மே மாதம் 26 ஆம் தேதியன்று பிரதமர் ஐதராபாத் மற்றும் சென்னை பயணம்
பிரதமர் நரேந்திர மோடி வரும் வியாழக்கிழமை (மே-26 அன்று) ஐதராபாத் மற்றும் சென்னைக்கு பயணம் மேற்கொள்கிறார். ஐதராபாதில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) கல்வி நிறுவனத்தின் 20-ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பிற்பகல் 2 மணியளவில் பிரதமர் பங்கேற்கிறார். அதோடு முதுநிலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு-2022 விழாவில் சிறப்புரையாற்றுகிறார். பின்னர் மாலை 5:45 மணியளவில் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னையில் பிரதமர்:
கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஊக்கமளித்து மேம்படுத்துவதோடு, போக்குவரத்து இணைப்புகளை அதிகரிப்பதுடன், தமிழக மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் தமிழகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதோடு, பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும்.
சென்னையில் ரூ.29,000 கோடி மதிப்பிலான 5 திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இதில் 75 கி.மீ தொலைவுள்ள ரூ. 500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை-தேனி இடையேயான (அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம்) ரயில் தடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார். இந்தத் திட்டம் இந்தப் பகுதிகளில் உள்ள சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த வழிவகுக்கும். இதேபோன்று சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ரூ. 590 கோடி மதிப்பில் 3-வது ரயில்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இதன் மூலம் புறநகர் ரயில் சேவை அதிகரித்து, பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்.
சுமார் ரூ. 850 கோடி மற்றும் 910 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 115 கிமீ நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கிமீ நீளமுள்ள திருவள்ளூர்-பெங்களூரு பிரிவான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்கும்.
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ. 116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகள் இந்த நிகழ்ச்சியில் துவக்கிவைக்கப்படுகின்றன.
ரூ.28,500 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள 6 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதில் 262 கிலோமீட்டர் தூர பெங்களூரு சென்னை விரைவுச்சாலை ரூ. 14,870 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது. கர்நாடகா-ஆந்திரா-தமிழ்நாடு வழியாகச் செல்லும் இந்தச்சாலை பெங்களூருக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரத்தை 2 முதல் 3 மணி நேரம் குறைக்கும். சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் (என்எச்-4), 21 கி.மீ. தூர ஈரடுக்கு, நான்குவழி உயர்மட்டச்சாலை, ரூ.5850 கோடி செலவில் கட்டப்படும். இது சென்னைத் துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் 24 மணி நேரமும் சென்றுவர உதவும். நெரலூரு-தர்மபுரி பிரிவில் (என்எச்-844) 94 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம் பிரிவில் (என்எச்-227) 31 கி.மீ. இருவழிச்சாலை ஆகியவை முறையே ரூ.3870 கோடி மற்றும் ரூ.720 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இது அந்தந்தப் பகுதிகளில் தடையற்ற போக்குவரத்திற்கு பெரிதும் உதவும்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும். இந்தத் திட்டம் ரூ. 1800 கோடி செலவில் முடிக்கப்படும். இந்த ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் மூலம் பயணிகளுக்கான வசதி மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
ரூ.1400 கோடி மதிப்பில் சென்னையில் உருவாக்கப்படவுள்ள பன் மாதிரி போக்குவரத்துப் பூங்காவுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இது தடையற்ற சரக்குப்போக்குவரத்துக்கு வழிவகுப்பதுடன், மற்றும் பல்வேறு செயல்பாடுகளுக்கும் உதவும்.
ஐதராபாத்தில் பிரதமர்:
ஐதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) கல்வி நிறுவனத்தின் 20-ம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்கும் பிரதமர், 2022-ம் ஆண்டுக்கான முதுநிலைப் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றுவார். இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ஐஎஸ்பி) கல்வி நிறுவனம் 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயால் தொடங்கப்பட்டது. நாட்டின் முன்னணி தொழில்-வர்த்தகப் பள்ளிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை வழங்கும் அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் ஐஎஸ்பி ஒத்துழைத்து வருகிறது.
கருத்துகள்