59-வது தேசிய பாதுகாப்பு கல்லூரி பட்டதாரிகளிடையே மத்திய அமைச்சர் உரை

பாதுகாப்பு அமைச்சகம் 59-வது தேசிய பாதுகாப்பு கல்லூரி பட்டதாரிகளிடையே மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரை


நாட்டின் நலனை பாதுகாப்பதற்காக, ஆயுதப்படைகள் இடையே எதிர்கால ராணுவ உத்திகள் மற்றும் நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான ஒருங்கிணைப்புக்கு  பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். புது தில்லியில் இன்று 59-வது தேசிய பாதுகாப்பு கல்லூரி பாடப்பிரிவு பட்டதாரிகளிடையே‌ (2019 பிரிவு) அவர் உரையாற்றினார்.


எல்லைப் பிரச்சினைகள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளில் அரசின் துணிச்சலான அணுகுமுறை, அண்மைக்காலங்களில் இந்தியாவை வலிமைப்படுத்தி இருப்பதாகவும், தற்போது இந்தியாவிற்கு மிகப் பெரும் சர்வதேச பங்களிப்பும் பொறுப்பும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்பதை மீண்டும் வலியுறுத்திய திரு ராஜ்நாத் சிங், அதேவேளையில், அதன் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களுக்கு தக்க பதிலடியை இந்தியா தரும் என்றும் எச்சரித்தார். “உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இனி ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது. பாலாகோட் மற்றும் கல்வானில் நமது செயல்பாடுகள், தெளிவான செய்திகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது”, என்றார் அவர்.


வன்முறையின் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும்,  உலகம் தற்போது கண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படும் புரிதல், பொறுப்புள்ள நாடுகளிடையே தற்போது பரவலாக ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார். தீவிரவாதத்திற்கு எதிராக பொதுவான புரிதலை நட்பு நாடுகளிடையே ஏற்படுத்துவதிலும், இந்தப் பிரச்சனைக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதிலும் தேசிய பாதுகாப்புக் கல்லூரி முக்கிய பங்கு வகிக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.


ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திரு ராஜ்நாத் சிங், அங்கு ஏற்படும் நிகழ்வுகள் தற்போதைய காலத்தின் உண்மை நிலையை எடுத்துரைப்பதாகக் குறிப்பிட்டார். “வளர்ந்துவரும் புவிசார் அரசியல் குறித்த ஒரே நிச்சயத்தன்மை, அதன் நிச்சயமற்ற தன்மை. நாடுகளின் எல்லைகளில் இப்போது இருப்பது போல அடிக்கடி மாற்றங்கள் ஏற்படாது. எனினும் வேகமாக மாறி வரும் நாடுகளின் கட்டமைப்பு மற்றும் வெளிப்புற சக்திகள் அதன் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவை தெளிவாகத் தெரிகிறது”, என்று அமைச்சர் கூறினார். 


ஆப்கானிஸ்தானின் சூழலிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதன் அவசியத்தையும் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்