தகவலைத் தெரிந்து கொள்வதைவிட நடத்தை மாற்றமே முக்கியம் --கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா

தகவலைத் தெரிந்து கொள்வதைவிட நடத்தை மாற்றமே முக்கியம் --கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கராவலியுறுத்தல்

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொதுமக்கள் எளிதில் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்கின்றனர்.  சமூக ஊடகங்களும் தகவல்களை எளிதில் பரப்புகின்றன.  கொரோனாவைப் பற்றி தகவல் தெரியாத ஒரு நபர்கூட இருக்க முடியாது.  தகவல்களைத் தெரிவிப்பது, தகவலைத் தெரிந்து கொள்வது என்பது மாற்றத்திற்கான முதல் படிதான்.  மக்களிடம் நடத்தை மாற்றம் ஏற்படுவதே தேவையான கடைசி படி ஆகும்.  முகக் கவசத்தை மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொள்வதால் எந்த நன்மையும் கிடையாது.  எனவே சமூகப் பணியாளர்கள் மற்றும் தொடர்பியல் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் மக்களிடம் நடத்தை மாற்றத்தை உருவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று கடலூர் கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா வலியுறுத்தினார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு களஅலுவலகம், கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் ஆகியன இணைந்து இன்று குள்ளஞ்சாவடியில் நடத்திய தூய்மை இந்தியா இயக்க விழிப்புணர்வு முகாமில் சிறப்புரை ஆற்றிய போது ராஜ கோபால் சுங்கரா இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு வழுதலம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் திருமிகு கலைச்செல்வி இராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் திரு க.சதீஷ்குமார் துவக்கவுரை ஆற்றினார்.  கழிவறை இல்லாத வீடே இருக்கக் கூடாது என்ற நிலையை உருவாக்க முயன்று வருகிறோம்.  பொதுவெளியில் மலம், சிறுநீர் கழிப்பவர்களை மற்றவர்கள் தட்டிக்கேட்டு கண்டிக்கும் காலம் உருவாக வேண்டும்.  குப்பைகளை தெருவில் கொட்டக் கூடாது என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.  எனது கிராமம் தூய்மையான கிராமம் என்று பெருமையுடன் ஒவ்வொருவரும் கூறக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்று சதீஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மா.அகிலா கருத்துரை ஆற்றினார்.  தூய்மையான இந்தியாவை உருவாக்க தொடங்கப்பட்ட திட்டம் ஒரு இயக்கமாக வளர்ந்து உள்ளது.  தூய்மையின் அடையாளமாக மகாத்மா காந்தி திகழ்கின்றார்.  கை கழுவும் பழக்கம் குறித்து காலம் காலமாக சுகாதாரத் துறையினர் கூறி வருகின்றனர்.  ஆனால் இன்று கொரோனாதான் இதைக் கட்டாயப் பழக்கமாக மாற்றி உள்ளது. குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இதுவரை 2246 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளனர் என டாக்டர் அகிலா தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்த மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் 2014 அக்டோபர் 2ஆம் தேதி முதல் இதுவரை நாடு முழுவதும் 10,75,03,000 கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளன என்றும் 6,03,138 கிராமங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் தயக்கம் இல்லாமல் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.

குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்.ரேவதி தூய்மைதான் ஆரோக்கியத்தின் அடிப்படை என்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் பல்வேறு நோய்களை தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  வழுதலம்பட்டு ஊராட்சியின் தூய்மை காவலர்கள் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர். விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. தொடர்ந்து புதுச்சேரி ராஜ்முகில் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

முன்னதாக குறிஞ்சிப்பாடி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமிகு கு.சாய்ராபானு வரவேற்புரை ஆற்றினார்.  நிறைவில் களவிளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

 நிகழ்ச்சியில் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறைப்படி கடைபிடிக்கப்பட்டன.  குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்த்து.

வழுதலம்பட்டு ஊராட்சியின் தூய்மைக் காவலர்கள் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டனர்.

ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கடலூர் கூடுதல் ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா பரிசுகளை  வழங்கினார்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்