சென்னை விமான நிலையத்தில் முன்தடுப்பு கண்காணிப்பு பயிலரங்கு நடத்தப்பட்டது
ஊழியர்களிடையே கண்காணிப்புக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தென்மண்டலம் மற்றும் சென்னை விமான நிலைய ஊழியர்களுக்கு முன்தடுப்பு கண்காணிப்பு பயிலரங்கு இன்று நடத்தப்பட்டது. இந்தப் பயிலரங்கை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி திரு அமல் கார்க் தொடங்கி வைத்தார். தென்மண்டல நிர்வாக இயக்குநர் திரு ஆர் மாதவன், சென்னை விமான நிலைய இயக்குநர் டாக்டர் சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நல்ல ஆளுகைக்கான கண்காணிப்பு நிர்வாகம் என்பது குறித்து பொது மேலாளர் (கண்காணிப்பு) திரு அனுராக் சர்மா, உரையாற்றினார். முன்தடுப்பு கண்காணிப்பு கொள்முதலில் பாதிப்புகள், வழக்கு ஆய்வுகள் பற்றி கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் உரையாற்றினர். இந்த நிகழ்வில் 50-க்கும் அதிகமான அலுவலர்கள் பங்கேற்றதாக சென்னை விமான நிலைய மேலாளர் (சிசி) யு உதயசந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்தில் மிக நீளமான ஓவியம்
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் விதமாக சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில், 30அடி X 12 அடி நீளமுள்ள பிரமாண்ட ஓவியம் வரையப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய இயக்குநர் திரு சரத் குமார், விமான நிலையங்கள் ஆணையத்தின் பொது மேலாளர் (கண்காணிப்பு) திரு அனுராக் சர்மா ஆகியோர் முன்னிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைமைக் கண்காணிப்பு அலுவலர் திரு அமல் கார்க், ஐஆர்எஸ் இந்த ஓவியத்தை திறந்து வைத்தார்.
இந்தியா மற்றும் தமிழகத்தின் கலாச்சார செழுமையை சித்தரிக்கும் விதமாகவும், அதன் கடந்த கால பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாகவும் இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. சென்னை கே கே நகரில் உள்ள ஸ்ரீ அன்னை காமாட்சி இசை மற்றும் கவின் கலைக் கல்லூரி மாணவர்கள், அந்தக் கல்லுரியின் இயக்குநர் திரு எஸ் வெங்கடாசலபதி மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் சென்னை பிரிவு அதிகாரிகள் மேற்பார்வையில், 15 நாட்களில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் பேருந்து புறப்படும் பகுதியில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம், சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டுச் செல்லும் பயணிகளின் கண்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்துள்ளது.
கருத்துகள்