இந்தியன் வங்கியில் இரண்டு கோடியே 61 லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு பேருக்கு தண்டனை விதித்து கோயம்புத்தூர் குற்றப் புலனாய்வுத் துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
இந்தியன் வங்கியில் உயிரி உரங்கள் தயாரிப்பு நிறுவனமான சன் பயோ மெனியூர் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர்கள் சக்திவேல், உதயகுமார் மற்றும் வீரபாண்டி கிளை மேலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறை சிறப்பு நீதிபதி கோவிந்தராஜன் வழங்கிய தீர்ப்பில் தகவல்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ஆம் தேதி குற்றப்புலனாய்வுத் துறையின் பொருளாதார குற்றவியல் பிரிவு இந்த மோசடி வழக்கை பதிவு செய்த நிலையில் வங்கியின் வீரபாண்டி கிளை மேலாளர் பாலசுப்பிரமணியம், சன் பயோ மெனியூர் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர்கள் சக்திவேல், உதயகுமார் ஆகியோருடன் இணைந்து போலியான ஆவணங்களை முன்வைத்து நிறுவனத்திற்கு கடனை வழங்கியிருப்பதாகவும், படிப்படியாக வழங்க வேண்டிய கடன் தொகையை விதிகளை மீறி ஒட்டு மொத்தமாக வழங்கிய விதத்திலும், வங்கிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக பாலசுப்பிரமணியம் மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணை நடந்துவந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சன் பயோ மெனியூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமும், இயக்குனர்கள் சக்திவேல், உதயகுமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமும் வங்கிக்கிளை மேலாளர் பாலசுப்பிரமணியத்திற்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கோவிந்தராஜன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.


கருத்துகள்