பத்ம விருதுகளை பெரும் அனைவருக்கும் பிரதமர் பாராட்டு
பத்ம விருதுகளை பெறவுள்ள அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
“பத்ம விருதுகளைப் பெறவுள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களது செயல்பாடுகளை ஒட்டுமொத்த நாடும் போற்றுவதோடு, சமுதாயத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பால் நாம் அனைவரும் பெருமிதம் அடைகிறோம்“ என்று தெரிவித்துள்ளார். பத்ம விருதுகளால் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர்கள் * சதிராட்டத்தில் சாதனை படைத்த முத்து கண்ணம்மாள் *தூய்மையே வெல்லும் என உழைக்கும் தாமோதரன்
தங்களது துறைகளில் அரிய சாதனைகளை செய்திருந்தாலும் அதிகம் அறியப்படாத இரு தமிழர்களை பத்மஸ்ரீ விருதுக்கு மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
பரதநாட்டியத்தின் முன்னோடியான சதிராட்டம் என்னும் நடனத்தில் கைதேர்ந்த விராலிமலையைச் சேர்ந்த முத்து கண்ணாம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக 1,000-க்கும் மேற்பட்ட நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 84 வயதான இவர், இளம் கலைஞர்களுக்கு இன்னமும் பயிற்சி அளிக்கிறார்.
உயிரோடிருக்கும் ஒரே மற்றும் கடைசி தேவதாசியான முத்து கண்ணாம்மாள், ஏழாம் தலைமுறை சதிர் கலைஞர் ஆவார். இக்கலையைக் காக்க பல்வேறு முயற்சிகளை அவர் எடுத்து வருகிறார். அவரது சேவையை பாராட்டும் விதமாக கலைப் பள்ளியில் அவரது சிலை ஒன்றை மூத்த சிற்பி ஜி சந்திரசேகரன் நிறுவியுள்ளார்.
தூய்மை பணிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள 57 வயதான எஸ் தாமோதரன், நான்கு மாநிலங்களில் 6 லட்சம் குறைந்த விலையிலான குட்டைக் கழிவறை அமைப்புகளைக் கட்டமைத்துள்ளார்.
இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் தண்ணீர், கழிவு நீர் மேலாண்மை மற்றும் சுகாதாரத்திற்கான அணுகலுக்கு அவரது முயற்சிகள் வழிவகுத்தன.
இந்தியாவிலேயே முதல்முறையாக, வசதிகளற்ற மக்களுக்காக சமூக மேலாண்மை முறையில் நடத்தப்படும் கட்டணக் கழிவறை அமைப்புகளை கிராமாலயா எனும் தனது முன்முயற்சி மூலம் அறிமுகப்படுத்தினார்.
மகளிர் சுய உதவிக்குழுக்களை நிறுவி கழிவறைகள் தூய்மையாக பேணப்படுவதை உறுதி செய்தார்.2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை இந்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இவை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
விருது பெற்றவர்கள் பெயர் பட்டியல்
கருத்துகள்