தேசிய பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநாடு-2022-ஐ குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
தேசிய பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநாடு-2022-ஐ குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் திருவனந்தபுரத்தில் இன்று (26.05.2022) தொடங்கி வைத்தார். விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக இம்மாநாட்டிற்கு கேரள சட்டப்பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், நாட்டின் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், தேசிய பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநாடு நடைபெறுவது பொருத்தமானது என்று குறிப்பிட்டார். விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக பல்வேறு நினைவு நிகழ்ச்சிகளை ஒரு வருடத்திற்கு மேலாக நாம் நடத்தி வருகின்றோம்.
சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். அவர்களில் ராணி லட்சுமிபாய் குறிப்பிடத்தக்கவர் ஆவார். காந்திஜி தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களில் முதன்மையானவர் கஸ்தூரிபாய் என்று கூறினார். தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்ணாக கமலாதேவி சட்டோபாத்யாயாய விளங்கினார் என்று தெரிவித்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய மேடம் பிகாஜி காமா, கேப்டன் லட்சுமி ஷகல் உள்ளிட்டவர்களை அவர் நினைவு கூர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குறித்து உதாரணமாக கூறத் தொடங்கினால், பல்வேறு பெண்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. எனினும். அவர்களில் சிலரை மட்டுமே குறிப்பிட முடியும் என்று அவர் தெரிவித்தார். ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த துறைகளான அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் பெண்கள் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில், ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் ஈடுபட்டதாக அவர் கூறினார். சுகாதாரப் சேவைப் பணிகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எப்போதும் பெரும் பங்காற்றி வருகின்றனர். நோய்த் தொற்று காலத்தில் இம்மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் தன்னலமற்ற சேவையாற்றி உதாரணமாக திகழ்ந்தனர் என்று கூறினார்.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், அவர்களுக்கு கற்பிப்போம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அவர்களுக்கான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவித்தார். பெண்கள் வளர்ச்சியில் கேரளா பல ஆண்டுகளாக முதன்மை மாநிலமாக திகழ்கின்றன என்று அவர் கூறினார். இந்த மண்ணிலிருந்து தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஃபாத்திமா பீவி பொறுப்பு வகித்தார். ஜனநாயக சக்தி மூலம் நடைபெற்று வரும் இந்த தேசிய மாநாடு பெரும் வெற்றி பெறும் என்று தாம் நம்புவதாக கூறினார். இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த கேரள சட்டப்பேரவை மற்றும் அதன் தலைமைச் செயலகத்திற்கு குடியரசுத்தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
கருத்துகள்