பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பேருக்கு 278 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் இலவசமாக ஒதுக்கீடு

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பேருக்கு 278 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் இலவசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன
நாடாளுமன்ற மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர்கள் திருமிகு சாத்வி நிரஞ்சன் ஜோதி மற்றும் திரு அஷ்வினி குமார் சவுபே, கீழ்க்காணும் தகவல்களை அளித்தனர்:

2021 மே முதல் நவம்பர் வரையிலான ஏழு மாத காலக் கட்டத்தில் விநியோகிப்பதற்காக 278 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பேருக்கு இவை இலவசமாக வழங்கப்படும்.

இதேபோன்று, 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாத கால கட்டத்திற்கு, சுமார் 80 கோடிப் பயனாளிகளுக்கு 322 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மத்திய தொகுப்பிலிருந்து ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று வருடங்களில் நாடு முழுவதும் 19,410 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்  1955-ன் கீழ், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் விதிகளை மீறுவது சட்டப்பூர்வக் குற்றமாகும்.

பிரத்யேகமாக அரைக்கப்பட்ட அரிசியின் கொள்முதல் வேகமாக நடைபெற்று வருகிறது. 2021 ஜூலை 20 வரை 128.53 லட்சம் மெட்ரிக் டன் பிரத்தியேகமாக அரைக்கப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்துள்ளது. முந்தைய வருடம் செய்யப்பட்ட கொள்முதல் 107.79 லட்சம் மெட்ரிக் டன்னாகும்.

அரிசி கொள்முதலுக்காக ஆங்காங்கே சேமிப்பு மையங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு, விடுமுறை நாட்களிலும் பணியாளர்களைப் பணியில் அமர்த்தி, அரிசி ஆலை உரிமையாளர்களை ஒன்றிணைத்து, சரக்குகளைத் துரிதமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ், 2021 ஜூலை 14 வரை சுமார் 400.703 லட்சம் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்று  வருடங்கள் ஆன 2020-21 மற்றும் 2021-22-ல் பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் மொத்தம் 600.814 லட்சம் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2021 ஜூலை 1 நிலவரப்படி 603.56 லட்சம் டன்கள் கோதுமையும் 296.89 லட்சம் டன்கள் அரிசியும் மத்திய தொகுப்பில் உள்ளன. மொத்தம் 900.45 லட்சம் டன்கள் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன.

நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் ஆணையங்களால் கடந்த மூன்று வருடங்களில் 3.20 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 படி, நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக மூன்று அடுக்கு நீதி வழங்கும் செயல்முறை நிறுவப்பட்டுள்ளது. மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் ஆணையங்கள் செயல்படுகின்றன.

நாடு தழுவிய பிரச்சாரங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா