ஜமைக்காவின் கவர்னர் ஜெனரல் அளித்த அரசு விருந்து நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்
ஜமைக்காவிற்கான எனது முதலாவது அரசுமுறை பயணத்தின் போது எனக்கும், எனது தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நமது தூதரக உறவுகளின் 60 ஆண்டுகளை குறிக்கும் இத்தருணத்தில் ஜமைக்காவிற்கு இந்திய குடியரசுத்தலைவர் ஒருவர், அரசு முறை பயணம் மேற்கொள்வதும் இதுவே முதன்முறையாகும்.
மாண்புமிகு கவர்னர் ஜெனரல் அவர்களே,
ஜமைக்காவிற்கு இந்தியாவிலும் எங்கள் மக்களிடமும் மிகவும் சிறப்பான இடம் உள்ளது. 1845 மே 10 அன்று 175 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 இந்தியர்களை ஏற்றிய கப்பல் ஜமைக்காவிற்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு வாழ்க்கையின் பலதரப்பினரான இந்தியர்கள் இந்த அழகிய நாட்டிற்கு வருகை தந்து இதனை தங்களின் தாயகமாக கொண்டுள்ளனர்.
மேன்மையானவர்களே !
ஜார்ஜ் ஹெட்லி, மைக்கேல் ஹோல்டிங், கிரிஸ் கெயில் போன்ற கிரிக்கெட் ஆளுமைகளின் பெயர்கள் இந்தியாவில் பல தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களால் வியக்கப்பட்டவை. ஏற்கனவே, நீங்கள் அறிந்திருப்பதுபோல், இந்தியர்கள் கிரிக்கெட் ஆர்வமுள்ளவர்கள். இதனால் புவியியல் ரீதியாக தூரத்தில் இருந்தாலும், நாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். இந்தியாவின் விளையாட்டு பிரியர்களால் மிகவும் அறியப்பட்டவர் மகத்தான உசேன் போல்ட்.
மேன்மையானவர்களே!
பல வகைகளில் இந்தியாவும் ஜமைக்காவும் இயற்கையான கூட்டாளிகள். வலுவான துடிப்புமிக்க ஜனநாயகங்கள் என்ற முறையில் நமது நாடுகள் நெறிமுறைகள் சார்ந்த சந்தை நடைமுறைகளை ஆதரிக்கின்றன. அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, நிலையான, பாதுகாப்பான, சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு ஆகியவற்றுக்கு நமது நாடுகள் மதிப்பளிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் இணைந்து பணியாற்ற நமது இளைஞர்களை நாம் ஒருங்கிணைத்து கொண்டு வரவேண்டும்.
மாண்புமிகு கவர்னர் ஜெனரல் அவர்களையும் அவரது துணைவியாரையும், ஜமைக்கா மக்களையும் நான் வாழ்த்துகிறேன். இந்தியா – ஜமைக்கா நட்புறவை நாம் வலுப்படுத்துவோம்.
நன்றி ! மேலும் ,
ஜமைக்கா நாட்டு பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரை
நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்றுவதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அரசியலமைப்புத் தலைவர் என்ற முறையில் ஜமைக்கா நாட்டின் துடிப்பான ஜனநாயக தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜமைக்கா நாட்டிற்கு பயணிப்பது, அதன் வாழும் கலாச்சாரத்தை அனுபவிப்பது, அந்நாட்டு மக்களை சந்திப்பது ஆகியவற்றை மிக ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தேன்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,
இந்தியர்களுக்கு ஜமைக்கா ஆதரவு அளித்திருப்பதுடன் அவர்களுக்கு கௌரவத்தையும் மரியாதையையும் வழங்கியுள்ளது. இதன் காரணமாக அரசியலில் மட்டுமல்லாமல் வர்த்தகம், இசை, விளையாட்டு, உடை மற்றும் உணவிலும் வளமான இந்தியத் தன்மையைக் காணமுடிகிறது.
இந்திய சமூகத்தினரும், கலாச்சார உறவுகள் மட்டுமே நமது இரு நாடுகளை இணைப்பதில்லை, ஜனநாயகத்தில் நமது நம்பிக்கை மற்றும் சுதந்திரம் ஆகியவையும் நம்மை இணைக்கின்றன. அனைத்து குடிமக்களும் சமமாகவே உருவாக்கப்பட்டார்கள் என்பது ஜமைக்கா நாட்டு அரசியலமைப்பின் மைய தூணாகும். எங்கள் முன்னோர்களும் இதே நம்பிக்கையை பகிர்ந்ததுடன், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிமனித சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார்கள். சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்ட நவீன நாட்டை அவர்கள் உருவாக்கினார்கள். அவ்வாறு உருவாக்கியபோது, 'வேறுபட்ட போதும், ஒரே மக்கள்' என்ற ஜமைக்காவின் கோஷங்களைப் போலவே ‘வேற்றுமையில் ஒற்றுமை' என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே,
இந்தியாவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக தம்மையே அர்ப்பணித்து, சமூக அவலங்களைக் களைந்தார். அரசியலமைப்பில் சமூக மேம்பாட்டிற்கான வசதிகளை அறிமுகப்படுத்தி, 'இந்திய அரசியலமைப்பின் சிற்பி’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். கிங்ஸ்டனில் நேற்று நான் திறந்துவைத்த சாலைக்கு டாக்டர் அம்பேத்கர் பெயர் சூட்டிய ஜமைக்கா நாட்டு அரசுக்கு எனது நன்றி.
கொவிட்-19 நெருக்கடியில் இருந்து உலகம் மீண்டு வரும் வேளையில் மாபெரும் பொருளாதாரங்களுள் மிக வேகமாக இந்தியா வளர்வதாகக் கணிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்தது முதல் பல்வேறு முறைகள் வேளாண்மை உற்பத்தியை நாங்கள் பெருக்கியுள்ளதுடன், உணவு தானியங்களின் நிகர ஏற்றுமதியாளராகவும் செயல்படுகிறோம். தரமான மருந்துகளையும், தடுப்பூசிகளையும் மலிவான விலைகளில் தயாரிப்பதால் ‘உலகின் மருந்தகமாக' இந்தியா அழைக்கப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் 150 ஜிகாவாட் அளவை இந்தியா கடந்திருப்பதுடன், 2030-ஆம் ஆண்டிற்குள் 450 ஜிகாவாட் திறன் என்ற இலக்கை எட்ட நிர்ணயித்துள்ளது. எங்களது தேசிய கல்வி கொள்கை 2020 இன் கீழ் புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்களை வெளிநாடுகளில் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஓர் இந்திய தொழில்நுட்ப கழகத்தை நிறுவ ஜமைக்கா விருப்பம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களே,
நமது தூதரக உறவின் 60-வது ஆண்டு நிறைவடைவதை நாம் கொண்டாடும் வேளையில், வளர்ந்து வரும் நமது கூட்டுமுயற்சி, அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பகிர்ந்து கொள்ளும் மாண்புகளிலிருந்து நாம் எழுச்சியும் ஆற்றலும் பெறுவோம்.
நன்றி! எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்