உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி ஒவ்வொரு குழந்தையின் உரிமை: குடியரசுத் துணைத் தலைவர்
அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் கொள்கைகளைத் தனியார் பள்ளிகள் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆதரவற்றோர் மற்றும் நலிந்தோருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
பெங்களூருவில் உள்ள கிரீன்வுட் உயர்நிலை சர்வதேசப் பள்ளியில் கலை, நாடகம் மற்றும் இசைக்கான நவீன உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவற்றை இன்று திறந்து வைத்த பிறகு கூட்டத்தினரிடையே உரையாற்றிய திரு நாயுடு, இளம் வயதிலேயே சேவை உணர்வை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"பள்ளிகள் தங்கள் பாடத்திட்டத்தில் சமூக சேவையை சேர்க்க வேண்டும், இதனால் சமுதாயத்திற்குத் திரும்பக் கொடுக்கும் மனப்பான்மையை குழந்தைகளிடம் இளம் வயதிலேயே வளர்க்க வேண்டும்," என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்
படிப்பு, விளையாட்டு, இணைப் பாடத்திட்டம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு கல்வி நிறுவனங்கள் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். இத்தகைய அணுகுமுறை மாணவர்களின் ஒட்டுமொத்த முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுத்து அவர்களை தன்னம்பிக்கை கொண்ட நபர்களாக மாற்றும் என்றார் அவர்.
தோட்டம் அமைத்தல், மரம் வளர்ப்பு, நீர் சேமிப்பு போன்ற நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார். குழந்தைகளை இது இயற்கையுடன் நெருக்கமாக்கும், மேலும், குறைந்த அளவில் பயன்பாடு, மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றை வலியுறுத்துவதன் மூலம் நீர் பாதுகாப்பின் அவசியத்தை மேலும் எடுத்துரைக்கும் என்றார்.
பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட செயல்களுக்கும் தேசியக் கல்விக் கொள்கை-2020 முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு நாயுடு, விளையாட்டு, இணைப் பாடத்திட்டச் செயல்பாடுகளுக்கும் மற்றும் மாணவர்களிடையே உயர்ந்த நெறிமுறை வளர்ப்பதற்கும் அனைத்து மாநிலங்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
'நன்னெறிகளின் சிதைவு' குறித்து தமது கவலையை வெளிப்படுத்திய குடியரசுத் துணைத் தலைவர், நமது கலாச்சார விழுமியங்களை உள்வாங்கி, இந்தியாவின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைப் பாதுகாக்க பாடுபடுமாறு மாணவர்களை வலியுறுத்தினார். "மதிப்புகளை நாம் மீட்டெடுக்க வேண்டும், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும், நமது கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டும், இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார்
ஒரு காலத்தில் இந்தியா ‘உலகத்தின் குரு’ என்று அழைக்கப்பட்டது என்று கூறிய திரு நாயுடு, நீடித்த காலனித்துவ ஆட்சி நமது புகழ்பெற்ற கடந்த காலத்தை மறக்கச் செய்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். "இந்தியா இன்று முன்னேறுகிறது, இது நமது வேர்களுக்குத் திரும்புவதற்கான நேரம்" என்று அவர் மேலும் கூறினார்.
தாய்மொழியை மேம்படுத்துதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றுக்கான தமது அறைகூவலை மீண்டும் வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால் தாய்மொழியைகே கற்பதற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார்.
நமது அன்றாட வாழ்வில் உடல் தகுதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த திரு நாயுடு, ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், பஞ்சாயத்து மற்றும் கிராமம் ஆகியவற்றை ஃபிட் இந்தியா இயக்கம் சென்றடைய வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
கலை வரம்பற்றது என்று குறிப்பிட்ட திரு நாயுடு, கலை நமது கற்பனைக்கு வடிவம் கொடுக்கிறது என்றும் எல்லையே இல்லாத ஒரு உலகளாவிய மொழியைப் பேசுகிறது என்றும் கூறினார். இந்தியாவின் தனித்துவமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நடன வடிவங்களைக் குறிப்பிடுகையில், பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி உள்ளிட்டவை தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் பழமையான கலை வடிவங்களில் சில என்று திரு நாயுடு குறிப்பிட்டார். மேலும், "இந்தியக் கலை, இசை மற்றும் நாடகம் உலகிற்கு அதன் மிகப்பெரிய கொடையாகும். நமது வளமான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த கலை வடிவங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்" என்று அவர் கூறினார்.
கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், கர்நாடக அமைச்சர் திரு முனிரத்னா, கிரீன்வுட் உயர்நிலைப் பள்ளியின் தலைவர் திரு பிஜாய் அகர்வால், முதல்வர் திரு அலோசியஸ் டி மெல்லோ, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
கருத்துகள்