சென்னை ஐஐடி-ல் இரண்டு டிப்ளோமா படிப்புகள் அறிமுகம்

மாணவர்கள், பணியிலிருப்பவர்கள், வேலை தேடுபவர்களுக்காக ப்ரொக்ராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில், சென்னை ஐஐடி-ல் இரண்டு டிப்ளோமா படிப்புகள் அறிமுகம்


எந்தத் துறைக் கல்வி கற்றவர்களுக்கும் நிரலாக்க மற்றும் தரவு அறிவியலில் வேலை வாய்ப்பை உருவாக்க இது ஒரு அற்புதமான வாய்ப்பு.

எட்டு மாதங்களில் ஐஐடி மெட்ராஸின் ஒரு டிப்ளோமா படிப்பை முடிக்க முடியும்


குறைந்தபட்சம் இரண்டு வருட இளங்கலைப் பட்டப் படிப்பை எந்த முறையிலும் கற்ற எவரும் இந்த டிப்ளோமா வகுப்பில் சேரலாம்.

இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தத் துறையைச் சேர்ந்திருந்தாலும் இவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.


சென்னை, அக்டோபர் 4, 2021: Indian Institute of Technology Madras, ஐஐடி மெட்ராஸ், ப்ரோக்ராமிங் மற்றும் டேட்டா சயன்ஸில் இரண்டு டிப்ளமோ படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. மிகச் சிறப்பான இந்த டிப்ளமோ படிப்புகள், இந்தத் துறையில் முன்னணி நிபுணர்களால் கவனமாக வடிவமைக்கப்பட்டது.  ஐஐடி மெட்ராஸ் வழங்கும்  அதிகாரப்பூர்வ டிப்ளோமாக்கள் இவை மட்டுமே.எந்தத் துறையைச் சேர்ந்தவர்களானாலும் அவர்கள், தேவையான அடிப்படை அறிவைப் பெறவும் அதை விரிவுபடுத்தவும் திறன் மேம்படுத்திக்கொள்ளவும் இந்தத் திட்டங்கள் வழி வகுக்கின்றன. இதில் சேர, பொறியியல் அல்லது கணினி அறிவியல் பின்னணி தேவையில்லை. மாணவர்கள், வேலை செய்யும் தொழில் வல்லுநர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த டிப்ளோமா படிப்பில் சேர்வதற்கான போர்ட்டல் இன்று (4 அக்டோபர் 2021), அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கௌன்சில்(ஏ ஐ சி டி ஈ) தலைவரான பேராசியர் அனில் சஹஸ்ரபுத்தே அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, ஐ ஐ டி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரிய பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் இன்ஃபோசிஸ் லிமிடெடின் மூத்த துணைத் தலைவர் திரு திருமலா ஆரோஹி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

டிப்ளமோ நுழைவுத் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கக் கடைசி தேதி 15 நவம்பர் 2021. விருப்பமுள்ளவர்கள் https://diploma.iitm.ac.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான நுழைவுத் தகுதித் தேர்வு, டிசம்பர் 12, 2021 அன்று நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விரும்பும் நகரத்தின் தேர்வு  மையத்தில் நேரில் வந்து தேர்வெழுத வேண்டும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் டிப்ளமோ படிப்பில் சேரத் தகுதி பெறுவர்.

தொடக்க விழாவில் உரையாற்றிய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கௌன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே, “உலகப் பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய  தரவு அறிவியல் மற்றும் நிரலாக்கத்தில் திறமையான மனிதவளம் இந்தியாவிலிருந்து உருவாவது மிகவும் அவசியம். ஐஐடி மெட்ராஸ் தொழில்துறையின் தேவைக்கு ஏற்ற பொருத்தமான திட்டங்களை அறிமுகப்படுத்துவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.

மேலும் உரையாற்றிய பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே, “கல்வி என்பது தொடர்ச்சியான கற்றல் செயல்முறையாகும். இன்றைய சூழலில், பணியிடத்தில் போட்டித்தன்மையுடன் இருக்க மாணவர்கள் மற்றும் பணியிலிருக்கும் வல்லுநர்கள் தொடர்ந்து தங்கள் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.  இந்த டிப்ளோமாக்கள் நிரலாக்க அல்லது தரவு அறிவியலில் வேலை வாய்ப்பை உருவாக்க்கிக் கொள்வதில் ஆர்வமுள்ள பலதரப்பட்ட மாணவர்களைச் சென்றடையும் என்று நான் நம்புகிறேன்.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு மாணவர், நிரலாக்க அல்லது தரவு அறிவியலில் டிப்ளோமா பெற எட்டு பாடத் திட்டங்களில் கற்றுத் தேறவேண்டும்.  ஒரு டிப்ளமோவை எட்டு மாதங்களுக்குள் முடிக்க முடியும். இந்தப் படிப்பு ஆன்லைன் முறையில் இருக்கும் என்பதால், வேலைக்குச் செல்வோருக்கும் மாணவர்களுக்கும் வசதியான நேரத்தில் கற்க உதவும்.

இந்த டிப்ளோமாக்கள் மூலமாக,  மிக உயர்ந்த தரமான கல்வி மற்றும் பயிற்சியை மிகப்பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்குக் கொண்டு செல்வதை  நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐஐடி மெட்ராஸ். இந்த இலக்கை மனதில் கொண்டு, இந்தத் திட்டம், பொருளாதாரச் சலுகைகளையும் வழங்குகிறது.  ஒவ்வொரு பருவத்திலும் பதிவு செய்யப்பட்ட படிப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் அமைகிறது. மேலும், ஐஐடி மெட்ராஸ், மாணவர்களின் சமூகப் பொருளாதார பின்னணியின் அடிப்படையில் 75% வரை பாடக் கட்டணத் தள்ளுபடியையும் வழங்குகிறது.

நிகழ்ச்சியில் பேசிய, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் கல்விப் பயிற்சி மற்றும் மதிப்பீட்டுத் துறைத் தலைவருமான  திரு. திருமலா ஆரோஹி, இந்த நிகழ்ச்சியில் பேசுகையில்,  “ஐஐடி மெட்ராஸ் நிரலாக்க மற்றும் தரவு அறிவியலில் டிப்ளமோ படிப்புகளைத் தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தொழில்நுட்பம் எங்கும் கோலோச்சும் ஒரு உலகில் நாம் செழித்து வளர்கிறோம். வாய்ப்புகளின் இந்தக் களஞ்சியத்தில் தொடர்ந்து இயங்க,  மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பதைத் தொடர வேண்டியது அவசியம். எனவே,  முதன்மையான கல்வி நிறுவனமான ஐஐடி மெட்ராஸ், கல்லூரி மாணவர்கள் மற்றும் பணியிலிருப்பவர்களுக்கு, நிரலாக்க மற்றும் தரவு அறிவியலில் டிப்ளோமாக்களை வழங்குவது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. இந்தப் பாடத் திட்டம், நன்கு கட்டமைக்கப்பட்ட, நேரடி வகுப்புகள், செயல்பாடுகள், பயிற்சிகள் ஆகியவற்றை நமக்கான வேகத்தில் நேரத்தில் கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நெகிழ்வுத் தன்மையும் மலிவான கட்டணமும், ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அவர்களின் திறன்களை மேம்படுத்துவதைத் துரிதப்படுத்த உதவுகிறது. பல்வேறு துறைகளில் எண்ணற்ற வாய்ப்புகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் இது உதவும். “என்றார்.

வேலை செய்யும் தொழில் வல்லுநர்களுக்கு விடுப்பு  எடுக்காமல் தங்களை மேம்படுத்திக்கொள்ள இந்த டிப்ளோமாக்கள் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன. தங்கள் ஊழியர்களின் திறனை மேம்படுத்த விரும்பும் நிறுவனத் தலைவர்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வகுப்பறைக் கல்விக்கு  இணையான விரிவான கற்பித்தல் முறைகள் மூலம் இவை கற்பிக்கப்படுகின்றன.  விரிவுரை வீடியோக்கள், விரிவுரை அடிப்படையிலான செயல்பாட்டுக் கேள்விகள், பயிற்சிப் பணிகள், தரம் நிர்ணையிக்கும் பயிற்சிப் பணிகள்,  சிக்கல் தீர்க்கும் திறன்களை வலுப்படுத்தும் சிறு பயிற்சிகள் ஆகியவை இக்கல்வித் திட்டத்தில் அடங்கும்.

பாடத்திட்ட பயிற்றுனர்களுடனான நேரடி அமர்வுகளின் போது, ஒவ்வொரு பாடத்திற்கும் மாணவர்களின்  கேள்விகளுக்குப் பதில்கள் அளிக்கப்படுகின்றன. கல்லூரிக்குச் சென்று கற்பதற்கு இணையாக, நேரடி வினாடிவினா நிகழ்ச்சிகள், பருவ இறுதித் தேர்வுகள் என அனைத்தையும் வழங்க ஐ ஐ டி மெட்ராஸ் திட்டமிட்டுள்ளது. வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களால் விரும்பப்படும் தகுதிகளை இந்தக் கலவை வழங்குகிறது.

நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, “நிரல் மற்றும் தரவு அறிவியலில் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள், பணியிலிருக்கும்  தொழில் வல்லுநர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இந்த திட்டத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆன்லைன் மற்றும் நேரடிக் கற்றலின் கலவையான இது, கல்வி கற்கும் சூழலில் தொய்வின்றி, அதே நேரத்தில் மாணவர்களுக்கு வசதியான நேரத்தில் கற்கவும் உதவுகிறது. ஆன்லைன் கல்வியில் எங்களுக்கு இருக்கும் சிறந்த அனுபவத்தின் உதவியால், வளமான முழு கல்விச் சூழலை உருவாக்க முடியும்.” என்று கூறினார்.

உயர்தரப் பாடத் திட்டம்,  தொடர்ச்சியான வழிகாட்டுதல், கடுமையான பயிற்சிகள், மாணவர்களிடையேயான செயல்பாடு, உடனடிப் பின்னூட்டம் ஆகியவற்றின் கலவையுடன், ஐஐடி மெட்ராஸின் இந்த இரண்டு அதிகாரப்பூர்வ டிப்ளோமாக்கள், எந்தத் துறையைச் சேர்ந்த மாணவராக இருந்தாலும், நிரலாக்கம் மற்றும் தரவு அறிவியல் துறையில் அடிப்படை அறிவையும் தொழில் துறைக்குத் தேவையான நவீன திறன்களையும் பெற உதவுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்