வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் முகவர்களுக்கான கருத்தரங்கம்
வெளியுறவு அமைச்சகத்தின் புலம் பெயர்ந்தோர் பாதுகாவலர் பிரிவு சார்பில், “திரைகடல் ஓடியும் பாதுகாப்பாக திரவியம் தேடு” என்ற தலைப்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் முகவர்களுக்கான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடி முகவர்கள் மூலம் செல்லும் தொழிலாளர்களை பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய தாம்பரம் காவல் துறை ஆணையர் திரு எம் ரவி, அங்கீகரிக்கப்படாத உள்ளூர் முகவர்கள் ஆலோசனைப்படி, சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதை சுட்டிக்காட்டினார். ஒரு வேலைக்காக அழைத்துச் செல்லப்படும் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வேறு வேலையை செய்யுமாறு நிர்பந்தப்படுத்தப்படுவதையும், நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்தைவிட அதிகமாக வேலை வாங்குவதையும், எடுத்துக் காட்டிய அவர், தொழிலாளர்கள் இவ்வாறு துன்புறுத்தப்படுவதைத் தடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை வெளியிட வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் மூலம் அந்நிய செலாவணி ஈட்டப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் உதவுவதால், அவர்களது நலனைப் பாதுகாப்பது அனைவரின் கடமை என்று அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சகத்தின் புலம் பெயர்ந்தோருக்கான தலைமைப் பாதுகாவலர் திரு பிரம்மகுமார், போலி முகவர்களிடம் சிக்கும் தொழிலாளர்கள் இன்னலுக்கு ஆளாகி அவர்களது குடும்பமே சிதைந்து போவதாகத் தெரிவித்தார். அதனால் போலி முகவர்களை இனம் கண்டு, அவர்களை ஒழிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் முகவர்கள் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
புலம் பெயர்ந்த தமிழர் நல ஆணையர் திருமதி ஜெசிந்தா லாசரஸ், வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்வதற்கும் பிற வேலைகளை செய்வதற்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், அந்த எந்திரங்களை இயக்குவதற்கு, பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு முந்தைய புத்தாக்க பயிற்சி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதாக கூறினார்.
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு மேலாண் இயக்குநர் இயக்குநர் திரு சி என் மகேஸ்வரன், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர், ஏற்பாடு செய்யும் முகவர்கள், வேலையை அளிக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்து, தமது அலுவலகம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதனால் போலி முகவர்களை நம்பி ஏமாறுவது தவிர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னைக்கான மலேஷிய தூதர் திரு சரவணன் கார்த்திகேயன், மத்தி்ய அரசின் சென்னை மண்டல புலம் பெயர்ந்தோர் பாதுகாவலர் திரு வெங்கடாசலம் முருகன், சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு எஸ் கோவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்
கருத்துகள்