு சில அலகுகள் உள்ளன என்றும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மட்டுமே இந்த நிலையை வழங்க முடியாது என்றும் அவர் கூறினார். சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை மட்டுமே இளைஞர்கள் சார்ந்து இருக்கக் கூடாது, மாறாக ஆழமாகப் படித்து செயல்வீரர்களாக காந்தியின் குறிக்கோள்களை பின்பற்றி  அவர்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மகாத்மா காந்தி சுகாதாரத்திற்கும் உணவு பழக்க வழக்கங்களுக்கும் முக்கியத்துவத்தை வழங்கியதோடு, எண்ணிலடங்கா மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த சமயத்தில் அங்கு பரவிய பிளேக் நோயைக் கண்டு அஞ்சாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணிந்து அவர் உதவிகள் செய்தார். நம் மனது தூய்மையாக இருப்பின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என்று மகாத்மா காந்தி நம்பியதாக பேராசிரியர் தெரிவித்தார். அந்தப் பகுதியில் நிலவிய மோசமான சுகாதார சூழ்நிலையே பெருந்தொற்றின் பரவலுக்குக் காரணம் என்பதை அவர் உணர்ந்தார். இதனைக் கருத்தில் கொண்டு சுகாதாரம், தனிநபர் சுகாதாரம், பொது துப்புரவு, தூய்மை, மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் போன்ற தலைப்புகளில் 34 கட்டுரைகளை மகாத்மா எழுதியதை பேராசிரியர் வில்லியம் பாஸ்கரன் நினைவு கூர்ந்தார்.

சுகாதாரமான வாழ்க்கை முறையை மகாத்மா காந்தி தொடர்ந்து வலியுறுத்தியதையும், புனிதத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு நிலவிய சுகாதாரமற்ற நிலையை கண்டு மிகுந்த மனவேதனை அடைந்ததையும் அவர் எடுத்துரைத்தார். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு,  சுதந்திர இந்தியாவில், அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான தூய்மையான மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவதையே மகாத்மா நோக்கமாகக் கொண்டிருந்தார். ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த மகாத்மா, அவர் சென்ற இடங்களிலெல்லாம் தன்னார்வ தொண்டர்களை உருவாக்கி பொது நலனிற்காக இணைந்து செயல்படும் வகையில் அவர்களுக்கு ஊக்கமளித்தார்.

புதுதில்லியின் ராஜ்காட்டில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநரான திரு ஏ. அண்ணாமலை பேசுகையில், மகாத்மா காந்தி துப்புரவு பணிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கி, வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் தமது கழிவறைகளோடு, பொது கழிவறைகளையும் சுத்தம் செய்து தமது செயல்களின் வாயிலாகவும் உண்மையான முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டார். அன்றைய காலகட்டத்தில் அனைத்து பொருட்களும் மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப்பட்டதால் கழிவுகள் இல்லாத நிலை இருந்தது. மேலும் மறுசுழற்சிமுறை நமது பொருளாதாரத்தில் மிகப்பெரும் பங்கை ஆற்றியது என்று அவர் நினைவு கூர்ந்தார். அதற்கு நேர் மாறாக இன்று ஏராளமான கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகின்றது. கழிவுகளை உருவாக்காத வாழ்க்கை முறையை நாம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறிய திரு அண்ணாமலை, மகாத்மா காந்தி வேப்பங்குச்சியில் பல் துலக்கியதாகவும் குச்சியின் இரு முனைகளும் தேய்ந்த பிறகு அதனை அடுப்பை மூட்டுவதற்கான எரி வாயுவாகவும், அதைத்தொடர்ந்து அதன் சாம்பலை தாவரங்களுக்கு உரமாகவும் அவர் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக அறிமுக உரை நிகழ்த்திய பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு மா. அண்ணாதுரை, தூய்மை குறித்த மகாத்மா காந்தியின் எண்ணங்கள் நமது சமூகத்திலிருந்து தீண்டாமையை ஒழிக்கும் காரணியாக இருந்தது என்று கூறினார். ஒரு பிரிவு மக்கள், இதர பிரிவினரின் தூய்மை மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டதை மகாத்மா காந்தி வன்மையாக எதிர்த்தார். தமது வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்ததோடு கடைசி மூச்சு வரை அகிம்சையை பின்பற்றிய அவரது இந்த நடவடிக்கைகள் உலகளவில் ஏராளமான மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இணை இயக்குநர் திரு ஜெ. காமராஜ் வரவேற்பு உரையையும், அதிகாரி செல்வி ஆர் வித்யா நன்றி உரையையும் வழங்கினார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்